Friday, May 7, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 41 to 44 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam

41.வ்யவஸாயாத்மிகா புத்தி: ஏகேஹ குருநந்தன
பஹுசாகா: ஹி அனந்தாஸ்ச புத்த்ய: அவ்யவஸாயினாம்
குருநந்தன-அர்ஜுனா,இஹ – இந்த கர்ம யோகத்தில் ,வ்யவஸாயாத்மிக புத்தி:-நிச்சயமான புத்தி , ஏக: - ஒன்றுதான். அவ்யவஸாயினாம் – கர்ம பலனில் விருப்பம் கொண்டு நிச்ச்யமான புத்தி இல்லாதவர்களுடைய , புத்தய:ஹி- புத்தியோவென்றால், பஹுசாகா: -பல நோக்கங்கள் கொண்டதாகவும், அனந்தா: ச-முடிவற்றதாகவும் இருக்கிறது.
.39ஆவது ஸ்லோகத்தில் கூறியபடி கர்மயோகத்தில் நிலை பெற்ற புத்தியுடையவர்கள் கர்மபந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள் . அதுவே இங்கு வ்யவஸாயாத்மிகா புத்தி: எனப்படுகிறது. இந்த நிச்சய புத்தியில்லையேல் மனம் எண்ணற்ற ஆசைகளுடன் அலை பாய்கிறது. இதையே பல நோக்கங்கள் கொண்டது என்றும் முடிவற்றது என்றும் கூறுகிறார்.ஆசைக்கு முடிவேது?
வேதத்திலும் சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கும் கர்மங்களும் பலனை எதிர்பார்த்து செய்யப்படுமானால் அவை கர்மபந்தத்தையே விளைவிக்கும்.இது அடுத்து வரும் ஸ்லோகங்களில் விளக்கப்படுகிறது.
42. யாம் இமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்தி அவிபஸ்சித:
வேத வாதரதா: பார்த்த நான்யதஸ்தி இதிவாதின:
43.காமாத்மன: ஸ்வர்கபரா: ஜன்ம கர்ம பலப்ரதாம்
க்ரியாவிசேஷ பஹுலாம் போகைச்வர்யகதிம் ப்ரதி ,
பார்த்த –அர்ஜுனா, காமாத்மான: -போகங்களில் மூழ்கியவர்களாக ,வேத வாத ரதா: - கர்ம பயன்களைக் கூறுகின்ற வேத வாக்கியங்களில் ப்ரியம் வைப்பவர்களான,ஸ்வர்கபரா: -ஸ்வர்கத்தில் ஆசை கொண்டு, அன்யத் ந அஸ்தி- அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை , இதி- என்று , வாதின: -வாதம் செய்பவர்களான, அவிபஸ்சித:-அறிவிலிகள் , ஜன்ம கர்ம பலப்ரதாம் – கர்மங்களின் மூலம் பிறவியை அளிக்கும், போகைஸ்வர்ய கதிம் ப்ரதி-போகங்கள் செல்வம் இவற்றை அளிக்கும் , க்ரியாவிசேஷபஹுலாம் –பல கர்மங்களைக் கூறுகின்ற , புஷ்பிதாம் – மலர்போன்று மகிழ்விக்கும், யா இமாம் வாசம் – இவ்விதமான பேச்சை , ப்ரவதந்தி- பேசுகிறார்கள்.
44. போகைஸ்வர்ய ப்ரஸக்தானாம் தயா அபஹ்ருத சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே
. போகைஸ்வர்ய ப்ரஸக்தானாம்-போகத்திலும் செல்வத்திலும் பற்றுள்ளவர்களுக்கு, ஸமாதௌ – முக்தியில், வ்யவஸாயாத்மிகா புத்தி: -நிலைபெற்ற புத்தி, ந விதீயதே- உண்டாவதில்லை.
வேதத்தின் முற்பகுதி யாக யக்ஞங்கள் மற்றும் பல கர்மங்கள் இவைகளைக் கொண்டது. இது கர்ம காண்டம் எனப்ப்டும். இதில் ஒவ்வொரு கர்மாவிற்கும் பலன் கூறப்பட்டுள்ளது. இதை பின்பற்றுபவர்கள் பூர்வ மீமாம்சகர் எனப்படுவர்.
பூர்வ மீமாம்சகர்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களை ஆதரிப்பவர்கள். மந்திர, மதச்சடங்குகள், மதச்சடங்குகளில் பல்வேறு தேவர்களை அவர்கள் வழிபட்டார்கள். ஒவ்வொரு யக்ஞத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு. அவர்கள் அக்னி, வருணன், இந்திரன், வசுக்கள், வாயு முதலிய இயற்கைச் சக்திகள். இச்சக்திகளை மனித உருவம் கொடுத்து, படிமங்கள் இன்றியே அவர்கள் வழிபட்டார்கள். 'ஒருவனே தேவன்' என்ற கடவுள் கொள்கை அவர்களுடைய சிந்தனையில் இல்லை. கடவுளை வேண்டாமல், தாங்கள் செய்யும் கர்மமே (யாகங்கள்) பயனளிக்கும் என்ற கொள்கை உடையவர்கள்.
வேதத்தின் பின் பகுதி ஞான காண்டம் அல்லது உத்தர மீமாம்சம் எனப்படும்., உத்தர மீமாம்சத்தை தொகுத்தவர் வியாசர். நான்கு வேதங்களின் இறுதியில் உள்ள வேதாந்தங்களான உபநிடதங்களை உத்தர மீமாம்சம் என்பர். உத்தர மீமாம்சகர்கள் வேதங்களில் சொல்லிய வேள்விகளுக்கும், சடங்குகளுக்கு முக்கியத்தவம் தராமல் உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம், பகவத் கீதை போன்ற வேதாந்தங்களில் சொல்லியுள்ள கருத்துக்களின் கொள்கை உடையவர்கள். ஞானயோகத்தினால் மட்டுமே நிர்குணபிரம்மத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையாளர்கள்.
இங்கு பகவான் வேதங்களில் கூறப்பட்ட மந்திரம் சடங்குகள் இவைகள் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எல்லாமே பலனை எதிர்பாராமல் செய்தால் மட்டுமே பிறவித்தளையிலிருந்து விடுபடமுடியும் என்று வலியுறுத்துகிறார். வேதத்தில் கூறிய பலங்களுக்கெல்லாம் மேலான பலனாகிய ஸ்வர்கவாசமும் நிரந்தர மானதல்ல. 'க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி,' என்று பின்னால் கூறுவது போல், செய்த புண்ய பலன் தீர்ந்தவுடன் மறுபடி பிறவி வாய்க்கிறது. இவ்வாறு ஜனன மரணச்சுழலில் இருந்து விடுதலை பெற ப்ரம்ம ஞானத்தை அடையவேண்டும் என்று கூறுகிறார்.

No comments:

Post a Comment