Friday, August 6, 2021

Krishna Avatar part1

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
     
           தஸாவதாரம்

          ஸ்ரீகிருஷ்ணாவதாரம்

 பகுதி 01

 ஏஷமே ஸர்வதர்மானாம், தர்ம: அதிகதமோ மத: * *யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைஹி அர்ச்சேன் நரஸ்ஸதா *  *ரிஷிபி: பரிகீதானி  ஸ்தவைஹி அர்ச்சேன் நரஸ்ஸதா  
 ஏஷமே ஸர்வ தர்மானாம், தர்ம: அதிகதமோ மத:

 விளக்கம்

நான் அறிந்த வரையில் கமலக் கண்ணனான, புண்டரிகாஷனான, விஷ்ணு பரமாத்வை,  ரிஷிகளெல்லாம் பாடும், வேதங்களில் உள்ள, ஒரு ஆயிரம் நாமாக்களை சொல்கிறேன். இந்த ஆயிரம் நாமாக்களை, இந்த ஸ்தோத்திரத்தை சொல்றதே ஒரு அர்ச்சனை. இதைச் சொல்வது தான் என்னை பொறுத்த வரைக்கும்,  எல்லாத்துக்கும் மேலான தர்மம். அப்டீன்னு சொல்றார்.

 ஆயிரம் நாமம்

பிதாமகரின் கேள்விக்கு பகவான் பதிலளித்தார்,
'வேதம் உள்ள அளவும் உம் புகழ் மேன் மேலும் விரிவடைய வேண்டும் இந்தப் பூமி உள்ள காலம் வரை உம் புகழ் அழிவற்றதாக இருக்க வேண்டும் அதற்காகவே இவ்வுபதேசத்தை நீரே அருளுமாறு கூறினேன் நீர் தருமருக்குச் சொல்லப்போகும் உபதேச மொழிகள் வேதப் பொருளாக உறுதி பெறப் போகின்றன. உமது தெய்வீக உரையைக் கேட்கும் மக்கள் உயிர் துறந்த பின் புண்ணியங்களின் பயனை அடையப் போகின்றனர்.
கங்கை மைந்தரே! இவ்வாறு உம் புகழ் மிகப் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே உமக்கு மேலான ஞானத்தை அருளினேன். போரில் கொல்லப்படாமல் இருக்கும் அரசர்கள் யாவரும் பல தருமங்களையும் கேட்க விருப்பத்துடன் உம்மைச் சூழ்ந்து அமர்ந்திருக்கின்றனர். தர்மங்களை உம்மைவிட அறிந்தவர் எவருமில்லை உலகில் குறை இல்லாதவரைக் காண முடியாது. ஆனால் உமது பிறப்பு முதல் பாவம் என்பதை உம்மிடம் சிறிதுக் கூடக் காணவில்லை. ஒரு தந்தை மகனுக்கு உரைப்பது போல நீர் உபதேசம் புரிவீராக தர்மம் தெரிந்தவர்கள் அதைத் தெரியாதவர்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டும் அவ்வாறு உபதேசிக்காவிடின் பாவம் வந்து சேரும் ஆதலால் ஞானக்கடலே உமது உபதேசம் ஆரம்பமாகட்டும்' என்றார்.

அது கேட்டு பீஷ்மர் 'கண்ணா உமது அருளால் நான் பெற்ற ஞான நல்லறத்தை தருமத்தை உமது தாள் பணிந்து இப்போது சொல்லத் தொடங்குகிறேன் தருமத்தை விரும்பும் தருமர் என்னிடம் அனைத்து தருமங்களையும் கேட்க விரும்பினால் நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன். தருமத்தைப் போற்றும் யார் அரசராக இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்.
என்றார் பீஷ்மர்.
அதற்குக் கண்ணன் ' தருமர் வெட்கத்தாலும் சாபம் வருமோ என்னும் அச்சத்தாலும் நடுங்குகிறார். வழிபடத்தக்க பெரியோர்களைப் போர்க் களத்தில் கொன்றதற்காகச் சோகமும், வெட்கமும் கொண்டுள்ளார். சகோதரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பெரிதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளார். அவர்கள் செய்த தீங்கிற்காக என்ன நேருமோ என பயந்து உமது அருகில் வராது இருக்கிறார்' என்றார்.

