Thursday, May 6, 2021

Short story of Leo Tolstoy

லியோ டால்ஸ்டாய் --- J K SIVAN
''எனக்கு ஒண்ணும் தெரியாதுங்களே''
இது நான் சுருக்கமாக சொல்லும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய ''GOD SEES THE TRUTH BUT WAITS'' என்ற சிறுகதை. தமிழில் அதை சொல்லும்போது தமிழர்களை உள்ளே சேர்த்து விட்டேன். நம்மூர் கதை மாதிரி சுகமாக இருக்குமே..
சுப்புணி ஒரு வாலிப வியாபாரி. ரெண்டு மூன்று கடைகள். கொட்டாம்பட்டியில் வீடு வாசல். 30 வயதில் குப்பம்மாவோடு கல்யாணம். நன்றாக புல்லாங்குழல் வாசிப்பான். ஆரம்பத்தில் குடி,சீட்டு போன்ற கெட்ட பழக்கம் இருந்தாலும் குப்பம்மா வந்த பிறகு பெட்டிப்பாம்பு. ரெண்டு குழந்தைகள். நிறைய சம்பாதிக்க ஏதாவது செய்யணுமே? வடக்கே டெல்லி பக்கம் சென்று நிறைய சாமான்கள் வாங்கி வந்து லாபத்துக்கு விற்றால் குடும்பம் ஓடுமே. சேர்த்து வைத்த ஐம்பதாயிரம் ரூபாயை துணியில் மூட்டை கட்டி இடுப்பில்சுற்றிக்கொண்டு ''குப்பாயி , நான் புறப்படறேன்'' என்று வாசலை நோக்கி நடந்தான். .
'' வேண்டாம் இன்னிக்கு நீங்க போகவேண்டாம். உள்ளூர எனக்கு என்னவோ சொல்லத்தெரியாத பயமா இருக்கு'' கண்ணில் ஜாலம். ரெண்டு குட்டி குழந்தைகளும் வேறு அழுதன.
''ஏன் தடுக்கறே'?
''என்னிக்கும் இல்லாம விடிகாலை ஒரு கெட்ட கனா. திரும்பி வரும்போது நீங்க கிழடு தட்டிப்போய் தலையெல்லாம் வெள்ளை முடி தாடி மீசையா இருக்கிறமாதிரி . பயமா இருக்கு. இது நல்ல சகுனம் இல்லை. இன்னிக்கு போகவேணாம் ''
''அடி அசடே. வெள்ளை தாடி முடி இருந்திச்சின்னா நல்ல அனுபவஸ்தன், அறிவாளி என்று என்னை நாலு பேரு பெருமையா பேசுவாங்க. நல்லது தான். வரும்போது உனக்கும் பசங்களுக்கும் நிறைய துணிமணி, நகை எல்லாம் டெல்லிலே வாங்கிட்டு வரேன் '. சுப்புணி கிளம்பிவிட்டான்.
அன்று இரவு போகும் வழியில் ஆந்திராவில் எங்கோ ஒரு ஊரில் இரவு தங்க ஒரு சத்திரம் கண்டு பிடித்தான். திண்ணையில் இடம் கிடைத்தது. பண மூட்டையை ஜாக்கிரதையாக பைக்குள் வைத்து தலைக்கு வைத்துக் கொண்டு அந்த தெலுங்கு ஊரில் தங்கினான். கோவிந்தன் என்ற வேறு ஒரு மதுரை வியாபாரியும் அங்கு வந்திருந்தான்.அவனும் சுப்புணியும் நட்புடன் பேசி இரவு சாப்பிட்டு விட்டு திண்ணையில் தூங்கினார்கள்.
விடிகாலை அந்த சத்திரத்தை விட்டு சுப்புணி கிளம்பும்போது கோவிந்தன் அசையாமல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். ஆகவே அவனை எழுப்பி விடை பெறாமல் கிளம்பினான். சுப்புணி சென்று ரெண்டு மணி நேரம் கூட ஆகவில்லை. இன்னொரு ஊரில் ஒரு விடுதியில் குளித்து சாப்பிட்டுவிட்டு வாசலில் அவன் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்த போது சில போலீஸ்காரர்கள் அவனை நெருங்கி னார்கள்.அவர்கள் பார்வை விரோதமாக இருந்தது. சுப்புணியை வளைத்துக் கொண்டார்கள்.
'' உன் பெயர் என்ன?
''சுப்பிரமணி''
''நேற்றிரவு எங்கே தங்கினாய்?''
''பாலு ரெட்டி சத்திரத்தில்.''
