Friday, May 14, 2021

Raghavendra temple at Triplicane

திருவல்லிக்கேணி ராகவேந்திர ஆலயம்
J K SIVAN

நமது சென்னையில் சில அபூர்வ அதிசய புண்ய ஸ்தலங்கள் இருப்பது தெரியுமா? கோவில்கள் பெயரை யெல்லாம் வரிசையாக எனக்கு சொல்லாதீர்கள். எனக்கும் தெரியும் . ஆனால் நான் அறிந்துகொண்ட புதிய சில விஷயங்களை மட்டுமே அவ்வப்போது சொல்கிறேன். அதில் இதுவும் ஒன்று.
நமது திருவல்லிக்கேணி ''கைரவிணி'' க்ஷேத்ரம் என்று சமஸ்க்ரிதத்தில் பெயர் பெற்றது. கைரவிணி தான் அல்லிக்குளம் . அல்லிக்கேணி. அங்கே ஒரு பிருந்தாவனம் வரவேண்டும் என்று ராகவேந்திர ஸ்வாமிகள் எண்ணம் கொண்டது தெரியுமா. அதை அந்த மஹான் எப்படி ஒரு பக்தர் மூலம் நிறைவேற்றினார் என்று தெரியுமா? அது தான் இன்றைய விஷயம்,. இல்லை அதிசயம்.

ராஜா வேங்கடராகவேந்திராசார் என்ற நீளமான பெயர் கொண்ட ஒரு ஆச்சாரமான மாத்வர். இனி அவரை ரா.வே.சார் என்று குறிப்பிடுவோம். அவர் '' பீகமுத்ரே'' குடும்பத்தில் கௌதம கோத்திரத்தில் பிறந்தவர். குருராஜர் பரம்பரை. மந்திராலய மகானிடம் அதீத பக்தி. அப்போதைய மந்த்ராலய பிருந்தாவன சந்நிதி பீடாதிபதி ஸ்ரீ சுயமீந்திர தீர்த்தர் . ரா. வ. சாருக்கு பிள்ளைப்பிராயத்தில் வேத சாஸ்திரம் எல்லாம் சொல்லிக்கொடுத்தவர் அவருடைய தாத்தா ஹூலி ஹனுமந்தாச்சார்யா. ரா.வே.சார் ரொம்ப ஆசாரமானவர். நித்ய கர்மானுஷ்டங்களை விடாதவர். சாஸ்த்ர சம்பிரதாயங்களில் விற்பன்னர். பக்தர். இந்தமாதிரி நன்றாக கல்வி ஞானம், பண்பாடு, சம்ப்ரதாயம் கடைபிடிக்கும் க்ரிஷ்ண பக்த, ராகவேந்திர உபாஸக மாத்வரை மந்த்ராலய பீடாதிபதி சுயமீந்த்ர தீர்த்தர் விடுவாரா. ரா.வே.சாரை பிருந்தாவன சந்நிதான திவானாக்கிவிட்டார் மந்த்ராலயத்தில் பிருந்தாவன சந்நிதானத்தின் சர்வாதிகாரி தர்மாதிகாரி நிர்வாக பொறுப்பு தரப்பட்டது.
1945-46ல் திவான் ரா.வே.சார் மதராசுக்கு தனது உத்யோக விஷயமாக அதிகாரிகளை சந்திக்க இங்கே வந்தார். வந்தவருக்கு பார்த்தசாரதி திருவல்லிக்கேணி என்ற இடத்தில் கோயில் கொண்டு இருக்கிறார் என்று தெரியவந்தது. திருவல்லிக்கேணி என்ற பெயர் ஆச்சர்யமாக இருந்தது ரா.வே.சாருக்கு.
கைரவிணி என்று ஸமஸ்க்ரிதத்திலும் தூய தமிழில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திரு அல்லிக் கேணி தான் இப்போதைய ட்ரிப்ளிகேன். ஒருகாலத்தில் பிரிந்தாரண்யமாக துளசிவனமாக இருந்த ஸ்தலம் என்று ரா.வே. சார் கேள்விப்பட்டிருக்கிறார். நினைத்து பார்க்கமுடியுமா இப்போது? நினைத்துக்கொண்டு எங்காவது சற்று மறந்து நின்றால் ஏதோ வேகமாக ஒரு வாஹனம் கண் மூடி திறக்கும் நேரத்தில் நம் மீது ஏறி பிரிந்தாவனத்துக்கு அனுப்பிவிடும்.

வேங்கடகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக கைங்கர்யம் புரிந்தார். பார்த்தனுக்கு சாரதி. அதனால் திருவல்லிக்கேணியில் நிறைய பேருக்கு வேங்கடகிருஷ்ணன் என்று பெயர். வேங்கடகிருஷ்ணன் கதை ஒன்று இருக்கிறது அப்புறம் சொல்கிறேன்.

