Monday, July 26, 2021

Krishna Avatar part 27

தஸாவதாரம்

          ஸ்ரீகிருஷ்ணாவதாரம்

 பகுதி 27

 சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை

 மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த

 கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு

 அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?
 
 இராமானுச நூற்றந்தாதி 07.01 திருவரங்கத்தமுதனார்

 விளக்கம்

சரணம் அடைந்த தருமனாக்கா
-
தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக

பண்டு
-
முற்காலத்திலே

நூற்றுவரை
-
துரியோதனன் முதலிய நூறுபேர்களை

மரணம் அடைவித்த மாயவன்
-
சாகும்படி செய்த எம்பெருமான்

தன்னை வணங்கவைத்த சரணம் இவை
-
தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் (உடல் பாகங்கள்) இவை;

உமக்கு அன்று
-
உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல;

என்று
-
என்று இவ்வாறாக உபதேசித்து

இராமாநுசன்
-
எம்பெருமானார்

உயிர்கட்கு
-
ஆத்மாக்களுக்கு

அரன் அமைத்திலன் எல்
-
ரக்ஷையைக் கற்பித்தில ராகில்

ஆர் உயிர்க்கு
-
இந்த அருமையான ஆத்மாக்களுக்கு

மற்று அரண் ஆர்
-
வேறு காப்பவர் யார்? (யாருமில்லை.)
       
பதிமூன்றாவது நாள் யுத்தத்தில் துரோணர் பத்மவியூகம் (தாமரை மலர் போல) அமைத்தார்.முகப்பில் அவர் இருந்தார்.துரியோதனன் நடுவில் நின்றான். பத்மவியூகத்தை உடைத்துச் செல்வது கடினம். அந்த அமைப்புக் கண்டு தருமர் கலக்க முற்றார். அபிமன்யூவிடம் ஒரு தனி ஆற்றல் இருந்தது. அவனால் பத்மவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லமுடியும். இந்த பயிற்சியைப் பெற்றிருந்த அபிமன்யூ வெளியே வரும் பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. ஆயினும் அவனுக்குத் துணையாக பல்லாயிரக் கணக்கில் வீரர்கள் உள்ளே புகுந்தால் கௌரவர் படை சிதறி ஓடும் என தருமர் எண்ணினார். அபிமன்யூவும் துணிச்சலாக உள்ளே சென்று தாக்கினான். ஆனால் மற்ற வீரர்கள் உள்ளே செல்லுமுன் வியூகம் மூடிக் கொண்டது. ஜயத்ரதன் யாரையும் உள்ளே நெருங்க விடவில்லை.
ஆகவே, துரோணர், அசுவத்தாமா,கர்ணன் ஆகியோருடன் தனித்து நின்று போரிட்டான் அபிமன்யூ.அவன் வீரம் கண்டு துரோணர் கிருபரிடம் 'இவன் வீரத்தில் அர்ச்சுனனைவிட சிறந்து காணப்படுகிறான்' என்று வியந்து பாராட்டினார். இதைக் கண்ட துரியோதனன் 'எதிரியை புகழும் நீர் செய்வது நம்பிக்கைத்துரோகம்..இதனால் நம் படையின் உற்சாகம் குறையும்' என்றான்.

அவனுக்கு பதில் அளிக்கும் விதத்தில் போரில் வீரம் காட்டினார் துரோணர். எப்படியாவது அவனை வீழ்த்த எண்ணி அதர்ம யுத்தத்தில் ஈடுபலானார். கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யூவின் வில்லை முறித்தான். பின்புறமிருந்து தாக்கியவன் யார் என அபிமன்யூ திரும்பி பார்த்தபோது துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார். ஆனால் இதற்குத் தளராத அபிமன்யூ வாளைக் கையில் ஏந்தி தேரிலிருந்து குதித்து பல நூறு வீரர்களை வெட்டி வீழ்த்தினான்.
உணர்ச்சிவசப்பட்ட துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வாளைத் துண்டித்தார். அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான். மாவீரன் அபிமன்யூ தேரையும், வில்லையும், வாளையும், கேடயத்தையும் இழந்தாலும்,வீரத்தை இழக்கவில்லை.ஒரு கதாயுதத்தைக் கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான்.பல வீரர்களைக் கொன்றான்.

முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று, பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன், பாண்டவர்களை பழிதீர்த்துச் சிவனை நோக்கித் தவம் செய்து , அர்ச்சுனனைக் கொல்ல இயலாது எனினும் ஒரு நாள் மற்றவர்களை சமாளிக்கக்கூடும் என்னும் வரத்தை பெற்றிருந்தான் அல்லவா? அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அபிமன்யூவிற்கு உதவி செய்யாதவாறு த டுத்தான். கையில் ஆயுதமும் இன்றி துணைக்கும் யாருமின்றி போர் செய்த சிங்கக்குட்டியை (நரிகள் ஒன்று சேர்ந்து )மாவீரனான நிராயுதபாணி அபிமன்யூவைக் கொன்று விட்டனர். மறுநாள் நடக்கும் யுத்தத்தில் ஜெயத்ரதனை நான் கொல்வேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.

