Friday, June 18, 2021

Adhyatma ramayana balakanda ahdyaya 4 in tamil

Courtesy:Dr.Smt.Saroja Ramanujam

அத்யத்ம ராமாயணம் - பாலகாண்டம் -அத்தியாயம் 4
அத்தியாயம் 4

மஹாதேவன் அடுத்து விஸ்வாமித்திரர் வருகையை வர்ணித்தார் .

விஸ்வாமித்திரர் தசரதர் சபைக்கு வருகை தந்ததும் தசரதர் அவரை வரவேற்று அவரைப் போன்ற மகான்களின் வருகை சௌபாக்யத்தைக் கொடுக்கக்கூடியது என்று கூறினார்.

பிறகு விஸ்வாமித்திரர் தான் வந்ததன் காரணம் தன் யாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் அசுரர்களை அழிக்க ராமனைத் தன்னுடன் அனுப்புமாறு கேட்பதற்கு என்று கூற , முதலில் தசரதர் மறுமொழி ஏதும் கூறாமல் வாளாவிருந்தார்.

பிறகு தசரதர் வசிஷ்டரிடம் தனிமையில் தன்னால் ராமனைப் பிரிந்து இருக்க முடியாது என்றும் முனிவரின் சாபத்திற்கு ஆளாகாமல் எப்படி அதை மறுப்பது என்றும் ஆலோசனை கேட்டார்.

அதற்கு வசிஷ்டர் கூறினார்.

"அரசே, கவலை வேண்டாம். நான் இப்போது உங்களிடம் ஒரு தேவ ரகசியத்தைக் கூறப் போகிறேன். பிரம்மன் தேவர்கள் வேண்டுகோளின்படி நாராயணனே ராமனாக அவதரித்துள்ளார்.

கௌசல்யையும் நீங்களும் முன் ஜன்மத்தில் கஸ்யபரும் அதிதியுமாக இருந்தீர்கள். உங்கள் பிரார்த்தனைக்கு இணங்கி பகவான் உங்கள் புதல்வனாக வந்துள்ளார். ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும் , சங்கு சக்கரங்கள் பரதசத்ருக்ன்ர்களாகவும் அவதரித்துள்ளனர்.

யோக மாயையே ஜனகரின் புத்திரி சீதை என உணர்வீர். விஸ்வாமித்திரர் சீதையையும் ராமனையும் சேர்த்து வைத்து பகவானின் அவதாரகாரியத்தை முடிக்கவே வந்துள்ளார். ஆகவே ராமனை லக்ஷ்மணனுடன் முனிவரோடு அனுப்புவீராக."

இதைக் கேட்ட தசரதர் ராமனையும் லக்ஷ்மணனையும் மனமுவந்து விஸ்வாமித்திரருடன் அனுப்பினார். விஸ்வாமித்திரர் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு பசி தாகத்தைப் போக்கும் பலை அதிபலை என்ற மந்திரங்கலை கற்பித்தார். இவ்வாறு அவர்கள் தாடகாவனம் அடைந்தனர்.

தாடகை அந்த பிரதேசத்தில் எல்லோரையும் ஹிம்சித்து வந்ததைக் கூறிய விச்வாமித்திரர் அவள் பெண் என்று கருதாமல் அவளை வதம் செய்யும்படி ராமனிடம் கூறினார்.

உடனே ராமன் வில்லில் நாணேற்றி டங்காரம் செய்ய அதைக்கேட்ட தாடகை கோபத்துடன் எதிர்த்து வந்து மறுக்ஷணம் அவனுடைய பாணத்தால் அடிபட்டு விழுந்தாள். அப்போது அவளிருந்த இடத்தில் ஒரு அழகிய யக்ஷ ஸ்த்ரீ தோன்றி ராமனால் தனக்கு சாபவிமோசனம் ஏற்பட்டதாகக் கூறினாள்.

விஸ்வாமித்திரர் ராமனுடைய வீரத்தைக் கண்டு சந்தோஷம் அடைந்து எல்லாவிதமான அஸ்திர சஸ்திரங்களையும் அவனுக்குக் கற்பித்தார்.

No comments:

Post a Comment