Thursday, March 25, 2021

Janani-Periyavaa

*வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்*

*ஜனனீ*

(ஸௌந்தர்ய லஹரியில்) ஆசார்யாளே பண்ணினது அந்த பாகம்தான் என்று பல பேர் நினைக்கிற உத்தராங்கம் [பிற்பகுதி] முதல் ச்லோகத்தில் கேசாதி பாத வர்ணனை ஆரம்பிக்கிறபோதே "ஹிமகிரிஸுதே!" ["பனி மலை மகளே!"] என்று குழந்தையாகத்தான் கூப்பிடுகிறார். அடுத்ததில் "சிகுர நிகுரும்பம் தவ சிவே" என்று சிவ பத்னியாகச் சொல்லியிருக்கிறார். ஸ்தோத்ரத்தை முடிக்கும்போது கடைசி ச்லோகத்தில் தாயாராக "ஜனனீ" என்று கூப்பிட்டு "உன்னுடையதேயான வாக்காலான இந்த ஸ்துதி உனக்கே அர்ப்பணம் — த்வதீயாபிர்-வாக்பிஸ்-தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்" என்கிறார். புத்ரியாய் ஆரம்பித்துப் பத்னியாகக் கொண்டுபோய்த் தாயாராக முடித்திருக்கிறார்.

தாயாராகச் சொல்லும்போது 'அம்பா', 'மாதா' என்று ஏதோ ஒன்று, இரண்டு இடத்தில் சொல்லியிருந்தாலும் "ஜனனீ", "ஜனனீ" என்றே நிறையச் சொல்லியிருக்கிறார். ஸகலமும் ஜனித்தது அவளிடம்தான், ஸகல ஜனங்களும் அவள் குழந்தைகளே என்பது மனஸில் பதிந்து நிற்பதற்காகவே 'ஜனனீ' பதப்ரயோகம் பண்ணியிருக்கலாம்.

பூர்வார்த்தமான [முதற் பாதியான] ஆனந்த லஹரியின் கடைசி ச்லோகக் கடைசி வரியில் ஈச்வரனையும் அம்பாளையும் சேர்த்துச் சொல்கிறபோதும் "ஜனக-ஜனனீ" என்றே சொல்லியிருக்கிறது. மாதா-பிதா என்பதைவிட ஜனக-ஜனனீக்கு விசேஷம் இருக்கிறது. 

என்னவென்றால், மாதா, பிதா என்கிற வார்த்தைகளுக்கு 'ரூட்' வெவ்வேறாக இருக்கிறது. அதனால் அர்த்தங்களும் வேறாய் இருக்கின்றன. 'மாதா' என்றால் 'தனக்குள்ளே அடக்கிக் கொண்டிருப்பவள்'. 'பிதா' என்றால் 'பரிபாலிக்கிறவர்'. ஜனக, ஜனனீ என்ற வார்த்தைகள்தான் ஒரே 'ரூட்'டில் பிறந்தவை. 'பிறப்பிப்பது' என்று அர்த்தம் கொடுப்பதான 'ஜன்' என்ற ஒரே 'ரூட்'டில் அந்த இரண்டு வார்த்தைகளும் உண்டாயிருக்கின்றன.

_ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 155 / நாமம் 823 – ஜனனீ - அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவள் (எல்லா உயிர்களுக்கும் தாயார்)_

_பெரியவா சரணம்!_

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*

No comments:

Post a Comment