திருவல்லிக்கேணியில் ஸ்ரீ Rukmini சமேத பார்த்தசாரதி தரிசனம் செய்த ரா.வே.சாருக்கு திருவல்லிக் கேணி
அமைதியாக எங்கும் மயில்கள் ஆடும் குயில்கள் பாடும், மரங்கள், மாட மாளிகைகள் ஆங்காங்கே சூழ்ந்த நந்த வன நகரமாக அற்புதமாக பார்த்தசாரதிக்கு உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயத்தோடு விஸ்தாரமாக இருக்கிறதே .
''இந்த புண்ய ஸ்தலத்தில் ரம்யமான சூழ்நிலையில் ஒரு ராகவேந்திர பிருந்தாவனமும் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று திடீரென்று ரா.வே.சாருக்கு தோன்றியது. நல்ல எண்ணம் தான், எங்கே இடம் தேடுவது, யாரிடம் கேட்பது, எவ்வளவு ஆகும், யார் கொடுப்பார்கள். நாம் இந்த ஊர் இல்லையே, நமக்கு எவரையும் தெரியாதே. இந்த இடத்தை விட மனமே இல்லையே. குருராஜர் அருள் புரிவாரா? ராகவேந்திர சுவாமி, உங்களால் தான் இந்த எண்ணமே என் மனதில் தோன்றியிருக்கிறது. திடீரென்று இப்படி எனக்கு தோன்றுவானேன்?''
இந்த எண்ணம் ரா. வே. சாருக்கு எப்போது தோன்றியது என்றால் பார்த்தசாரதியை தரிசனம் செய்துவிட்டு பிரஹாரத்தில் ப்ரதக்ஷிணம் வரும்போது.
ஆலயத்தின் பின்புற வாசல் வழி துளசிங்கபெருமாள் கோவில் தெருவில் உள்ளதால் அங்கே வந்தார். மனது இவ்வாறு நினைக்க வாய் மந்த்ரங்கள் ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருந்தது.
அப்போது தான் அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. யார் இவர் ஒரு மத்வ சந்நியாசி? சற்று தூரத்தில் நிற்கிறார். கோவிலில் கூட்டமே இல்லை, அவரைப் பார்க்கவில்லையே , எப்படி திடீரென்று இவர் ? அந்த சந்நியாசி மெதுவாக நடந்தார். திரும்பி பார்த்து ''என் பின்னாலே வா'' என்று ஒரு ஜாடை காட்டுவது போல் இருந்ததால் காந்தம் போல் அவர் பின்னாலேயே ரா.வே.சார் நடந்தார். சற்று நடந்தது ஆறு ஏழு கட்டடங்கள் தாண்டி ஒரு வீட்டு வாசலில் நின்றார். ரா.வே.சார் நெருங்கி வந்தார். சந்நியாசி அந்த வீட்டுக்குள் சென்றார்.அங்கே ஒரு இடத்தில் சிலையாக நின்றார். ஆச்சர்யமாக அருகே சென்ற ரா.வே.சார் கண் முன் நின்ற அந்த சந்நியாசியை காணவில்லை.
மதராஸ் பட்டினத்தில் வந்த வேலை முடிந்து திவான் ரா.வே. சார் மந்திராலயம் திரும்பினார். பீடாதிபதி தனது குருநாதர் சுயமீந்திர தீர்த்தரிடம் திருவல்லிக்கேணி சம்பவத்தை விவரித்தார்.