அர்ச்சுனனின் சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன் போர்க்களத்தை விட்டு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரர்க்கு அழகன்று என மற்றவர்கள் தடுத்தனர். அர்ஜுனனை எண்ணி துரோணர் கலங்கினார். அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார். அதற்கேற்ப பத்மவியூகம், சகடவியூகம் (சக்கர வியூகம்) என வியூகங்களை வகுத்தார்.
எங்கே அர்ஜுனன்? என ஆர்ப்பரித்த கௌரவர்கள் துரியோதனனின் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ச்சுனனை நோக்கி அனுப்பினர். அப்போது கண்ணன் தேரை ஓட்ட காண்டீபத்துடன் உள்ளே வந்தான் பார்த்தன். அனுமக்கொடியுடன் ஆக்ரோஷத்துடன் வந்த அர்ஜுனனைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினான் துர்மர்ஷணன். அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ச்சுனனை எதிர்த்தான். பின் முடியாமல் திரும்பினான்.
அர்ச்சுனன் துரோணரைச் சந்தித்து போரிட்டான். ஆனாலும் அவருடனான போர் நிலைக்கவில்லை.ஏனெனில், அர்ச்சுனனுக்கு அன்றைய இலக்கு ஜயத்ரதன்.

ஜயத்ரதனை நோக்கி வந்த அர்ச்சுனனைக் கண்டு துரியோதனன் மிகவும் கோபம் கொண்டு துரோணரைக் கடிந்துக் கொண்டான். 'அவனை ஏன் உங்களைக் கடந்து ஜயத்ரதனை நோக்கி செல்ல அனுமதித்தீர் என்றான்.

"துரியோதனா என் திட்டம் என்ன தெரியுமா? அர்ச்சுனனை வேறு பக்கம் போக வைத்தால் தருமரை பிடித்து விடலாம். என்னிடம் மந்திர சக்தி வாய்ந்த கவசம் இருக்கிறது. உனக்குத் தருகிறேன். அதை யாரும் பிளக்க முடியாது. முன்னர் சிவபெருமான் இதை இந்திரனுக்கு அளித்தார். அவன் ஆங்கீசரருக்குக் கொடுத்தான். அவர் அவர் புதல்வன் பிரகஸ்பதிக்கு அருளினார். பிரகஸ்பதி அக்னியேச்யருக்குக் கொடுத்தார். அவர் எனக்குத் தந்தார். அதை உனக்கு நான் தருகிறேன் இனி உனக்கு வெற்றியே. போய் அர்ஜுனனுடன் போரிடு' என்றார் துரோணர்.
மகிழ்ச்சியுடன் அக்கவசத்தை அணிந்து அர்ஜுனனைத் தாக்கினான் துரியோதனன். அர்ச்சுனனின் அம்புகள் கவசத்தைத் துளைக்க முடியவில்லை. ஆகவே அர்ச்சுனன் கேடயம் இல்லாத இடமாக அம்புகளைச் செலுத்தினான். துரியோதனன் வலி பொறுக்காது வேறு பகுதிக்கு நகர்ந்தான்.

பின் அர்ச்சுனன் துரியோதனனிடமிருந்து விலகி ஜயத்ரதனை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.அர்ச்சுனன் ஜயத்ரதனைக் கொல்லாதபடி பூரிசிரவஸ் தாக்கினான். உடன் சத்யகி அர்ஜுனனின் உதவிக்கு வந்து பூரிசிரவஸைத் தாக்கத் தொடங்கினான். சாத்யகியை கீழே தள்ளினான் பூரிசிரவஸ் காலால் மார்பில் உதைத்தான் மயக்கம் அடைந்தான் சாத்யகி, உடன் அவன் தலையை துண்டிக்க முயற்சித்தான் பூரிசிரவஸ். அர்ச்சுனன் அவன் கையை வெட்டினான்.அந்த கை வாளுடன் வீழ்ந்தது பூரிசிரவஸ் அர்ச்சுனனைப் பார்த்து 'நான் வேறு ஒருவருடன் போரிடும் போது அறநெறிக் கெட்டு கையை வெட்டினாயே தருமரின் தம்பி நீ அதர்மம் செய்யலாமா?' என்றான்.

