Friday, March 26, 2021

Kasi yatra miracle -Periyavaa

*"கலங்க வைத்த காசி பயணம்".*

மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களுள் கல்யாணசுந்தரம் என்பவரும் ஒருவர். பிராமண குலத்தைச் சேர்ந்தவர். ஒரு குழந்தை தன் தாயிடம் எந்த அளவுக்குப் பாசத்தை அதிகம் வைத்துத் தாயாரை கொண்டாடுகிறதோ, அது போல் மஹாபெரியவா என்ற கருணா தெய்வத்தின் மீது முரட்டுத்தனமாக பக்தி கொண்டிருந்து பக்தி உள்ளத்தை அந்த தெய்வத்திடம் பொழிந்தார் கல்யாண சுந்தரம்.

காஞ்சிக்குச் சென்று அந்த மகானை தரிச்சிக்கிற போதெல்லாம் கண்கள் கலங்க அந்த தெய்வத்தின் திருவடி பணிவார். நேரம் போவதே தெரியாமல் அந்தத் திருச்ச்சந்நிதியில் மகானது தரிசனத்தில் திளைத்திருப்பார். 'ஜய ஜய சங்கர' கோஷத்தை முழங்கிக் கொண்டே இருப்பார்.

பெரியவா பக்தி மட்டுமல்ல.. தன் தந்தையார் மீதான பக்தியிலும் உயர்ந்து காணப்பட்டார் கல்யாணசுந்தரம். தனது தந்தையார் தன்னுடன் வாழ்ந்த காலம் வரை அவருக்கு உண்டான சேவையைச் செய்து அதில் ஆனந்தப்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் நிகழ்ந்த தந்தையாரின் பிரிவு மகனை மன வேதனைப்படுத்தியது.

இந்த வேளையில் கல்யாண சுந்தரத்தின் மனதில் ஒரு ஆசை எழுந்தது. அதாவது தன் தகப்பனாருக்கு முறையாகச் செய்ய வேண்டிய சிராத்தம் போன்ற கர்மாக்களை காசிக்குப் போய் நடத்த வேண்டும் என்று. ஆனால், காசிக்குப் போனால் எங்கு தங்குவது, உணவு போன்ற வசதிகளுக்கு என்ன செய்வது, பாதுகாப்பான முறையில் பயணம் அமையுமா என்றெல்லாம் அவருக்குக் குழப்பங்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் கல்யாணசுந்தரத்தின் மனக்குழப்பங்களை அறிந்த அவருக்கு வேண்டிய அன்பர் ஒருவர் 'காசியில் உள்ள ஸ்ரீசங்கரமடத்தில் தங்கி இந்தக் கர்மாக்களைப் பூர்த்தி செய்யலாமே.. நீதான் மடத்துக்கும் பெரியவாளுக்கும் மிகவும் வேண்டப்பட்டவன் ஆச்சே' என்று பேச்சுவாக்கில் கல்யாணசுந்தரத்திடம் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டதும் காசிக்குச் செல்லும் பயணம் குறித்தான ஒரு நம்பிக்கையும் ஆசையும் கல்யாணசுந்தரத்துக்கு வந்தது.

ஒரு நாள் காஞ்சி ஸ்ரீமடம் சென்று தன் மனதில் உள்ளதை மஹாபெரியவாளிடம் சொன்னார். அந்த மகானும் தன் இரு திருக்கரங்களை உயர்த்தி அவருக்கு ஆசி புரிந்தார். பிறகென்ன மஹாபெரியவாளின் அறிவுரையின்படியும் அருளாசியின்படியும் காசிக்குச் செல்லும் பயணம் உறுதியானது.

காசி சங்கரமடத்தில் கல்யாணசுந்தரம் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எங்கே யாரைப் பார்க்க வேண்டும் சிராத்தம் போன்ற கர்மாக்களை எப்படி செய்வது என்பதை எல்லாம் இங்கேயே விசாரித்துக் கேட்டுக் கொண்டார். சென்னையில் இருந்து ஒரு நாள் காசிக்கு ரயில் ஏறினார்.

காஞ்சி மஹாபெரியவா ஆசியுடன் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் பத்திரமாகக் காசிக்கு வந்து சேர்ந்தார். அங்கு உரிய நபரைச் சந்தித்து கங்கைக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீசங்கரமடத்தில் தங்கினார். காசி ஸ்ரீசங்கரமடத்தில் உள்ள ஊழியர்கள் கல்யாணசுந்தரத்துக்கு சகல விதத்திலும் உதவினர்.

தன் தந்தையாருக்கு செய்து முடிக்க வேண்டிய அனைத்துக் கார்யங்களையும் உரிய பண்டிதர்கள் மூலம் திருப்தியாகச் செய்து முடித்தார். இதில் கல்யாணசுந்தரத்துக்கு ஏக திருப்தி.

'காசிக்கு என்று இவ்வளவு தூரம் பயணித்து வந்தாயிற்று.. இந்த ஊரையும் ஊரில் உள்ள கோயில்களையும் சுற்றிப் பார்க்காமல் ஊர் திரும்பினால் நன்றாக இருக்குமா? கங்கையில் தொடர்ந்து சில நாட்களுக்கு ஸ்நானம் செய்யக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடுமா என்ன? என்று யோசித்த கல்யாணசுந்தரம், 'வந்தது தான் வந்தோம்..ஒரு சில நாட்கள் தங்கி விட்டுப் போவோம்' என்று தன் பயணத் திட்டத்தை சற்றே மாற்றி அமைத்துக் கொண்டார்.

தினமும் கங்கை நதியில் ஸ்நானம், காசி விஸ்வநாதர், அன்னபூரணி – விசாலாட்சி தரிசனம் என்று ஆனந்தமாக இருந்தது கல்யாணசுந்தரத்துக்கு. காசி ஸ்ரீ சங்கரமடத்தில் அனைத்து வசதிகளும் நன்றாகவே இருந்தன.

இந்த நிலையில் தான் காசியில் ஆனந்தமாக இருந்த கல்யாணசுந்தரத்திடம் ஒரு நாள் விளையாடிப் பார்க்க நினைத்தார் காஞ்சி மஹாபெரியவா. பரம்பொருளின் நினைவு எப்போதும் பக்தனுக்கு இருக்கவேண்டும் அல்லவா?!

அதன்படி அன்றைய தினம் அந்த தெய்வத்தின் திருவிளையாடல் துவங்கியது.

ஒருநாள் கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு காசி விஸ்வநாதர், அன்னபூரணியை தரிசித்து தான் தங்கி இருக்கும் ஸ்ரீசங்கரமடத்துக்கு வந்து கொண்டிருந்தார் கல்யாணசுந்தரம். வருகின்றபோதே மனதில் ஒரு பூரிப்பு. காஞ்சி மஹாபெரியவாளின் அருளால் காசியில் எல்லாமே திருப்தியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று. ஆனால் அடுத்து நிகழப் போகிற துர்சம்பவத்தை அவர் எப்படி அறிவார்?

காசியம்பதிக்குச் சென்று வந்தவர்களுக்குத் தெரியும் அங்குள்ள தெருக்கள் எல்லாம் நம்மூர் மாதிரி அகலமாக இருக்காது. எல்லாமே சின்னச் சின்ன சந்தாக இருக்கும். சில தெருக்களில் குண்டான ஒரு ஆசாமி எதிரில் வந்தால் அவருக்கு எதிர்ப்பக்கம் வருபவர் சற்று ஒதுங்கிக் கொண்டால் தான் அந்த குண்டான ஆசாமி அவர் மீது இடிக்காமல் நடக்க முடியும். அந்த அளவுக்குக் குறுகலான தெருக்களும் உண்டு.

காசியில் பிரதான சாலைகளைத் தவிர உள்ளுக்குள் புகுந்து செல்லும் தெருக்கள் எல்லாமே சிறு சிறு சந்தாக இருக்கும். அப்படிப்பட்ட சந்து ஒன்றில் புகுந்து ஸ்ரீசங்கரமடம் இருக்கும் பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் கல்யாணசுந்தரம்.

தன் கையில் சிறிய பிளாஸ்டிக் பை ஒன்றை வைத்திருந்தார். அந்தப் பைக்குள் ஒரு சிறு மஞ்சள் துணிப்பை. அந்த மஞ்சள் பைக்குள்தான் தான் ஊருக்குத் திரும்பவேண்டிய (முன்பதிவு செய்யப்பட்ட) டிக்கெட், செலவுக்கான பணம், மற்றும் சில முக்கியமான ஆவணங்களை வைத்திருந்தார். மஞ்சள் பையை உள்ளடக்கிய இந்த பிளாஸ்டிக் பையை எப்போதும் வெகு கவனமாக வைத்திருப்பது வழக்கம்.

சந்து பொந்து எல்லாவற்றையும் கடந்து ஸ்ரீசங்கரமடத்தின் அருகில் உள்ள ஸ்ரீகாமகோடீஸ்வரர் ஆலயத்துக்குள் நுழைந்தார் கல்யாணசுந்தரம். அங்கு இறைவனை தரிசித்துவிட்டு ஆலயத்தையும் ஒரு வலம் வந்துவிட்டு, வெளிப்பிரகாரத்தில் ஆள் அரவம் இல்லாத ஓர் இடத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக அமர்ந்தார்.