குருநாதரும் இதில் ஏதோ தெய்வீக கட்டளை நமக்கு இருக்கிறது. ஸ்ரீ ராகவேந்திரர் திருவல்லிக்கேணியில் ஒரு ம்ரித்திகா பிருந்தாவனம் எழும்பவேண்டும் என்று சங்கல்பம் செய்துவிட்டார் என்று தெரிகிறது. எப்படி நிறைவேற்றப்போகிறோம்?
இதில் ஏதோ ரஹஸ்யம் இருக்கிறது. என் மனதில் தோன்றிய எண்ணம், அதை தொடர்ந்து நிகழ்ந்த இந்த சந்நியாசி தரிசனம் ரெண்டையும் சேர்த்து பார்த்தால்....
17ம் நூற்றாண்டில் நடந்த சம்பவம் சுயமீந்திரரின் நினைவுக்கு வந்தது. திவான் வெங்கண்ணா மூலம் மந்திராலயம் பிரிந்தா வனத்துக்கு ஏற்ற இடம் சுல்தானிடமிருந்து பெற்றுக்கொடுத்தது குரு ராஜர் ராகவேந்திரர் இல்லையா?
பிருந்தாவனம் அமைக்க கற்கள் கொண்டுவந்தபோது இதுவல்ல என்று திவானுக்கு எங்கிருந்து கற்கள் வரவேண்டும் என்று சொன்னதும் அவரல்லவா?. முதலில் கட்டிய பிருந்தாவனத்தை அப்படியே காலியாக விட்டுவிட்டு இரண்டாவது பிருந்தாவனம் கட்டவைக்க வில்லையா.? அதில் தான் குடி கொள்ளவில்லையா? முதலில் கட்டி காலியாக இருந்த பிருந்தாவனத்தில் 18ம் நூற்றாண்டில் ஸ்ரீ வதிந்த்ர தீர்த்தர் சமாதி தனக்கு அரூஜ் அந்த பிருந்தாவனத்தில் சமாதி அமைய ஏற்பாடு முன்னரே செய்தவர்.
ராபர்ட் கிளைவ் இந்த மந்திராலயத்தை ஆங்கிலேய கம்பெனி ஆட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றபோது அவனுக்கு தக்க ஆவணங்களை காட்டி மந்திராலய பிருந்தாவனத்தை மீட்டவர் . அப்படிப்பட்ட ஜீவன் முக்த மஹான் திருவல்லிக்கேணியில் மந்திராலய பிருந்தாவனம் அமைய வழி காட்டாமலா இருப்பார்? எப்போது யாரால், என்று எப்படி உருவம் பெறும் என்பதும் அவர் அறிந்ததே.
1963ல் நஞ்சன்கூடிலிருந்த பீடாதிபதி சுயமீந்திரருக்கு உடல் நலம் குன்றியபோது அடுத்த பீடாதிபதி என்று தீர்மானிக்கவேண்டிய கால கட்டம். ரா.வே.சார் தான் அடுத்ததாக பொறுப்பேற்க ஏற்றவர் என்று முடிவானது. இந்த நீள பெயர்கொண்டவர் சன்யாசியானார். இனி ரா.வே.சாரை ஹம்ஸ நாமக பரமாத்மா வரிசையில் மந்த்ராலய பிருந்தாவன 52வது பீடாதிபதி சுவாமி சுஜயீந்திர தீர்த்தர் என்போம். மத் வாச்சார்யாரிலிருந்து 37வது இடம். ஸ்ரீ சுஜயீந்திரர் மந்த்ராலயம் நிர்வாக பொறுப்பேற்றார். மந்திராலயம் இன்று சீரும் சிறப்புமாக எல்லா வசதிகளையும் பெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள் தோறும் குறையின்றி தரிசனம் பெற, தங்க, உணவு, எல்லா ஏற்பாடுகளையும் யோசித்து செயல்படுத்தியவர் சுஜயீந்திர தீர்த்தர்.

திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் ரா.வே.சாரை ஒரு திடீர் சன்யாசி உள்ளே கூட்டிச் சென்று மறைந்தது ஆரம்பத்தில் ஒரு பெண்கள் பள்ளிக்கூடமாக இருந்து பின்னர் ஒரு கல்யாண கூடமாகி, 27-28 வருஷங்கள் கழித்து மந்த்ராலய ம்ரித்திகா பிரிந்தாவனமாகியது. 21.6.1973 அன்று பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக சுஜயீந்திரதீர்த்தர் ( முந்தைய ரா.வே சார் ) சாஸ்த்ரோக்தமாக ஆராதனை செய்யப்பட்டு பிரிந்தாவனமாகியது.

திருவல்லிக்கேணி இடமும் ஒரு திவான் மூலமாக பெறப்பட்டது. எல்லாம் ராகவேந்திர குருராஜரின் சங்கல்பம்.
ராஜா வேங்கடராகவேந்திராச்சார் திவானாகியது , சென்னைக்கு வேலையாக வந்தது பார்த்தசாரதியை தரிசனம் செய்ய விரும்பியது, ஆலயத்தில் திருவல்லிக்கேணி யில் பிருந்தாவனம் அமைக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது, ஆலய பின் வாசல் வழியாக TP கோவில் தெரு வழியாக வெளி செல்லும்போது திடீர் மத்வ சந்நியாசியை கண்டது, அவர் அழைத்து பின் சென்றது, ஒரு வீட்டில் நுழைந்தது சன்யாசி மறைந்தது. அந்த இடம் தான் நீ விரும்பிய மந்த்ராலயா ம்ரிதிகா தோன்றப்போகும் இடம் என்று குறிப்பாக காட்டியது, மந்திராலயத்தில் குரு சுயமீந்தரர் அவரை பீடாதிபதியாக்கியது. பின்னர் சென்னை வந்தது. பிருந்தாவன இடம் ஒரு திவான் மூலம் கிடைத்து விறுவிறுவென்று பிருந்தாவனம் கட்டப்பெற்று யார் முதலில் அந்த எண்ணத்தோடு அதை பார்த்தாரோ அந்த ரா.வே.சார் ஸ்ரீ சுஜயீந்திரராக அந்த பிருந்தாவனத்தை சாஸ்த்ரோக்தமாக ஆராதனையோடு பக்தர்களுக்கு திறந்து வைத்தது. -- எல்லாமே குருராஜர் சங்கல்பம் என்று புரிகிறது.
எடுத்த காரியம் முடிந்து 1986ல் ஸ்ரீ சுஜயீந்திரர் (1963-1986) மந்திராலயத்தில் சமாதி அடைந்தார்.

Image may contain: house, plant, sky, tree and outdoor
Image may contain: outdoor
Image may contain: 1 person, standing
Image may contain: 7 people, people standing and wedding

No comments:

Post a Comment