அதனை உணர்ந்த பீஷ்மர் 'கண்ணா, போர்க்களத்தில் உயிர் துறத்தல் க்ஷத்திரியர் கடமையாகும் தந்தையும், பாட்டனும், ஆசாரியரும் உறவினரும் கெட்ட எண்ணத்துடன் போரிட வருவார்களேயாயின் அவர்களைக் கொல்லுதல் க்ஷத்திரிய தர்மம்தான். க்ஷத்திரியனுக்கு உரிய இத்தகைய போர்த் தருமம் என்றும் மண்ணுலகம் விண்ணுலகம் இரண்டிலும் நற்கதிக்குக் காரணம் என மனு கூறியுள்ளார்' என்றார். பிதாமகரின் இவ்வுரையைக் கேட்டதும், தருமர் மிகவும் பணிவுடன் அவரை நெருங்கி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார். வில்லாற்றல் மிக்க பீஷ்மர் மிகவும் மகிழ்ந்து தருமரை அமருமாறு பணித்தார். பின்னர் சந்தேகங்களைக் கேட்குமாறு பணித்தார்.
தருமர்..கண்ணனையும்..பீஷ்மரையும் வணங்கிவிட்டுத் தம் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார்..
'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள்ளன.ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும் ஆகவே இந்த ராஜதருமங்களை எனக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்' என்றார்.

ராஜ தர்மத்தில் ரட்சன தர்மத்தை உபதேசித்தார், மேலும் குல தர்மத்தைப் பற்றி உபதேசிக்கும்போது,  தருமர் கேட்டார்..'நான்கு குலங்களுக்கும் உள்ள பொதுவான தர்மங்கள் யாவை? சிறப்பானவை யாவை?'
பீஷ்மர் சொல்கிறார், 'சினம் இன்மையும், சத்தியமும், நேர்மையும், தானமும், ஒழுக்கமும் எல்லாச் சாதிகளுக்கும் உள்ள பொது தர்மங்களாகும். அடக்கம், வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானத்தையும், யாகத்தையும் செய்வதுடன் கிடைத்ததைக் கொண்டு வாழ்தல், தனக்கென வாழாது நாளைக்கு என சேமித்து வைக்காது இருத்தல் ஆகியவை அந்தணர்க்குரிய தருமங்கள் ஆகும்.

யாகம் செய்தல்,வேதம் ஓதுதல், ஈதல், திருடர்களை ஒழித்தல், விடா முயற்சி, போர்க்களத்தில் வீரத்துடன் போர் புரிதல், தீயவர்களைத் தண்டித்தல், நல்லவர்களைக் காத்தல் ஆகியவை க்ஷத்திரியர்களின் தருமங்கள் ஆகும்.

நாணயமான முறையில் வியாபாரம் செய்து பொருள் சேர்த்தல், தானம் புரிதல், பசுக்களைப் பாதுகாத்தல் முதலியவை வைசியரின் தருமங்களாகும்

மேற்கூறிய மூவகை வருணத்தார்க்கும் தொண்டு செய்வது நான்காம் வருணத்தாரின் தருமமாகும்' என்றார்.

இல்லற தர்மம், ஆபத்து தர்மம் மற்றும் கொல்லாமையைப் (ஜீவ காருண்யம்) பற்றி கூறினார். அதற்கு தருமர் 'கொல்லாமை என்பது தர்மங்கள் அனைத்திலும் மேலானது என்றீர் ஆனால் சிரார்த்தங்களில் முன்னோர்க்குப் புலால் விருப்பத்தைத் தரும் என்று முன்னர் கூறியுள்ளீர், இது முரணாக உள்ளதே புலாலை விடுதல் என்னும் தருமத்தில் எங்களுக்கு ஐயம் உண்டாகிறது. புலால் உண்பதால் ஏற்படும் குற்றம் யாது? புலால் உண்ணாமையால் ஏற்படும் நன்மை யாது?கொன்று உண்பவன், பிறர் கொடுத்ததை உண்பவன், விலைக்காகக் கொல்பவன், விலைக்கு வாங்கி உண்பவன் ஆகிய இவர்களுக்கு நேரும் குற்றங்கள் யாவை? இவற்றையெல்லாம் விளக்க வேண்டுகிறேன்' என்றார். பீஷ்மர் சொல்லலானார் 'அழகான உடல் உறுப்புகளையும், நீண்ட ஆயுளையும், துணிச்சலையும், ஆற்றலையும், நினைவாற்றலையும் அடைய விரும்புபவர்கள் புலால் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இது குறித்து ரிஷிகளின் முடிவைக் கேள். 'புலால் உண்ணாமலும், பிற உயிர்களைக் கொல்லாமலும், கொல்லத் தூண்டாமலும் இருக்கும் ஒருவன் பிராணிகளின் அன்பன்' என்று பதினான்கு மனுக்களுள் ஒருவரான ஸ்வயம்பு மனு சொல்லியிருக்கிறார்.

