Friday, May 7, 2021

Somersault -Periyavaa

கடவுளின் குரல் - தொகுப்பு: ஆர். நாகராஜன்          
25 /11 /2020 குமுதம் இதழிலிருந்து...

""ஆசார்யாளின் அனுஷ்டான சமயத்தில் உருண்டு விழுந்த அண்டா!""

மகாபெரியவர் அனுபவத்தில் சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் மட்டுமல்லாமல், சிரிக்க வைக்கும் நிகழ்வுகளும் ஏராளம் நடந்துள்ளன. அத்தகையவற்றுள் ஒன்றைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

மகாபெரியவர் தினமும் விழித்தெழுந்ததும் காலைக்கடன்களை முடித்துவிட்டு, நீராடும்போதும் அதன் பிறகும் சில ஆசார அனுஷ்டானங்களைக் கடைபிடிப்பார். 

அவற்றைச் செய்வதற்கு அவருடன் துணையாக ஸ்ரீமடத்தின் ஊழியர் ஒருவரும் செல்வார். மகான் அனுஷ்டானங்களைச் செய்வதற்கு உதவியாக அவர் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுப்பது, அன்றைய பஞ்சாங்கத்தில் உள்ள குறிப்புகளைச் சொல்வது போன்றவற்றையெல்லாம் செய்வார் அவர். 

வழக்கமாக மகானுடன் அப்படித் துணைக்குச் செல்லும் தொண்டர் ஒருவருக்கு மறுநாள் கொஞ்சம் அவசர வேலை இருந்ததால், தனக்கு பதிலாக வேறொருவரை அந்தப் பணியை மேற்கொள்ளச் சொல்லி முதல்நாள் இரவே சொல்லி வைத்தார். அதோடு, மகானுடன் செல்லும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினார். 

இந்த சமயத்தில் முக்கியமான விஷயம் ஒன்றை மறந்துபோனார் அந்தத் தொண்டர். அது, மறுநாள், மகான் மௌன விரதம் கடைபிடிக்கும் தினம்.

அதனால், விழித்து எழுந்தது முதல் ஒரு வார்த்தைகூட பேசமாட்டார் அவர். அவசியமானால் மட்டுமே சைகையில் தெரிவிப்பார். நாம்தான் அதை புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் சொல்ல மறந்துவிட்டார் அவர். மறுநாள் விடியற்காலையில் வழக்கம்போல் எழுந்தார் மகான். ஸ்நானம் செய்யப் புறப்பட்டார். புதிய தொண்டர் முதல்நாளே எல்லாவற்றையும் எடுத்து வைத்திருந்ததால், அவரது தேவைகளை அவர் கேட்பதற்கு முன்பாகவே வரிசையாக கொடுத்துக் கொண்டிருந்தார். அமைதியாக நீராடிவிட்டு வந்த மகான், அனுஷ்டானங்களைச் செய்வதற்கு அமர்ந்தார். 

அந்த சமயத்தில் பஞ்சாங்கத்தில் உள்ள அன்றைய தினக் குறிப்புகளைப் படிக்க வேண்டும். அதைக் கேட்டு, திதி, வாரம், நட்சத்திரம் முதலானவற்றைச் சொல்லி சங்கல்பம் (பிரார்த்தனை) செய்துவிட்டு, அனுஷ்டானத்தைத் தொடங்குவார் மகான். ஆனால், எல்லாவற்றிலும் தயாராக இருந்த புதிய தொண்டர், இந்தப் பஞ்சாங்க விஷயத்தை மட்டும் எப்படியோ மறந்திருந்தார். மௌன விரதம் என்பதால், எதுவும் பேசாமல், ஒரு முறைக்கு இருமுறை அவரைத் திரும்பிப் பார்த்தார் மகான். 

அவர் கையில் பஞ்சாங்கம் இல்லை என்பதையும் அவர் புதியவர் என்பதையும் புரிந்து கொண்டவர், முதல் நாள் செய்த சங்கல்பத்தை நினைவுபடுத்திக் கொண்டு, அன்றைய தினம் என்ன திதி, நட்சத்திரம் முதலானவை இருக்கும் என யூகித்து தாமாகவே சங்கல்பம் செய்யத் தொடங்கிவிட்டார்.

