Friday, March 26, 2021

Vamana Avatar

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
 *திருப்பங்கள் தரும் (திருவோண) சிரவணவிரதம்* 

    மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம், திருவோண விரதம். இது, ஆவணி மாதத்தில் ஓணம் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தீவிர வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். இன்று, திருவோண விரத நாள். சரி, திருவோண விரதம் என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்னவென்பதைக் காண்போம்.

      திருமாலின் தசாவதாரங்களுக்கும் முந்தைய ஸ்ரீ ஹயக்ரீவனின் நட்சத்திரம் திருவோணமாகும். வாமன அவதாரமும் சிரவண தினத்திலேயே அமைந்துள்ளது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் திருப்பதி ஸ்ரீநிவாஸனின் நட்சத்திரமும் சிரவணமாக அமைந்துள்ளது. சிரவண நட்சத்திரத்தின் ஏற்றம் மிகவும் பெருமை வாய்ந்ததாக அமைந்துள்ளதால் பக்தர்கள் அந்த தினத்தையே ஒரு விரத தினமாக அனுஷ்டித்து திருமாலின் அருளைப் பெறுகிறார்கள். சிரவணம் என்ற தன்மை முதலாவதாக கொண்டாடப்படுகிறது. 
திருவோண நட்சத்திரத்தில் திருப்பதி ஸ்ரீநிவாஸனின் "மணி'யின் அம்சமாக புரட்டாசி மாதத்தில் வைணவ குருவான சுவாமி தேசிகர் அவதரித்ததுடன் சிறந்த ஹயக்ரீவ உபாஸகராகவும் விளங்கினார்.
மத்வ சம்பிரதாயத்திலும் ஸ்ரீ வாதிராஜ சுவாமிகள் தோன்றியதும் திருவோணத் திருநாளே! அதனால்தான் இரண்டு மஹான்களும் ஸ்ரீஹயக்ரீவ உபாஸகர்களாக விளங்கினார்கள். இந்த மஹநீயர்களால் திருவோண நட்சத்திரத்திற்கே பெருமை ஏற்படுகிறது என்று பெருமை கொள்ளலாம். 
முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் மூவரில் "பொய்கையாழ்வார்' காஞ்சியில் ஐப்பசி திருவோணத்தில் அவதரித்தவர். அதேபோன்று திருவோணம் திருநாள் திருப்பதி ஸ்ரீநிவாஸனை முன்னிட்டு, புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ நிவாஸனுக்கு பிரம்மோத்ஸவமாகக் கொண்டாடப்படுகிறது. பல திருத்தலங்களில் பிரம்மோத்ஸவம் போன்ற திருவிழாக்கள், திருவோண நட்சத்திரத்தை ஆரம்ப நாளாகவோ அல்லது முடிவு நாளாகவோ வைத்துக் கொண்டாடப்படுகிறது. 
எந்தெந்த தலங்களில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் பிரதான பெருமாளாக அமைந்துள்ளாரோ அத்திருத்தலங்களில் திருவோணம் திருநாள் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. புகழ்பெற்ற ஸ்ரீநிவாஸ தலங்களில் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ள "ஒப்பில்லா அப்பன்' திருக்கோயிலில் "சிரவண தீபம்' ஏற்றப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அச்சமயத்தில் எம்பெருமானைத் தரிசிப்பவர்களுக்குப் பெருமாள் அர்ச்சகர் வாயிலாக பக்தர்களுக்கு அருள்வாக்கு நல்குகிறார். 
சென்னையிலிருந்து மதுராந்தகம் செல்லும் பாதையில் வேடந்தாங்கல் ஊருக்கு அருகில் அமைந்துள்ள தென்திருப்பதி என்று போற்றப்படும் திருமலை வையாவூரில் ஒவ்வொரு திருவோணத்தன்றும் திருவோண விழா நடைபெறுகிறது.
திருவோணம் திருநாள் விசேஷமாக ஹயக்ரீவரை முன்னிட்டு திருவஹிந்திபுரத்தில் ஆவணி மாதம் 10 நாள்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருவோண நட்சத்திரத்தன்று விரதம் இருந்து எம்பெருமானை ஆராதிப்பவர்கள் எல்லாவித மேன்மையும் அடைவார்கள். பொதுவாக, திருவோணம் திருநாள் விஷ்ணுவின் அம்சத்தைக் கொண்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மக்கள் ஆவணி மாத திருவோணம் திருநாளை, "ஓணம்' பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். பிராட்டியை ஒப்பிலியப்பன்   மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பிலா பேறுடன் வைகுந்தப் பதவியை அடைவார்கள் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள்  குழந்தை வரம் பெறுவார்கள். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாள் இரவே உணவு உட்கொள்ளக்கூடாது. அதிகாலை நீராடி, பெருமாள் ஆலயத்துக்குச் சென்று துளசி மாலை சாத்த வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக்கொண்டு, பெருமாளைக்குறித்த பாடல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பே சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

மாலையில், சந்திர தரிசனம் காண வேண்டும். இதனால், சந்திரதோஷம் இருந்தால் விலகிவிடும். ஒருமுறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும், சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். திருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை இன்று மேற்கொண்டு, வளங்கள் பெறுங்கள். 

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீவாமனாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment