Monday, July 26, 2021

Don’t leave dharma till your death - Periyavaa

பெரியவா திருவடியே
            சரணம்.

"செத்தாலும் நம் தர்மத்தை விடாமல் செய்து கொண்டே சாக வேண்டும்"

இன்றைக்கும் படிப்பதற்கு பிராமணப் பசங்கள் இல்லாததால் வெறிச்சோடியிருக்கிற நூற்றுக்கணக்காண பாடசாலைகள் இருக்கின்றனவே. இவற்றுக்கெல்லாம் முதல் போட்டு மூலதனம் வைத்திருப்பது யார்? பெரும்பாலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களும், கோமுட்டிச் செட்டிமார்களும், பண்ணையார்களான வேளாளர்களும்தான். 

நகரத்தார் செய்த கோயில் திருப்பணிக்குக் கணக்கில்லை. அதே மாதிரி, 'இந்தக் கோயிலுக்கும் வேர் வேதம். அது இருந்தால்தான் இந்தக் கோயிலில் பூஜையும் சாந்நித்தியமும்' உண்டு என்ற நம்பிக்கையில், ஒரு ஆலயத் திருப்பணி செய்தால் ஒரு வேத பாட சாலையும் வைக்க வேண்டும் என்று அவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் வைத்திருக்கிறார்கள்.

 வேளாளர்களில் பெரிய நிலச்சுவான்தார்களாக இருந்தவர்களும் இப்படியே வேத பாடசாலைகளுக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இங்கிலீஷ்காரன் ஆட்சி வந்த பிறகும் அவன் காட்டிய சுகபோக்ய ஜீவனத்தில் மயங்காமல், சாஸ்திரம் விதிக்கிற அளவுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு மட்டும் பிராமணன் வாழ முற்பட்டிருந்தால், அவனுக்கு நிச்சயம் மற்ற சமூகத்தார் அதற்கான வசதிகளைச் செய்து தந்திருப்பார்கள். 

அவர்கள் இவனைக் கைவிடாதபோதே, இவனாகத்தான் அக்ரஹாரத்தை, வேதபாடசாலைகளை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான். 

மேல் நாட்டு நாகரிகத்தில் புதிதாக வந்த ஸயன்ஸினால் பெருகி விட்ட போக்கிய வாழ்வில் இவனுக்கு ருசி வந்துவிட்டது. 'ஆத்மாபிவிருத்திக்கு எந்த அளவு அவசியமோ, அநுகூலமோ, அந்த அளவிற்கு மட்டுமே சரீர போஷணம் செய்து கொண்டால் போதும்' என்ற உயர்ந்த லட்சியம் போய்விட்டது. 'சாப்பாட்டுக்கே இல்லையே என்ற நிர்பந்தத்தின் மேல்தான் இவன் தர்மத்தை விட்டான்' என்ற சமாதானத்தை ஒப்புக் கொள்வதற்கில்லை. அவசியத்துக்கு அதிகமான வஸ்துக்களில் இவனுக்குத் துராசை வந்துவிட்டது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

கிராமத்தில் சாப்பிட வசதியே இல்லை என்றால், மெட்ராஸ் மாதிரி டவுன்களுக்கு வந்து, ஏதோ வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்தவுடன் இவன் திருப்திப்பட்டிருக்க வேண்டியதுதானே? அப்படி திருப்தி அடைந்திருந்தால் மேலே சொன்னது சரி. 

நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன? 

மெட்ராஸில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால்கூட, டில்லியில் இரண்டாயிரம் தருகிறான் என்றால் இவன் அங்கே ஓடுகிறான்! இங்கே ஏதோ கொஞ்சம் அனுஷ்டிக்க முடிந்த தர்மங்களையும் அங்கே போய் விட்டுவிடுகிறானே! அதற்கப்புறம் நியூயார்க்கில் 4,000 டாலர் சம்பளம் கிடைக்கிறது என்றால், கண்டத்தைவிட்டு கண்டம் போய் கண்டபடி வாழ ஆரம்பித்துவிடுகிறானே—கொஞ்சம் மிஞ்சியிருந்த ஆசாரங்களைக்கூட உதறி தள்ளிவிடுகிறானே! 

'மிலிடிரியில் அதிகப் பணம் வருகிறதா?அதிலும் சேருகிறேன். அங்கே மதுபானம், மாம்ஸ போஜனம் எல்லாம் பழகவேண்டியிருந்தாலும் பரவாயில்லை' என்று பணத்துக்காக எதையும் செய்வதைத்தானே பார்க்கிறோம். ஆகையால் பிராமணன் ஸ்வதர்மத்தை விட்டதற்குச் சொல்கிற சமாதானம் கொஞ்சங்கூட எடுபடவில்லை.

நான் இதற்கு மேலேயே ஒருபடி போகிறேன். இங்கிலீஷ்காரர்களுடன் புது ஸயன்ஸுகள், இயந்திர யுகம் எல்லாம் வந்ததால், நம்மவர்களில் மற்ற ஜாதிக்காரர்களுக்குத் தானாகப் பழைய தர்மங்களில் பிடிப்புப் போய் விட்டதாகவே வைத்துக் கொள்வோம். 