திடீரென ஏதோ நினைத்தவராக பிளாஸ்டிக் பைக்குள் கைவிட்டு உள்ளே தான் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மஞ்சள் பையை எடுக்க முற்பட்டார். ஆனால் அது கையில் தட்டுப்படவில்லை. பிளாஸ்டிக் பையை இன்னும் கொஞ்சம் அகலமாக விரித்து உள்ளே பார்வையை ஓட்டியவர் அதிர்ந்து போனார். மஞ்சள் பையைக் காணவில்லை. துணுக்குற்றார்.

பிளாஸ்டிக் பைக்குள் இருக்கும் ஒரு சில காகிதங்களையும் தேவை இல்லாத அயிட்டங்களையும் எடுத்து வெளியே போட்டு நிதானமாகப் பார்த்தார். ஆம்! மஞ்சள் பையைக் காணவே இல்லை. எங்கோ தொலைந்து விட்டிருக்கிறது.

கல்யாணசுந்தரத்தின் கண்களில் நீர் முட்டியது. கை, கால்கள் நடுங்கின. தற்போதைக்கு அவரது சொத்தே அந்த மஞ்சள் பைதான். அதற்குள் டிக்கெட், செலவுக்கான பணம், சில முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அவை இல்லாவிட்டால் ஊருக்கு திரும்ப முடியாது.
என்ன செய்வது என்று யோசித்தவருக்கு எதுவுமே பிடிபடவில்லை. பாஷை தெரியாத ஊர், எங்கே போய் புகார் செய்வது? எங்கே தொலைத்தாய், எப்படி தொலைத்தாய் என்று அடுக்கடுக்காக கேள்வியை கேட்டால் அதற்கு அவர்கள் பாஷையில் பதில் சொல்லவேண்டுமே. இவருக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது.

பித்துப் பிடித்தவர் போலானார். அடுத்து தான் என்ன செய்யவேண்டும் என்று அவருக்கே புரியவில்லை.

சட்டென்று காஞ்சி மஹாபெரியவா அப்போது நினைவிற்கு வந்தார். பிரச்சினையை ஏற்படுத்திய அவர் அதற்கு தீர்வு தரமாட்டாரா என்ன? உடனே அந்த மஹானை மனதுக்குள் பிரார்தித்து "சர்வேஸ்வரா உன்னை பிரார்த்தனை பண்ணிட்டு தானே இந்த காசிக்கு வந்தேன்…. நீ தானே அனுக்ரஹம் பண்ணி என்னை இங்கே அனுப்பி வைச்சே. ஒரு குறையும் எனக்கு வராம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு இல்லையா…. என்னை ஏன் இப்படி தவிக்க விடறே.. ஊருக்கு போக இருந்த டிக்கெட்டையும் தொலைச்சுட்டு கையில இருந்த காசையும் பறிகொடுத்துட்டு பாஷை தெரியாத இந்த ஊர்ல நான் என்ன செய்ய முடியும்? என்னை தவிக்க விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறது உனக்கு பொழுது போக்கா இருக்கா?" என்று கண்களில் பிரவாகம் எடுக்கும் நீருடன் அந்த மஹானை மனதிற்குள் நினைத்து மருகினார்.

அடுத்த வேளை சாப்பிடவேண்டும் என்றால் அதற்கு கையில் ஒரு நயா பைசா கிடையாது. ஆத்திர அவசரத்துக்கு ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் அதற்கும் ஒன்றும் வழி இல்லை. தனது இந்த நிலையை யோசித்து பார்க்க பார்க்க கல்யாணசுந்தரத்துக்கு அழுகையே வந்துவிட்டது. தனது சொத்தாக இருந்த மஞ்சள் பை காணாமல் போனதை நினைத்து கவலை அதிகமாகி கோவிலில் இருந்த ஒரு தூணில் சாய்ந்துவிட்டார்.

கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தாலும் அப்போது வாய் மட்டும் எதோ புலம்பிக் கொண்டே இருந்தது. "இப்படி என்னை பரிதவிக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறயே மகாபிரபோ" என்று மஹாபெரியவாளை மனதிற்குள் நினைத்து அவரிடம் தன் குறையை கொட்டினார்.

அப்போது ஆலயத்தில் அந்த இடத்தை கடந்து போகிற உள்ளூர் பக்தர்கள் (தமிழ் தெரியாதவர்கள்), மனம் உருகி கண்ணீர் விட்டு கடவுளிடம் எதோ கோரிக்கை வைக்கிறார் போல் இருக்கிறது என்று நினைத்து இவரைப் பார்த்து ஒரு பரிதாப பார்வையை வீசி அவர் சாய்ந்திருந்த இடத்தைக் கடந்து போனார்கள்.

தன் பக்தன் ஒருவன் இப்படி புலம்பிக் கொண்டு இருப்பதை அந்த காருண்யமூர்த்தி எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பார்.? கல்யாணசுந்தரத்திடம் விளையாடியது போதும் என்று தீர்மானித்தாரோ என்னவோ இரண்டு மணி நேர புலம்பலுக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானித்தார்.