''கோவிந்தனை எத்தனை நாளாக தெரியும். அவனுடன் என்ன தகராறு?''
''கோவிந்தன் என்ற ஒரு ஆளை நேற்று ராத்திரிதான் முதன் முதலாக என் வாழ்வில் பார்த்தேன். இருவரும் சேர்ந்து தான் சத்திரத்தில் சாப்பிட்டோம்.பேசிக்கொண்டே தூங்கிப்போனேன்''
''ஐம்பதாயிரம் ரூபாயை திருடிவிட்டு கொலையும் செய்து விட்டு பச்சை புளுகு வேறேயா?
அதற்குள் ஒரு போலீஸ் காரன் சுப்புணி பையை சோதனை போட்டு ஐம்பதாயிரம் ரூபாயோடு ஒரு ரத்தம் தோய்ந்த கத்தியும் வெளியே எடுத்தான்.
'' ஐயோ, எனக்கு ஒன்றும் தெரியாதே. நான் கிளம்பும்போது கோவிந்தன் படுத்துக்கொண்டிருந்தானே. நான் திருடவில்லை. என் பணம் இது. வடக்கே டில்லி வரை போய் சாமான்கள் வியாபாரத்துக்கு வாங்க சேர்த்து வைத்த பணம். நான் கொலை செய்யவில்லை. கோவிந்தனை யார் என்றே எனக்கு தெரியாது. இந்த கத்தி எனதல்ல'' . சாட்டையால் அடித்தார்கள். அப்போதும் கத்திக்கொண்டே திருப்பி திருப்பி சொன்னதையே சொன்னான். அழுதும் அவன் பேச்சு எடுபடவில்லை. நீதி மன்றத்திலும் அவன் வாக்கு நம்பப்படவில்லை. ஊரில் விசாரித்ததில் அவன் சீட்டு, குடி பழக்கம் கொண்டவன் என்று அவனைத் தெரிந்தவர்கள் சொல்லி விட்டார்கள். எங்கோ தனிச்சிறையில் அடைக்கப்பட்டான். வருஷங்கள் ஓடின. ஊரிலே இருந்து எந்த சேதியும் இல்லை. கிட்டத்தட்ட இருபது வருஷங்களில் அவன் வெள்ளை நிற தாடி மீசை முடி கொண்டவனாகிவிட்டான். அமைதியானவன். சிறையில் .ஜெயில் அதிகாரிகளும் மற்ற கைதிகளும் அவன் கதையை கேட்டு பரிதாபப் பட்டார்கள். மேல் அதிகாரிகளுக்கு ஜனாபதிக்கு எல்லாம் விண்ணப்பித்தார்கள். கடவுள் இருக்கிறார் விதி என்ன செயகிறதோ அப்படியே நடக்கட்டும் என்று சுப்புணி வேதாந்தியாகிவிட்டான். விடுதலை கிடைக்கவில்லை. யார் கோவிந்தனை கொன்றது. ரத்தம் தோய்ந்த கத்தி எப்படி அவன் மூட்டைக்குள் வந்தது? இந்த கேள்விக்கு பதில் 19 வருஷம் ஆகியும் இன்னும் கிடைக்கவில்லை.
ஒருநாள் சிறையில் சில புதிய கைதிகள் வந்தார்கள். சாமா நாயுடு முரடன். ஐந்து வயதிலிருந்தே ஆடு கோழி திருடுபவன். அவன் செய்யாத குற்றங்கள் கிடையாது. பல நாள் திருடன் ஒருநாள் ஒரு பெண்ணின் செயினை அறுக்கும்போது பிடிபட்டான். அவனை சுப்புணியின் அறையில் அடைதார்கள்.
'' நீ எந்த ஊர்?''
''பாலு ரெட்டி சத்திரம்.''
சொரேர் என்றது சுப்புணிக்கு.
''அங்கு 19வருஷங்கள் முன்பு ஒரு கொலை நடந்ததே உனக்கு தெரியுமா?''.
ஆஹா நன்றாக தெரியுமே. கொலை என்ன தினமுமா ஒரு இடத்திலே நடக்கும். எவனோ ஒரு வியாபாரியை கத்தியால் குத்தி கொன்று ஐம்பதாயிரம் ரூபாய் பணம் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டான்'' என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
''கொலைகாரன் யாரென்று தெரியுமா?