புலால் உண்ணாதவனை சாதுக்களும் போற்றுகின்றனர். "ஊனையும் கள்ளையும் விடுபவன் தானம், தவம், யாகங்கள் செய்வதால் பெறும் பயனைப் பெறுகிறான்' என்று பிரகஸ்பதி சொல்லியிருக்கிறார். இடைவிடாமல் நூறு ஆண்டுகள் அஸ்வமேத யாகம் செய்வதும் புலால் உண்ணாமல் இருப்பதும் சமம் என்பது என் கருத்து. புலால் உண்ணும் பழக்கத்தை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ அவன் வேதங்களாலும் யாகங்களாலும் பெற முடியாத நன்மையை அடைவான். ஏதோ ஒரு காரணத்தால் புலால் உண்ண நேர்ந்தாலும் பிராயச்சித்தமாகக் கடும் தவம் புரிய வேண்டும். சுவை கண்டவன் புலாலை விடுவது கடினமானது என்பது உண்மையாயினும், எல்லா உயிர்களுக்கும் அபயம் கொடுப்பதாகிய இந்த் புலால் உண்ணாமை என்னும் விரதத்திற்கு இணை ஏதுமில்லை. எவன் எல்லா உயிர்களுக்கும் அபயம் அளிக்கின்றானோ அவன் உலகுக்கே உயிர் அளிக்கிறான் என்பதில் ஐயமில்லை. மேலோர்கள் இதனையே முதன்மையான அறம் என்று போற்றுகின்றனர். அறிவும், தூய மனமும்உள்ளவன் தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் நேசிப்பான். எறியப்பட்ட தடியால் புல் அசையும் போதும் அதற்கும் பயம் இருக்கிறது என்றால், விரைவாகக் கொல்லப்படும் உயிர்கள் படும் துன்பத்தைச் சொல்லவா வேண்டும்? ஒரு தீமையும் செய்யாத ஒரு விலங்குக்கு நோய் இல்லாமலேயே புலால் உண்ணும் மனிதர்களால் மரண பயம் இருக்கிறது என்பதை எண்ணுகையில் துக்கம் உண்டாகிறது. எனவே புலால் உண்பதைத் தவிர்த்தல் தருமத்திற்குக் காரணமாகிரது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். கொல்லாமைதான் மிக உயர்ந்த தருமம் கொல்லாமையே மிக உயர்ந்த தவம் கொல்லாமையே மிக உயர்ந்த வாய்மை!
புல்லிலிருந்தோ, கல்லிலிருந்தோ,கட்டையிலிருந்தோ புலால் கிடைப்பதில்லை. ஒரு உயிரைக் கொன்றால் தான் கிடைக்கும். ஆகவே அதை உண்பது பாவம் ஆகும். புலால் உண்ணாதவனுக்கு அச்சம் இல்லை. அவன் ஏற முடியாத மலை மீது அஞ்சாமல் ஏறுவான். இரவிலும்,பகலிலும் அவனுக்குப் பயம் இல்லை. பிறர் ஆயுதத்தால் தாக்க வந்தாலும் அவன் அஞ்ச மாட்டான். அவனைக் கொடிய விலங்குகளும் பாம்பும் ஒன்றும் செய்யாமல் விலகிச் செல்லும். புலால் உண்ணாமல் இருப்பது செல்வத்தைத் தரும். புகழைத் தரும்.நீண்ட ஆயுளைத் தரும். பின் சுவர்க்கத்தைத் தரும்.