இங்கிலீஷ்காரர்கள் கிளப்பிவிட்ட ஆரிய திராவிட பேத உணர்ச்சியால் மற்ற சமூகத்தார் பிராமணர்களை ரக்ஷிக்கக்கூடாது என்ற முடிவுகட்டியதாகவே வைத்துக் கொள்வோம். (இதெல்லாம் யதார்த்தம் – fact – இல்லை. ஒரு பேச்சுக்காகத்தான் assume பண்ணிக் கொள்ளச்சொல்கிறேன்.) வீட்டைவிட்டு ஓடி எங்காவது படித்து உத்தியோகம் பார்த்தால்தான் ஒரு பிடி சோற்றுக்கு வழி உண்டு என்ற நிலை பிராமணர்களுக்கு வந்ததாகவே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தால்கூட அவர்களை, "செத்தாலும் நம் தர்மத்தை விடாமல் செய்து கொண்டே சாக வேண்டும்" என்று உறுதியோடு வேதாத்யயனத்தையும் கர்மாநுஷ்டானத்தையும் விடாமலிருந்திருக்க வேண்டும் என்கிறேன்.

ஆனால், முன் தலைமுறைக்காரர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது சொல்லிப் பிரயோஜனமில்லை. அவர்கள் லோகத்தைவிட்டே போய் விட்டார்கள். அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறேனோ, அதையேதான் இன்றைக்கு உள்ளவர்களுக்கும் சொல்கிறேன்.

அதாவது, செத்தாலும் ஸ்வதர்மத்தை விடக்கூடாது. இப்போது மட்டும் சாகாமல் இருக்கப் போகிறோமோ என்ன? 

பணத்தை நிறையச் சேர்த்துக் கொண்டு, ஆனால் அதைவிட நிறைய அவமானத்தைச் சேர்த்துக் கொண்டு, மற்றவர்களின் அசூயைக்குக் காரணமாக இருந்துகொண்டு, நமக்கான தர்மத்தை விட்டுவிட்ட பிரஷ்டர்களாகச் சாகப்போகிறோம். 

இதைவிட சாப்பாட்டுக்கு இல்லாவிட்டாலும், நம் கடமையைச் செய்தோம் என்று மூச்சு இருக்கிற மட்டும் பட்டினி கிடந்தாவது வேத ரக்ஷணத்தைச் செய்து சாவது பெருமைதானே! 

இப்படிச் செய்வதால் மற்றவர்கள் நம்மை பூஷிக்கட்டும் அல்லது தூஷிக்கட்டும். அதைப் பற்றி நமக்கு என்ன வந்தது—யாருக்கும் போட்டியாக இல்லாதவரை நம்மைக் கண்டு நிச்சயம் யாரும் அசூயை, பொறாமை, வயிற்றெரிச்சல் படமாட்டார்கள் அல்லவா? 

காலத்துக்கு ஒவ்வாத அசட்டுப் பிச்சுக்கள் என்று கேலி வேண்டுமானால் செய்வார்கள். அதாவது பரிகசிப்பார்கள். பண்ணிவிட்டுப் போகட்டுமே. இப்போது மட்டும் குறைச்சலாகவா பரிகாசத்துக்கு ஆளாகி வருகிறோம்? நம் தர்மத்தை விட்டு ஊர் சிரிக்கிற நிலையில் வயிறு வளர்ப்பதைவிட தர்மத்தைச் செய்து கொண்டு ஊர் சிரித்தாலும் சிரிக்கட்டும் என்றுதான் இருக்கலாமே! அல்லது சாகலாமே! 

ஒவ்வொருத்தன், "என் தேசம்" என்கிறான், "என் பாஷை" என்கிறான். அதற்காகச் சண்டை போட்டு உயிரை வேண்டுமானாலும் விடுகிறான். 

சுதந்திரப் போராட்டம் மாதிரி பெரிய விஷயங்கள்தான் என்றில்லை; ஏதோ ஒரு ஜில்லாவின் பகுதி இன்னொரு ஜில்லாவுக்கு போய் விடக்கூடாது என்பதற்காகப் பிராணனை விடுவதற்கு சித்தமாக தானே தன் மேல் மண்ணெண்ணையைக் கொட்டிக் கொண்டு தீக்குளிக்கிறவர்கள் இருக்கிறார்கள். 

கொள்கைக்காக இதை இவர்கள் செய்கிற மாதிரி இங்கிலீஷ்காரர்களின் புது மோஸ்தர் வாழ்க்கை வந்தபோது பிராமணர்கள் பிராணனும் துச்சம் என்று பரமத் தியாகமாகத் தங்கள் தர்மத்தை ஏன் ரக்ஷித்திருக்கக்கூடாது? 

பிறத்தியானுடைய தர்மத்தை எடுத்துக் கொண்டு, அதனால் பெரிய வசதி, கிசதி பெறுவதைவிட, தன் தர்மத்திலேயே இருந்து கொண்டு சாகிறது மேல் (நிதனம்ச்ரேய: – சாவே சிலாக்கியம்) என்றுதான் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். 

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 
(தெய்வத்தின் குரல் - முதல் பகுதி)

No comments:

Post a Comment