''அவனை பிடித்து விட்டார்கள் அவன் மூட்டையில் கத்தி கிடைத்ததாம்''
'' கொலைகாரன் இன்னொருத்தன் மூட்டையில் கத்தியை செருகி விட்டு சென்றிருக்கலாமே ''
''அதெப்படிங்க முடியும். எவனோ ஒருத்தன் தலைக்கு அடியிலே வைச்சு இருக்கிற மூட்டையை பிரித்து அதில் ஒரு கத்தியை செருகி வைத்துவிட்டு போகும் வரை கும்பகர்ணன் மாதிரி தூங்கினால் அகப்பட்டுக் கொள்ளத் தானே வேண்டும். ''
இவ்வளவு துல்லியமாக நடந்ததை சொல்லும் இந்த சாமாநாயுடு தான் கொலைகாரன் என்று சுப்புணிக்கு ஊர்ஜிதம் ஆயிற்று. ஆனால் தனது விதியை நொந்து அமைதியாக இருந்தான்.
சிலநாட்களில் ஏதோ தகராறு வந்து சிறையில் மற்றொரு கைதியின் கழுத்தை நெரித்து சாமா நாயுடு கழுத்தை ஒடித்து விட்டான். கழுத்தொடிந்தவன் ஆஸ்பத்திரியில செத்துவிட்டான் என்று சேதி. நாயுடு ஒருவன் கழுத்தை நெரித்ததை சுப்புணி பார்த்துவிட்டான்.
''என்னைக் காட்டிக் கொடுக்காதே'' என்று நாயுடு சுப்புணி காலைப் பிடித்து கெஞ்சினான்''
போலீஸ் விசாரணையில் சுப்புணியை அதிகாரிகள் கேட்டபோது '' எனக்கு தெரியாது நான் பார்க்க வில்லை'' என்றான் சுப்புணி. சிறை அதிகாரிகளுக்கு சுப்புணி மேல் இருந்த மதிப்பு மரியாதையால் நாயுடு தப்பினான். அன்றிரவு அழுதான். தான் தான் கோவிந்தனை கொலை செய்தவன் பணத்தை திருடியவன். அருகே இருந்த சுப்புணியையும் கொன்று விட்டு அவன் முட்டையையும் எடுத்து செல்ல முயன்றபோது அந்தப்பக்கம் யாரோ வரும் சத்தம் கேட்டு ரத்தம் தோய்ந்த கத்தியை சுப்புணி பையில் அவசரமாக ஒளித்துவைத்து விட்டு ஓடினதை சொன்னான்.
''எனக்கு தெரியும் நீ செய்தது '' என்று அமைதியாக சொன்னான் சுப்புணி. பல வருஷ உண்மை அன்று ருசுவாகியது. . அன்றிரவெல்லாம் நாயுடு அழுதான்.ஒரு நிரபராதி, நல்லவன், 20வருஷங்கள் தன்னால் குடும்பம், மனைவி மக்கள் வாழ்வு எல்லாம் இழந்ததுமல்லாமல் தன் உயிரையும் காப்பாற்றியவன், அவனுக்கு தான் செய்த துரோகத்தை நினைத்து வருந்தினான். இரவெல்லாம் அழுதான். அவனுள் இருந்த மிருகம் வெளியேறி அவன் மனதில் தேவன் குடி புகுந்தான்.
மறுநாள் காலை சிறை அதிகாரிகளிடம் தான் செய்த இரு குற்றங்களையும் நேரடியாக ஒப்புக்கொண்டு தன்னை தண்டிக்க வேண்டினான். சுப்புணி நிரபராதி அவன் சொன்னது உண்மை என்று சத்யம் செய்தான். சிறை அதிகாரிகள் கலந்து ஆலோசித்தார்கள். கடைசியில்
''இப்போதாவது சுப்புணியை விடுதலை செய்வோம்'' என்று அதிகாரிகள் முடிவெடுத்தார்கள். எல்லோரும் கொஞ்சம் பணம் போட்டு, மொத்தம் ஐம்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது. அதை அவனிடம் சேர்த்து அவன் வயோதிகவாழ்வில் நிம்மதியாக வாழட்டும்'' என்று சிறையில் அவன் அறைக்கு சென்றார்கள்.
சுப்பிரமணி சுப்பிரமணி என்று அமைதியாக படுத்துக் கொண்டிருந்த அவனை எழுப்பினார்கள். உடல் மரக்கட்டை போல் அசைந்ததே தவிர சுப்புணியின் உயிர் அவன் உடலை விட்டு அவர்கள் அவன் உடலை விடுதலை செய்யும் முன்பே எப்போதோ விடுதலை ஆகி இருந்தது.

No comments:

Post a Comment