புலால் உண்பவன், கொல்பவன் போலவே பாவம் செய்கிறான். விலைக்கு வாங்குபவன் பொருளால் கொல்கிறான். சாப்பிடுபவன் உண்பதால் கொல்கிறான். ஒரு விலங்கைக் கொண்டு வருபவன், அதனை  கொல்பவன், விற்பவன், வாங்குபவன், சமைப்பவன், புசிப்பவன் இவர்கள் அனைவரும் கொலையாளிகள்தாம்.
இறுதியாகக் கொல்லாமையின் சிறப்பை உனக்கு உணர்த்துகிறேன். கொல்லாமையே உயர்ந்த தானம். கொல்லாமையே யாகங்கள் அனைத்திலும் சிறந்தது. கொல்லாமை மேற்கொள்பவன் உலக உயிர்களுக்குத் தாயாக விளங்குகிறான்.தந்தையாகப் போற்றப்படுகிறான். ஆண்டுகள் பல நூறு ஆனாலும் கொல்லாமையின் பெருமையை முற்றிலும் உரைக்க முடியாது' என்று கூறி முடித்தார் பீஷ்மர். எளிய தர்மத்தை அனைவரும் பின்பற்றக்கூடிய வழிமுறையைக் கேட்டார். அந்த கிருஷ்ண பரமாத்மாவிடம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி முக்கரணங்களாலும் சரண்டைவதே எளிய வழி  என நல்ல பல அறிவுரைகளைச் சொல்லி வந்த கங்கை மைந்தன் களைப்புற்றார். பேச்சை நிறுத்தினார். யோகத்தில் ஆழ்ந்தார். தியானத்தில் இருக்கையிலேயே  அவரது உயிர் சுவர்க்கத்தை நோக்கிச் செல்லலாயிற்று. அது கண்ட கண்ணனும், வியாசரும் வியப்புற்றனர். தேவ துந்துபிகள் முழங்கின. வானம் மலர் மாரி பொழிந்தது. சித்தர்களும், பிரம ரிஷிகளும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர். 'பிதாமகரே! வருக என வானுலகோர் வரவேற்றனர். பெரிய அக்கினி ஜ்வாலை போன்றதோர் ஒளிப்பிழம்பு கங்கை மைந்தரின் தலையிலிருந்து புறப்பட்டு விண்ணுலகைச் சென்று அடைந்தது. பீஷ்மர் இவ்வாறு வசுலோகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

பாண்டவர்களும், விதுரரும், யுயுத்சுவும் சந்தனக்கட்டைகளாலும் மேலும் பல வாசனைப் பொருள்களாலும் சிதை அமைத்தனர். திருதிராட்டிரனும், தருமரும் பிதாமகனின் உடலைப் பட்டுக்களாலும், மாலைகளாலும் போர்த்தி மூடினர். யுயுத்சு குடை பிடித்தான். பீமனும், அர்ச்சுனனும் சாமரங்கள் ஏந்தினர். நகுல, சகாதேவர்கள் மகுடம் வைத்தனர். திருதிராட்டினனும், தருமரும் காலருகே நின்றனர். குருவம்சத்து மாதர்கள் நாற்புறமும் விசிறி கொண்டு வீசினர். ஈமச்சடங்குகள் சாத்திரப்படி நிறைவேறின. புண்ணியமூர்த்தியின் சிதைக்குத் தீயிடப்பட்டு அனைவரும் வலம் வந்து தொழுதனர். எங்கும் சாந்தி நிலவியது. பின்னர் கண்ணனும், நாரதரும், வியாசரும், பாண்டவரும், பரதவம்சத்து பெண்டிரும், நகர மாந்தரும் புண்ணிய நதியான கங்கைக்கரையை அடைந்தனர். ஜலதர்ப்பணம் செய்யப்பட்டது. அப்போது கங்காதேவி நீரிலிருந்து எழுந்து வந்து அழுது புலம்பியபடியே 'நான் சொலவதைக் கேளுங்கள். என் மகன் குலப்பெருமை மிக்கவன். ஒழுக்கத்தில் சிறந்தவன். பரத வம்சத்து பெரியோர்களிடம் பெருமதிப்புடையவன்.உலகோர் வியக்கத்தக்க விரதத்தை மேற்கொண்டவன்.பரசுராமராலும் வெல்ல முடியா பராக்கிரம் உடையவன்.காசி மாநகரில் நடைபெற்ற சுயம்வரத்தில் தனியொரு தேராளியாக இருந்து, மன்னர்களை வென்று மூன்று கன்னிகைகளைக் கொண்டு வந்தவன். வீரத்தில் இவனுக்கு நிகராக உலகில் வேறு யாருமில்லை. அத்தகைய மாவீரன் சிகண்டியினால் கொல்லப்பட்டதை எண்ணுகையில் என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது' என்றாள். அப்போது கண்ணன்..'தேவி துயரப்படாதே..தைரியத்தை இழக்காதே..உன் மைந்தன் மேலுலகம் சென்றடைந்தார்.இனி அவர் வசுவாக இருப்பார்.ஒரு சாபத்தினால் மானிட வடிவம் தாங்கி மண்ணுலகில் உனக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நீ அறிவாய். இப்போது சாப விமோசனம் கிடைத்துவிட்டது. இனி நீ அவரைப் பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை.

 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

 வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகிருஷ்ணாவதாரம்   தொடரும் ....

No comments:

Post a Comment