Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
அத்யாத்மராமாயணம்-ஆரண்யகாண்டம் -அத்தியாயம் 3
அகஸ்தியரின் ஆச்ரமத்திற்கு வந்து சேர்ந்ததும் ராமர் சுதீக்ஷ்ணரிடம் தங்கள் வருகையை முனிவரிடம் சென்று தெரிவிக்குமாறு கூறினார். அங்குள்ள முனிவர்களிடம் ராமநாம மஹிமையை எடுத்துக் கூறுகின்ற அவரிடம் ராமர் சீதை லக்ஷ்மணனுடன் அவரைக்காண வந்திருப்பதாகக் கூறியதும் அகஸ்த்யர் தான் அவருடைய தரிசனத்திற்காகவே காத்திருப்பதாகக் கூறி வெளியே வந்து ராமரை அன்புடன் ஆலிங்கனம் செய்து மகிழ்ச்சியுடன் ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்று பூஜித்து தனிமையில் இவ்வாறு கூறினார்.
நாராயணராகிய அவர் ராவண வதத்தின் பொருட்டு பூமியில் அவதரிக்க போவதை அறிந்து ராமனின் வரவிற்காகக் காத்திருப்பதாகவும் ராமனின நாமத்தையே தியானம் செய்தவாறு அங்கு வசித்து வருவதாகவும் கூறி, மேலும் ராமனைக் கீழ்க்கண்டவாறு துதித்தார்.
"சிருஷ்டி ஆரம்பத்தில் தாங்கள் நிர்விகல்பராகவும் பேதம் இல்லாதவராகவும் விளங்குகையில் உங்கள் மாயையே மூல பிரகிருதி எனப்படுகிறது. அதிலிருந்து தோன்றிய அஹம்காரமானது மூன்று குணங்களாகப் பரிணமிக்கிறது. அந்த மூன்று குணங்களின் சேர்க்கையால் தோன்றியது இந்த பூதவுலகம்.
முதலில் சூஷ்ம சரீரமாகவும் பின்னர் ஸ்தூல வடிவாகவும் தோன்றிய விராட் புருஷனிடம் இருந்து இந்த பிரபஞ்சம் முழுவதும் உண்டாகியது. மேலும் தங்கள் மாயையின் குணபேதங்களை ஒட்டி தாங்களே ரஜோகுணத்தால் பிரம்மாவாகவும், சத்வ குணத்தால் விஷ்ணு வாகவும்,தமோ குணத்தால் ருத்ரனாகவும் முத்தொழில்களை செய்விக்கிறீர்கள்.
தங்கள் மாயை எப்போதும் வித்யை அவித்யை என்னும் இருவிதமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. உலக விவகாரங்களில் ஈடுபட்டவர்கள் அவித்யைக்கு வசப்பட்டவர்களாகவும் ஞான மார்க்கத்தில் விருப்பம் கொண்டவர் வித்யை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். பக்தர்கள் இரண்டாவது வகையினர்.
அவித்யைக்குள்ளானவர்கள் மீண்டும் மீண்டும் சம்சாரச் சுழலுள் அகப்பட்டு அல்லல் படுகிறார்கள். உங்களிடத்தில் திடமான பக்தி உள்ளவர்களுக்கு ஞானம் உண்டாகிறது. அதனல முக்தி நிலை கிட்டுகிறது. மோக்ஷத்திற்கு சாதனமானது சாதுக்களின் சங்கமே.
சாது என்பவன் இன்பதுன்பத்தில் மகிழ்ச்சியோ கலக்கமோ அடையாமல் சமமான நிலையில் மக்கள் செல்வம் இவற்றில் பற்றின்றி புலனடக்கம் கொண்டவனாவான். இவ்விதமான சாதுக்களின் கூட்டுறவு ஏற்படும்போது தங்கள் குணவைபவங்களைக் கூறும் கதைகளில் ஈடுபாடு உண்டாகி பகவத் பக்தி உதயமாகின்றது. ஆகையால் மோக்ஷத்திற்கு அடிப்படையான சுலபமான சிறந்த மார்க்கம் பக்தியே.
ஆகையால் எனக்கு தங்களிடம் சத்பக்தியானது ஏற்படவேண்டும் என்றும் தங்கள் பக்தர்களின் சத்சங்கம் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்றும் அருள செய்ய வேண்டுகிறேன்.இன்று என் பிறவி பயனுள்ளதாயிற்று. சீதையுடன் கூடிய தங்கள் நினைவு என் ஹ்ருதயத்தில் என்றும் இருக்குமாக."
இவ்விதம் கூறிய அகஸ்த்யர் ராமனிடம் தனக்கு இந்திரனால் அளிக்கப்பட்ட சிறந்த வில்லையும், எடுக்க எடுக்கக் குறையாத அம்பறாத்தூணியையும் ரத்தினம் பதித்த கத்தியையும் கொடுத்துவிட்டு, அங்கு சமீபத்தில் உள்ள பஞ்சவடியில் வசித்து அவதாரகாரியத்தை நிறைவேற்றுமாறு கூறினார். ராமனும் அவரிடம் விடை பெற்று பஞ்சவடியை நோக்கிப் புறப்பட்டார்.
No comments:
Post a Comment