Friday, May 14, 2021

Narasimha avatar

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீநரசிம்மாவதாரம்* 

 *பகுதி 12* 

 *காட்டழகியசிங்கப் பெருமாள், ஸ்ரீரங்கம்:* 

 காவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|

ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||

விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|

ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:||

அநந்தானந்த சயன! புராண புருஷோத்தம!

ரங்கநாத! ஜகந்நாத! நாததுப்யம் நமோ நம:||

இது திருஅரங்கத்தையும் திருஅரங்கனின் புகழையும் பாடும் துதி.

திருவரங்கப் பெருநகரில் உபய காவேரி மத்தியில் துயிலும் அரங்கனின் திருக்கோவில் எவ்வளவு மகிமையுடன் திகழ்கிறதோ அதற்குச் சற்றும் குறைவு இல்லாமல் திகழ்கிறது, அதே உபய காவேரி மத்தியில் ஸ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில்.

மேற்கு திசை நோக்கி அமைந்த இந்த திருக்கோயில் உயர்ந்த விமானத்துடன் கூடிய கருவறை மற்றும் அந்தராளம், முக மண்டபம், மகா மண்டபம், கருடன் சந்நதியும், நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட பல மண்டபங்களும் கொண்டு விளங்குகிறது. ஸ்ரீரங்கம் சித்திரை வீதியை நிர்மாணித்த வீரபாண்டியனான கடாவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1297) புனர்நிர்மாணம் செய்து பல திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று காட்டழகியசிங்கருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுவதுடன் ஒவ்வொரு மாத பிரதோஷ தினமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்மர் பிரதோஷ காலத்தில் அவதரித்தபடியாலும், மூன்று கண்களையுடையவராதலாலும் பழைய காலத்தில் சிங்கபிரானுக்கு பிரதோஷகாலத்தில் நடத்தி வந்த பூஜைகள் தற்போதும் தொடர்கின்றன.
பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்யோகம், மகப்பேறு கிட்டும். திருமணத் தடை நீங்க வைக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார் ஸ்ரீரங்கம் காட்டழகியசிங்கர். ஸ்ரீநரஸிம்ஹர் கோயிலில் பிரதோஷ வழிபாடா? எப்படி சாத்தியம்? நரஸிம்மரும் மூன்று கண்களை உடையவர். பிரதோஷ காலத்தில் இவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிட்டும். ஆனால், இவர் ருத்ர அம்சம் இல்லை. பகவான் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒரு அவதாரம். ஆனால், ஸ்ரீந்ருஸிம்ஹ ஸ்வாமி அவதாரம் செய்தது, பிரதோஷ காலத்தில்தான்! காரணம், ஹிரண்யகசிபு கேட்டுப் பெற்ற வரம் அது. பகலிலும் அல்லாமல் இரவிலும் அல்லாமல் பிரதோஷ காலத்தில் அந்த வரத்தை அனுசரித்து நரசிம்ஹ அவதாரம் நிகழ்ந்தது. அதனால், இங்கே பிரதோஷ சிறப்பு வழிபாடு உண்டு.
இந்தக் கோயிலுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. மகான் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த பிள்ளைலோகாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீவசனபூஷணம் என்ற அற்புத கிரந்தத்தை அருளிச் செய்தார். அப்படி அவர் அருளிச் செய்து, அதற்கான ரஹஸ்ய அர்த்தங்களையும் தம் சீடர்களுக்கு உபதேசித்த இடம் இந்தக் காட்டழகியசிங்கர் திருக்கோயிலே! ஆகவே, வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாகத் திகழ்கிறது இந்தக் கோயில். சிங்கர் கோயில், காட்டழகியசிங்கர் சந்நதி எனப்படும இந்த சந்நதி, திருவரங்கம் அரங்கநாதர் ஆலய பிராகாரத்தைச் சுற்றி பாதுகாவலாக எட்டுத் திசை தேவதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்யோகம், மகப்பேறு கிட்டும். திருமணத் தடை நீங்க வைக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார் ஸ்ரீரங்கம் காட்டழகியசிங்கர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்... இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாகத்தான் இருந்தது. திருவானைக்காவுக்குப் பிறகு திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகளும் இதர கொடிய மிருகங்களும் உலவும் இடமாகத் திகழ்ந்ததாம். இந்தப் பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பய நெருக்கடியைத் தந்திருக்கிறது. அந்த நிலையில், யானைகளின் தொல்லையில் இருந்து தன் எல்லை மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோயிலையும் கட்டுவித்தான். அப்படி உருப்பெற்றதுதான் இந்தக் கோயில். இதன் பின்னர் யானைகளின் தொந்தரவு குறைந்தது.
காட்டுக்குள் குடியிருந்ததால் பெருமாள் காட்டழகிய சிங்கரானார். கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகள் பழைமையான ஆலயமாகத் திகழ்கிறது. இருந்தபோதும், கி.பி.1297 வாக்கில், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இந்தக் கோயிலை எடுத்து புனர்நிர்மாணம் செய்து, கோயில் அழகுறத் திகழ வழி ஏற்படுத்தினான். இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும் பெயர் உண்டு. இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான, கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் இங்கே அமையப் பெற்றது. ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.
முகப்பில் வரவேற்பு வளைவு உள்ளது. கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழையும்போதே இடப்புறத்தில் அழகான பெரிய மண்டபம் ஒன்றைக் காண்கிறோம். திருவரங்கம் நம்பெருமாள் விஜயதசமி அன்று பல்லக்கில் எழுந்தருளி இந்த மண்டபத்துக்கு வருகிறார். இங்கே நம்பெருமாளுக்கு திருவாராதனம், அமுதுபடிகள் ஆன பிறகு தங்கக் குதிரையில் ஏறி பார்வேட்டைக்குக் கிளம்புகிறார். இந்தக் கோயிலில் உள்ள வன்னி மரத்துக்கு திருவாராதனம் ஆனபிறகு, வேட்டை உற்ஸவம் தொடங்குகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம் இது.

