குருவே பரம துணை ( #Deivathinkural)
_______________
மனம் ஒருமைப்பட்டு கேட்காவிட்டால் பிரயோஜனம் இராது. உழுத இடத்தில் ஊன்றினால் தான் விதை பிரயோஜனப்படும். நாம் எவ்வளவோ உபந்நியாஸம் கேட்கிறோம்; கீதை முதலானதுகளை நிறைய வாசிக்கிறோம். ஆனாலும் நமக்கு ஏன் துக்கம் போகவில்லை? ஞானம் உண்டாகவில்லை? நாம் சித்த சுத்தி பண்ணிக்கொள்ளாமலே கேட்பதாலும் படிப்பதாலும்தான் அது நிரந்தரமாக நின்று பலன் தருவதில்லை.
-
"வைதிக கர்மாக்களை நிறையப் பண்ணி ஈச்வரார்ப்பணம் செய். பலனை எதிர்பார்க்காமல், அதை பகவத் ஆராதனமாக நினைத்துக் கொள்" என்று ஆசார்யாள் இந்த உபதேசத்தின் ஆரம்பத்தில் சொன்னது, சித்த சுத்தியை, மனஸின் அமைதியை உண்டாக்கி கொள்வதற்காகத்தான்.
*
கர்மாவால் மனஸை உழுதாக வேண்டும். அது முதல் காரியம். அப்புறம் ஜலம் பாய்ச்ச வேண்டுமல்லவா? அதுதான் பக்தி. நம் ஹ்ருதயத்தில் ஜலம் பாய்ச்சுவது பக்திதான். ஈச்வரனிடமும், ஆசார்யனிடமும் பக்தி செலுத்த வேண்டும். குரு பக்தி இருந்தால் மனது தானாக சாந்தத்தை அடைகிறது. பெரியவர்களுக்கு, மஹான்களுக்கு முன் ஒன்றை வாசித்தாலும் கேட்டாலும் அல்லது அவர்களே ஒன்றைச் சொன்னாலும், அது மனஸில் நன்றாகப் பதிகிறது. ஏனென்றால் அவர்கள் ஸந்நிதானத்தில் நம் மனஸ் ஒரு விதமான சாந்தத்தோடு இருக்கிறது.
*
கிளப்பிலும், லைப்ரரியிலும் இப்படி இருக்கவில்லை. அதனால்தான் அங்கெல்லாம் படிப்பதும், கேட்பதும் நிற்காமல் ஓடிப்போய்விடுகிறது. மனஸ் குரு பக்தியில் நனைந்தால் உடனே பலன் உண்டாகும். அதனால்தான் மஹான்களாக இருக்கிறவர்களிடமும் உபதேசம் கேட்க வேண்டும், எதையும் குருமுகமாக கற்க வேண்டும் என்பது.
*
பிரம்மசரிய ஆசிரமத்தில் இப்படிச் சித்த சுத்திக்காக ஒரு குருவிடமிருந்து வேதங்களைத் தெரிந்து கொண்டபின், கிருஹஸ்தாச்ரமத்தில் அந்த வேதத்தில் சொன்ன கர்மாக்களைப் பண்ணி மனஸின் அழுக்குக்களையெல்லாம் போக்கடித்துக் கொண்டபின், ஸந்நியாஸ ஆசிரம குருவிடம் மஹாவாக்ய உபதேசத்தை வாங்கிக் கொண்டால் அது பயிராக விளைகிறது. அதாவது ஜீவன் பிரம்மத்தோடு ஐக்கியத்தைப் பெறுகிறான். அதற்கு வழி பண்ணுவது, ஆரம்பித்திலும் சரி, முடிவிலும் சரி குரு தான்.
-
இதனால் தான் குருபக்தியை எங்கு பார்த்தாலும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது.
(DeivathinKural(Paramacharya) - By Ra.Ganapathi AvargaL)
No comments:
Post a Comment