ஸ்ரீகாமகோடீஸ்வரர் ஆலய வாசலில் திடீரென்று ஒரு சைக்கிள் ரிக்சா வந்து நின்றது. அதில் இருந்து வயதான ஒரு ஆசாமி இறங்கினார். தட்டுத்தடுமாறி ஆலயத்துக்குள் நுழைந்தார். கல்யாணசுந்தரம் எங்கேயோ பறிகொடுத்த மஞ்சள் பை, அவரது கையில் அப்படியே இருந்தது. ஆலயத்துக்குள் நுழைந்த முதியவர் வேறு எங்கும் போகாமல் கண்ணீருடன் கல்யாணசுந்தரம் அமர்ந்திருந்த இடத்துக்கு நேராக வந்தார். கண்ணீரும் கம்பலையுமாக இருந்த அவரிடம் மஞ்சள் பையை நீட்டி "இந்தப் பை ஒன்னோடது தானானு பாரு. கோயில்லேர்ந்து திரும்பி வர்ற வழியில எங்கேயோ தவற விட்டுட்டே போலிருக்கு' என்று இந்தியில் சொல்லியபடி நீட்டினார். முதியவர் சொன்ன பாஷை புரியாவிட்டாலும் அவர் சொன்னது இதுவாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

தன் பையை அவர் கையில் பார்த்த அதிர்ச்சி விலகாமல் அதை வாங்கித் தன் கைகளில் ஒற்றிக் கொண்டார். பையைப் பிரித்துப் பார்த்தார். டிக்கெட், பணம் ஆவணங்கள் அனைத்தும் அப்படியே இருந்தன.

'ஆஹா..என் கருணைத்தெய்வம் காஞ்சி மஹானிடம் பிரார்த்தனை வைத்த சில நிமிடங்களுக்குள் என் பையை இவர் கொண்டு வந்து சேர்த்து விட்டாரே… இவர் எப்பேர்ப்பட்ட உத்தமராக இருக்க வேண்டும்! இத்தனை பேர் நடமாடிக் கொண்டிருக்கும் இந்தப் பெரிய ஆலயத்தில் என்னைத் தேடி வந்து பையைக் கொடுத்திருக்காரே' என்று மனதுக்குள் மகிழ்ந்து கல்யாணசுந்தரம் அண்ணாந்து பார்த்து முதியவரைத் தேடினால் அவரை அங்கே காணவில்லை.

அதிர்ச்சி ஆனார். 'இப்ப இங்கதானே இருந்தார்' என்று யோசித்து விறுவிறுவென்று கோயிலை விட்டு வெளியே ஓடிவந்தார். தெருவில் இருபக்கமும் அந்த முதியவரைத் தேடினார். அப்படி ஒரு ஆசாமி அங்கு காணவே இல்லை.

கல்யாணசுந்தரம் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கிட்டத்தட்ட கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தை விட ஒரு சில விநாடிகள் அதிகம். அவ்வளவு தான் கடந்திருக்கும். அத்தகைய ஒரு குறுகிய நேரத்தில் யாரோ ஒரு முதியவர் தன் மஞ்சள் பையைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நன்றி சொல்வதற்குள் பொசுக்கென்று மறைந்துவிட்டாரே என்று அதிர்ச்சியும் வியப்பும் விலகாமல் தனது மஞ்சள் பை மீண்டும் தன் கைக்கு வந்ததை நம்ப முடியாமல் சாலையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அதைவிட ஆச்சரியம்.. கோயிலுக்குள் இத்தனை பேர் இருக்கும் போது நேராகத் தன் முன் வந்து நின்று பையை எப்படிக் கொடுத்தார்? அதுவும் பையைத் தொலைத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. வந்தவர் எப்படி அதற்குள் மறைந்து போனார்? இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகள் கல்யாணசுந்தரத்தின் மனதுக்குள் வந்து கொண்டே இருந்தன.

பிறகு தான் அவருக்குத் தோன்றியது. 'நாம் நம் பிரார்த்தனையை மகாபெரியவாளிடம் அல்லவா வைத்தோம். அப்படி என்றால் இந்தப் பிரார்த்தனைக்கு மனம் இரங்கி, காணாமல் போன என் மஞ்சள் பையைக் கொண்டு வந்து சேர்த்தது அவராகத்தானே இருக்க முடியும். காஞ்சிபுரத்துக்கும் காசிக்கும் ஏதோ பெரிய தொலைவு என்பது மனிதர்களுக்கு மட்டும் தான். மகான்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா?

காஞ்சி மஹா பெரியவாளை மனதுக்குள் நினைத்து அவருக்கு காசியில் இருந்தபடியே ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கண்ணீரால் கழுவினார் கல்யாணசுந்தரம்.

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.

No comments:

Post a Comment