  உயர்ந்த விமானத்தோடு கூடிய கர்ப்பக்ருஹம். முகமண்டபம், மஹாமண்டபங்கள்  போன்றவை பொலிவோடு திகழ்கின்றன. எதிரே கருடனுக்கு சந்நதி உள்ளது. கருவறை, அந்தராளம், முகமண்டபம், மஹாமண்டபம், கருடன் சந்நதி ஆகியவை ஒன்றாக சீராக அமைந்துள்ளன. இன்னும் பல மண்டபங்கள், உத்தமநம்பி வம்சத்தில் உதித்த சக்ரராயராலும்,நாயக்க மன்னர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பிளந்த தூணிலிருந்து நரஸிம்மர் வெளிப்படும் தோற்றம், ஹிரண்யகசிபுவுடன் போர் செய்யும் தோற்றம், உக்ர நரஸிம்மராக, ஹிரண்யகசிபுவை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலம், பிரஹலாதன் நரஸிம்மரிடம் வேண்டிக் கொண்டு சாந்தப் படுத்தும் தோற்றம், லக்ஷ்மி நரஸிம்மர், யோக நரஸிம்மர், அனந்த நரஸிம்மர் என்று பல்வேறு வடிவங்களில் நரஸிம்மரின் தரிசனம் இங்கே நமக்குக் கிடைக்கிறது.
குலசேகரன் திருச்சுற்றான துரை பிரதட்சிணத்தில் உள்ள தூண்களிலிலுள்ள தசாவதார உருவங்கள் அழகுற அமைந்துள்ளன. அதிலும் ஸ்ரீநரஸிம்மரின் உருவம் அவ்வளவு அழகு; தெளிவு! சடையவர்மன் சுந்தர பாண்டிய மன்னனுக்குப் பின்னர் காட்டழகிய சிங்கர் கோயில் திருப்பணிகள் பலவற்றை பெரியாழ்வாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான வல்லபதேவ பாண்டியன் நிறைவேற்றினார். மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள சிங்கப்பிரானின் சந்நதியின் முன்புறம் கருடன் சந்நதியானது அமைந்துள்ளது. சிங்கப் பிரானின் சந்நதி ஒரு கணிசமான உயரத்தில் படிக்கட்டுகள் ஏறி அடையும்படி கட்டப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்குப் புறம் தல புராணம் அமையப் பெற்றிருக்கின்றது. காட்டழகியசிங்கர் மூலவர் நான்கு திருக்கரங்களை உடைவராக சேவை சாதிக்கின்றார்.
மேலே உள்ள இரண்டு திருக்கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தினை ஏந்திய வண்ணம் வீற்றிருந்த கோலத்தில் இருக்கும் மூல மூர்த்தியானவர், தனது கீழ் வலது கையினால் பக்தர்களுக்கு அபயம் அளித்தவாறு இடது கையினால் தன் மடிமீது அமர்ந்திருக்கும் தாயாரை அணைத்த வண்ணம் வீற்றிருக்கின்றார். இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பிரானின் சந்நதியானது மிகவும் விஸ்தாரமானதாக உள்ளது. சிங்கப்பிரான் சந்நதிக்கு ஏறிச் செல்வதற்கும் இறங்கி வருவதற்கும், சந்நதியின் இரு புறங்களிலும் சீராக அமைக்கப்பட்ட பாறையினாலான படிக்கட்டுகள் உள்ளன. சிங்கப்பிரானின் தரிசனம் முடிந்து படிக்கட்டுகள் இறங்கி கோயிலை வலம் வரும்பொழுது, கிழக்கே வலது மூலையில், ஒன்பது துளசி மாடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொன்றிலும் துளசிச் செடிகள் பசுமையாக வளர்ந்திருக்க, இவற்றை வலம் வந்தால் நவகிரஹங்களை வலம் வருவதாக இங்கே ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. இந்த துளசி மாடங்களுக்கு நேரெதிரே கிழக்கே இடது மூலையில், சிங்கப்பிரானுக்கு நைவேத்தியம் செய்வற்கென  தனியாக திருமடப்பள்ளி அமைந்துள்ளது.  இங்கு சிங்கப்பிரானுக்கு நித்தம் நைவேத்தியம் செய்வதற்கும், அந்தப்பரமனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு பக்த கோடிகள் சமர்ப்பிக்க விரும்பும் அமுது வகைகளும் சமைக்கப்படுகின்றன. இந்த திருமடைப்பள்ளியில் செய்யப்படும் உணவே காட்டழகிய சிங்கப்பிரானுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது சுற்று வலம் வந்து, சந்நதிக்குள் செல்கிறோம். பழைமையின் கம்பீரம் உள் மண்டபத்தில் தெரிகிறது.

   கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கிறோம். மிகப் பெரிய உருவம். சுமார் எட்டு அடி உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்ஹப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்துகிறது. காட்டழகிய சிங்கர் கோயிலுக்கென பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை பார்க்கலாம்.
நரசிம்மரது இடது தொடையின் மீது மிகவும் சாந்தமாக அமர்ந்த கோலத்தில் இருக்கும் தாயாரின் கண்மலர்கள் முழுவதுமாக திறந்த வண்ணம் காட்சியளிக்கின்றன. இது மிகவும் விசேஷமான ஒரு அமைப்பானதினால், இந்த திவ்ய தம்பதிகளை தரிசனம் செய்பவர்களுக்கு அவர்களது பரிபூர்ண கடாக்ஷம் கிடைக்கப் பெறுகின்றது. காட்டழகிய சிங்கர் மூல மூர்த்தியின் இடது தொடைதனில் அமர்ந்திருக்கும் தாயாரின் திருவடிகள் இரண்டும் தெள்ளத் தெளிவாக சேவையாவது கிடைத்தற்கரிய ஒரு வரமாகும். இந்தப் ப்ரபஞ்சத்திற்கே படியளக்கும் லோகமாதாவின் திருவடிகள் தானே நமக்கெல்லாம் மங்கலத்தையும் எல்லா விதாமான சுபங்களையும் அளிக்க வல்லது ! அப்படிப்பட்ட சக்திவாய்ந்த தாயாரானவள் தனது திருவடிகளை, அழகிய தாமரை பீடத்தின் மேல் பாந்தமாக ஊன்றிய வண்ணம்  திருவருட்பாலிக்கிறாள்.
காட்டழகிய சிங்கருக்கு உத்ஸவ மூர்த்தி கிடையாது. இது இந்தக் கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளுக்கு காவலாக வீற்றிருக்கும் தெய்வம் ஆதலால், இவரது உத்ஸவராக அந்தப் பெரிய பெருமாளே (ரங்கநாதப் பெருமாள்) அமைகிறார். காட்டழகிய சிங்கரின் பெருமையினையும் சக்தியையும் இந்த உலகிற்குப் பறைசாற்றும் விதமாக, பிரதி வருடமும் விஜயதசமியன்று நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள்) விசேஷ பல்லக்கில் இந்தக் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். கோயிலின் முன் மண்டபத்தில் பீடத்தில் இருந்த வண்ணம் சேவார்த்திகளுக்கு காட்சி தருகின்றார். விசேஷ திருவாராதனம் (பூஜைகள்) மற்றம் அமுதுபடிகள் (நைவேத்தியம்) ஆகியவை அவருக்கு நடக்கும்.

     ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யரான பிள்ளை லோகாச்சார்யார் தனது நூல்களை விஸ்தாரமாக விளக்கிய 'ரஹஸ்யம் விளைந்த மண்' ஆதலால். பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் தத்தம் படிப்பினில் வெல்லுவதற்கு இங்கு பிரார்ததனை செய்து கொண்டு 18 ப்ரதக்ஷிணங்கள் நித்தம் செய்து வர ஞானம் மேம்படும். காட்டழகிய சிங்கரை தரிசிக்காமல் ஸ்ரீரங்கத்திற்கு மேற்கொண்ட யாத்திரையானது பூர்த்தியாவது இல்லை. மேலும் ஸ்ரீரங்க நாதனின் திருவருள் இல்லாமல் காட்டழகிய சிங்கரின் தரிசனம் கிடைக்காது என்பதும் திண்ணம். லக்ஷ்மி ந்ருஸிம்ஹரைத் துதித்தபடி கோயிலில் இருந்து வெளியே வருகிறோம். என்றும் எல்லோருக்கும் காட்டழகிய சிங்கப் பெருமானின் திருவருள் கிடைப்பதாக! காட்டழகியசிங்கர் மட்டுமா? மேட்டழகிய சிங்கரும் இங்கு உண்டே! வைணவர்களுக்கு பெரிய கோயில் என்று போற்றத்தக்க திருவரங்கம் பெரிய கோயிலில் தாயார் சந்நதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோயில்.

காலை 6.15 முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 வரை கோவில் திறந்திருக்கும். 

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீநரசிம்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment