Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
அத்யாத்ம ராமாயணம் - அரண்ய காண்டம் - அத்தியாயம் 7
அத்தியாயம் 7
ராவணனின் செயல்களை அறிந்த ராமன் சீதையிடம் மாயாஸீதையை உருவாக்கி ஆஸ்ரமத்தில் வைத்துவிட்டு அவளை அக்னியில் பிரவேசித்து பிறகு ராவண வதம் முடிந்ததும் தன்னிடம் வருமாறு கூறினார். பின் அவ்வாறே செய்து சீதைமறைந்துவிட்டாள்.
பிறகு மாயசீதை மாயமானைக் கண்டு அதிசயமடைந்து அதைப் பிடித்துத் தருமாறு ராமனை வேண்ட ராமன் லக்ஷ்மணனிடம் தான் அதைப் பிடிக்கப் போவதாகக் கூறி லக்ஷ்மணனை அங்கேயே இருந்து சீதையைக் காக்குமாறு கூறினார். அப்போது லக்ஷ்மணன் அது மான் உருவில் வந்துள்ள மாரீசனே என்று சந்தேகிப்பதாகவும் ஆகையால் அதை பின்பற்றிச் செல்ல வேண்டாம் என்றும் கூற அதற்கு ராமன் அது மாரீசனே ஆயின் அவனைக் கொல்வதாகவும் அல்லது உண்மையில் மானாக இருந்தால் அதைப் பிடித்து வருவதாகவும் கூறிச் சென்றார்.
மகாதேவன் பார்வதியிடம் ஸர்வவ்யாபியாகவும் சின்மயராகவும் நிர்விகாரியாகவும் எல்லாம் அறிந்தவராகவும் உள்ள ராமர் சீதையை சந்தோஷப்படுத்த மாயமானைத் தேடிச் சென்றார் என்பது பகவான் ஸ்ரீ ஹரி பக்தர்களிடம் கருணையும் அன்பும் உள்ளவர் என்பதைக் காட்டவே என்று கூறினார். ( மாரீசனும் பக்தனாக மாறியவன். ராவணன் விஷ்ணு பாரீஷதர்களில் ஒருவன் என்பதும் இங்கு நினைவூட்டப்படுகிறது.)
மானைப் பின் தொடர்ந்த ராமர் அது மாரீசனே என்றறிந்து பாணப்ரயோகம் செய்தார். அதனால் உயிரிழக்கும்போது அவன்"ஹா லக்ஷ்மணா,' என்று கூவி உயிரிழந்தான். பகவானை தரிசித்தபடியே உயிரை விட்ட மாரீசனின் சரீரத்தில் இருந்து ஒரு ஒளி தோன்றி ராமரின் சரீரத்தில் புகுந்தது. எவர் பகவானின் நினைவிலேயே இருந்து உயிரை விடுகிறாரோ அவர் மகாபாவியானாலும் பகவத் கிருபையினால் பரமபதத்தை அடைவார்கள் என்று அதைக்கண்ட தேவர்கள் பேசிக்கொண்டு தேவலோகம் அடைந்தனர். மாரீசன் பயத்தினால் எப்போதும் ராம நாம ஸ்மரணையிலேயே இருந்ததால் அவனுக்கு நற்கதி கிட்டியது.
'லக்ஷ்மணன் தயங்கியதும் சீதை அவனிடம் கடுமையான வார்த்தைகளைக் கூறியதும் வால்மீகியில் உள்ளபடியே காண்கிறது ஆனாலும் லக்ஷ்மணன் அத்யாத்ம ராமாயணத்தில் சீதையிடம் கடுமையான வார்த்தைகளைக் கூறுகிறான்.
அவன் கூறியது,
"பிடிவாத குணம் உள்ளவளே , இந்த பாபமான வார்த்தையை கூறியபடியால் உனக்கு துன்பம் ஏற்படப்போகிறது . நான் இதோ செல்கிறேன்."
இவ்வாறு கூறிவிட்டு சீதையை வனதேவதைகளிடம் ஒப்படைத்து லக்ஷ்மணன் சென்றான்.
அவன் சென்றதும் சந்நியாசி வேடத்தில் அங்கு வந்த ராவணனை சீதை உபசரித்தாள். தான் யார் என்று கூறிய ராவணன் அவள் மேல் மோகம் கொண்டு அவளை எடுத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூற அதைக்கண்டு பயந்தாலும் ஸீதை அவனிடம் தன் கணவர் வந்துவிட்டால் அவன் அழிவது நிச்சயம் என்று கூறி தன்னை அவன் கவர்ந்து செல்ல நினைப்பது சிங்கத்தின் மனைவியை ஒரு முயல் எடுத்துச்செல்ல நினைப்பது போன்றது என்று கூறினாள்.
அதைக்கேட்ட ராவணன் சினம் கொண்டு தன் சுய உருவைகாட்ட சீதைக்கு துணையாக இருந்த வனதேவதைகள் பயந்து ஓடின. ராவணன் அவளிருந்த நிலத்தைப் பெயர்த்து அவளை தூக்கிச்சென்றான். ( இங்கு கம்ப ராமாயணத்தில் இதே போல் ராவணன் சீதையைத் தூக்கிச்சென்றதை காண்கிறோம். கம்பன் அத்யாத்ம ராமாயணத்தை பின்பற்றி இருக்கலாம்.)
சீதையின் கூக்குரலைக் கேட்ட ஜடாயு எழும்பி ராவணனை வழி மறித்து ஒரு நாய் யாகத்தின் ஹவிச்சைத் தூக்கிச்செல்வது போல பரம்பொருளான ராமனின் பத்தினியை தூக்கிசெல்வதாக கூறி சண்டையிட ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்ட ஜதாயு கீழே விழுந்தது. சீதை பயந்து "ஹா ராமா, ஹா லக்ஷ்மணா " என்று கூவிக்கொண்டு செல்ல அங்கு ஒரு மலையின் மேல் ஐந்து வானரங்கள் இருப்பதைக் கண்டு தன் ஆபரணங்களை கழட்டி உத்தரீயத்திலே முடிந்து "ராமனிடம் கூறுங்கள் என்று வீசிஎறிந்தாள்.
ராவணன் அவளை இலங்கைக்கு தூக்கிச் சென்று அசோவனத்தில் அரக்கியர் நடுவில் சிறை வைத்தான்.
இங்கு ராவணன் சீதையை 'மாத்ருபுத்த்யா அன்வபாலயத்,' என்ற சொல் அன்னையைப்போல் பாதுகாத்தான் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது, அதாவது முன்னர் பகவானின் பக்தனான படியால் தன் முடிவை எதிர்பார்த்து செயலாற்றினான் என்பது பொருள்.
No comments:
Post a Comment