'நேற்று என் மகன் அபிமன்யூ மீது தர்ம வழி மீறி போரிட்டவன் நீயும் அல்லவா?' என்றான். உடன் பூரிசிரவஸ் தன் செயல் குறித்து நாணினான். பரமனை எண்ணி தியானம் செய்தான். அப்போது மயக்கம் தெளிந்த சாத்யகி தியானத்தில் இருந்தவன் தலையை வெட்டினான்.மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்த்து. அர்ச்சுனன் ஜயத்ரதனை நெருங்கினான்.
அர்ச்சுனனை ஜயத்ரதன் தாக்கத் தொடங்கினான் கண்ணபிரான் சூரியன் மறைந்தாற் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார். சூரியன் மறைந்ததா எனப் பார்க்க ஜயத்ரதன் மேற்குத் திசையை நோக்க 'அர்ஜுனா அம்பை செலுத்து' எனக் கூறி இருளைப் போக்கினார் கண்ணன். அர்ச்சுனன் உடனே தன் பாசுபதாஸ்திரத்தை செலுத்தினான். அது ஜயத்ரதனின் தலையை துண்டித்தது. அப்படி துண்டித்த தலை தவம் செய்துக் கொண்டிருந்த ஜயத்ரதனின் தந்தை விருத்தாட்சத்திரன் மடியில் போய் விழுந்தது. அதை ஏதோ என நினைத்தவன் தன் கையால் தள்ளிவிட அது தரையில் விழுந்தது. ஜயத்ரதனின் தந்தையின் தலையும் சுக்கல் சுக்கலாகியது தன் மகனின் தலையைத் தரையில் வீழ்த்துபவர் தலை சுக்கலாக வேண்டும் என பெற்ற வரம் அவருக்கே வினையாயிற்று. ஜயத்ரதன் மறைவு பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பதினைந்தாவது நாள் யுத்தத்தில் தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன் நம்பிக்கையை இழக்கவில்லை. துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான். துரோணரும் கடுமையாகப் போரிட்டார். போரின் உக்கிரத்தைக் கண்டு கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தார். அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார். பிரமாஸ்திரத்தையும் துரோணர் பயன்படுத்தக் கூடும் என எண்ணினார்.
ஏதேனும் பொய் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார் கண்ணன். ஒரு முனையில் யுத்தகளத்தை கலக்கிக் கொண்டிருந்தான் பீமன். 'அசுவத்தாமன்' என்ற புகழ் மிக்க யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான். அது சுருண்டு விழுந்தது. அசுவத்தாமன் என்ற அந்த யானை இறந்ததில் அசுவத்தாமனே இறந்தாற்போல உணர்ச்சி
வயப்பட்ட பீமன், 'அசுவத்தாமனை கொன்றுவிட்டேன்' என கத்தினான். இது துரோணர் காதில் விழுந்தது..தலையில் இடி விழுந்தாற் போல ஆனார்.ஆனால் பின் மனம் தெளிந்தார். அச்செய்தி பொய்யாய் இருக்கும் என எண்ணினார். ஆற்றல் மிக்க தன் மகன் அசுவத்தாமனை யாராலும் கொல்லமுடியாது என நினைத்து போரைத் தொடர்ந்தார். ஆயிரக்கணக்கான குதிரைகளையும், வீரர்களையும்,யானைகளையும் கொன்று குவித்தார்.

துரோணர் விண்ணுலகம் செல்லும் காலம் வந்ததை உணர்ந்த வஷிஷ்டர் முதலான ரிஷிகள் அவரிடம் வந்தனர்.'சாந்த நிலை அடையுங்கள்' என வேண்டினர்.முனிவர்கள் கூற்றும் சற்று முன்னர் பீமன் கூற்றும் அவரது போர்ச்செயலை அறவே நிறுத்தின.உண்மையில் மகன் கொல்லப்பட்டானா? என்ற வினா உள்ளத்தை வாட்ட, சத்தியமே பேசும் தருமர் சொன்னாலே உண்மை என நினைத்தார்.
இதற்கிடையே ஒரு நன்மையின் பொருட்டு பொய் சொல்லுமாறு தருமரிடம் கண்ணன் கூறினார். தருமர் மறுத்தார். 'அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது உண்மைதானே! அதையாவது சொல்லுங்கள் 'என கண்ணன் வற்புறுத்த, தருமரும் சரியென அதை அவர் கூற முற்பட்டபோது 'அசுவத்தாமன் இறந்தான்' என்ற செய்தி மட்டும் காதில் விழுமாறும் மற்றவை விழாதவாறும் சங்கை எடுத்து முழங்கினார் கண்ணன். தருமரின் கூற்று பொய்யாய் இராது என துரோணர் ஆயுதங்களைத் தூக்கி எறிந்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரம் பார்த்துத் திருஷ்டத்துய்மன் வாள் கொண்டு துரோணரின் தலையைத் துண்டித்தான். அவரது தலை தரையில் உருள, உடலிலிருந்து கிளம்பிய ஜோதி விண் நோக்கிச் சென்றது.
 
 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

 வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகிருஷ்ணாவதாரம்   தொடரும் ....

No comments:

Post a Comment