எல்லாம் முடித்து அனுஷ்டானத்தைத் தொடங்கும் சமயத்தில் மகானுக்கு ஏதோ ஒரு சந்தேகம் தோன்ற, விரல் சொடுக்கித் தொண்டரை அழைத்தார். 

தலையைக் கீழே தாழ்த்தி, கையைப் புரட்டிக் காட்டி, என்ன? என்பதுபோல் ஜாடை செய்தார். 

புதிய தொண்டருக்கு ஒன்றும் புரியவில்லை. திருதிரு என்று விழித்தார்.

அவருக்கு சரியாகப் புரியவில்லை என்று உணர்ந்து கொண்ட ஆசார்யர் மறுபடியும் அதே சைகையைக் காட்டினார். அதை உன்னிப்பாகப் பார்த்த தொண்டர், ஏதோ புரிந்து கொண்டவர்போல தலையை ஆட்டிவிட்டு உற்சாகமாக கீழே குனிந்தார். கையைக் கீழே ஊன்றி ஒருமுறை குட்டிக் கரணம் அடித்தார். அதே வேகத்தில் தடுமாறி உருண்டு, ஆசார்யா ஸ்நானம் செய்ய நீர் நிரப்பி வைத்திருந்த அண்டாவில் போய் விழுந்தார். 

அந்த வேகத்தில் அண்டா பெரிய சத்தத்தோடு விழுந்து உருண்டது. மிச்சம் இருந்த தண்ணீர் வழிந்து ஓடியது. சத்தம் கேட்டு அவசர அவசரமாக ஓடி வந்தார்கள் அணுக்கத் தொண்டர்கள்.

இதற்குள் விழுந்த தொண்டர் எழுந்து அசடுவழிய ஆசார்யா முன் நின்றார். மென்மையாகப் புன்னகைத்த மகான், மறுபடியும் அதே சைகையைக் காட்ட, இன்னொரு முறை குட்டிக்கரணமா? என்று யோசித்த அவர், மறுபடியும் தலையைக் கீழே குனிந்தார். 

அதற்குள் சுதாரித்துக் கொண்ட மற்றொரு தொண்டர் அவரைத் தடுத்துவிட்டு, மகானின் திருமுகத்தைப் பார்த்தார். தனது காதினைக் கையால் தொடுவதுபோல் பாவனை செய்தார், பரமாசார்யா.     

அதை உணர்ந்து கொண்ட தொண்டர் உள்ளே சென்று பஞ்சாங்கத்தை எடுத்துவந்தார். அதில் அன்றைய தினத்துக்கு உரிய கரணம் என்ன என்பதை உரக்க வாசித்தார். அதைக் கேட்டு, "சரி" என்பதுபோல் தலையாட்டிய மகான், அனுஷ்டானத்தைச் செய்துவிட்டு எழுந்தார். 

பஞ்சாங்கத்தில் உள்ள முக்கியமான திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பதில் உள்ள கரணம் என்ன என்று, அனுஷ்டான சமயத்தில் மகான் ஜாடையில் கேட்டதை குட்டிக்கரணம் போடச் சொல்கிறார் என்று புரிந்து கொண்டு தொண்டர் செய்ததையும், அண்டாவை உருட்டியதையும் பலகாலம் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டார்கள் ஸ்ரீமடத்துத் தொண்டர்கள்.      

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!
காஞ்சி சங்கர! காமகோடி சங்கர! காமாட்சி சங்கர!!
ஓம் ஸ்ரீ மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!
அப்படி குட்டிக் கரணம்
அடித்த அந்த அன்பர் வேறு யாருமில்லை.

மஹா பெரியவாளின்
அன்பிற்கும், அபிமானத்திற்கும் ஏக போகமாக விளங்கிய
ப்ரம்ஹஸ்ரீ வேதபுரி ஸாஸ்திரிகள் தான்.
கள்ளம் கபடு அற்ற
குழந்தை நெஞ்சத்தினர்.

சின்னஞ்சிறு வயதிலேயே *மஹா பெரியவாளே கதி* என்று சரணடைந்தவர்

ராம்! ராம்!!

No comments:

Post a Comment