courtesy:Smt.Dr.Saroja Ramanujam
அத்யாத்ம ராமாயணம் -ஆரண்ய காண்டம் - அத்தியாயம் 4
ராமன் பஞ்சவடியை அடைதலும் ஜடாயுவை சந்தித்தாலும் பின்னர் லக்ஷ்மணன் அமைத்த பர்ணசாலையில் ஆனந்தமாக வசித்தலும் கூறப்படுகிறது. ஒரு சமயம் ராமன் ஏகாந்தமாக அமர்ந்திருக்கையில் லக்ஷ்மணன் அவரருகே சென்று மிகப் பணிவுடன் மோக்ஷ சாதனத்திற்கு சுலபமானதும் நிச்சயமானதுமான மார்க்கத்தைக் கூரும்படி கேட்டான்.
அதற்கு ராமன் கூறியது,
"சரீரம் முதலான அநாத்ம வஸ்துக்களில் ஆத்மபுத்தியே மாயை எனப்படுகிறது . அந்த மாயையே இந்த சம்சாரத்தை தோற்றுவிக்கின்றது. மாயைக்கு , ஆவரணம் ,விக்ஷேபம் என்ற இருவிதமான சக்திகள். ஆவரணம் என்பது ஞானஸ்வரூபத்தை முழுவதும் மறைத்துக்கொண்டு உள்ளது. விக்ஷேப சக்தியானது இந்த உலகத்தை தோற்றுவிக்கின்றது. அதாவது கயிற்றிலே சர்ப்பத்தைக் காண்பது போல . ஆராய்ந்து பார்த்தால் மனிதர்களால் பார்க்கப்படுவதும், கேட்கப்படுவதும், நினைக்கப்படுவதுமான எல்லா விஷயங்களும் பொய்யானதே ஆகும்.
இந்த சம்சார ரூபமான மரத்திற்கு ஆணிவேராக இருப்பது சரீரமே. . அதனாலேயே பந்தம் உண்டாகிறது. பஞ்ச பூதங்கள் , பஞ்ச தன்மாத்திரைகள் புத்தி அஹம்காரம் இந்த்ரியங்கள் மனம் இவைகள் சேர்ந்த மூலப்ரக்ருதியே க்ஷேத்ரம் எனப்படுகிறது. ஜீவன் இவைகளில் இருந்து வேறுபட்டது.
உள்ளும் புறமும் பரிசுத்தமாக இருந்து , பற்றற்று , உலக விஷயங்களில் இருந்து விலகி தனிமையான பரிசுத்தமான இடத்தில் வஸித்துஆத்மஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும் .
புத்தி, பிராணன்,மனம், தேகம், அஹங்காரம் இவைகளில் இருந்து மாறுபட்ட , நித்ய, சுத்த, சிதாத்மாவே நான் என்ற நிச்சயமே பரிசுத்த ஞானம். எப்போது இதன் நேரிடையான அனுபவம் ஏற்படுகிறதோ அதுவே விஞ்ஞானம் எனப்படும்.
சாஸ்த்ர வாக்கியங்களாலும் குரு உபதேசத்தினாலும் ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் பேதமற்ற ஏக வஸ்துவே என்ற ஐக்ய ஞானம் ஏற்படும்போது அவித்யை மறைந்து விடுகிறது. இதுதான் மோக்ஷம் எனப்படுகிறது.
விளக்கின் ஒளியால் வழி நன்கு தெரிவதைப் போல் என்னிடம் பக்தி உள்ளவர்களுக்கே ஆத்மா நன்கு பிரகாசிக்கின்றது. அதாவது பக்தியினால் ஆத்மாசாக்ஷாத்காரம் அடையலாம்.
பக்திக்கு காரணமானவை, இடையறாது எனது உபாசனையில் ஈடுபட்ட பக்த ஸ்ரேஷ்டர்களுக்கு சேவை செய்வது ,சதசங்கத்தில் இருந்து கொண்டு எனது சரிதங்களைப் படிப்பது , கூறுவது என்பவையாகும். இவ்வாறு என் நினைவிலேயே ஆழ்ந்து திவ்ய நாம சந்கீர்த்தனத்தில் ஈடுபட்டவர்க்கே என்னிடம் அனன்ய பக்தி உண்டாகும். எனது பக்தனுக்கு ஞானமும் விஞ்ஞானமும் வைராக்யமும் சீக்கிரத்திலேயே ஏற்படும். மேலும் நான் அவர்கள் கண் முன்னாலேயே தரிசனம் அளித்துக் கொண்டிருப்பேன். இதைக்காட்டிலும் வேறு உபாயம் ஒன்றும் இல்லை." என்று கூறினார் .
இவ்வாறு ராமன் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் ஆனந்தமாக பஞ்சவடியில் வசித்து வருகையில் சூர்பனகை வந்தால்.அதை அடுத்து காணலாம்.
No comments:
Post a Comment