Tuesday, January 19, 2021

Ramayanam part 5

🚩ராமாயணம்
  (பாலகாண்டம்)
         பகுதி-(5)

(கலைக்கோட்டு மாமுனிவர்..!)

அங்க நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாமல் பொய்த்துவிட்டது. பஞ்சமும் பசியும் மக்களை அஞ்ச வைத்தன. 'நல்லார் ஒருவர் இருந்தால் அவர் பொருட்டு மழை எல்லார்க்கும் பெய்யும்' என்று கூறுவார்கள். 
 
எனவே நன்மை மிக்க அம்முனிவர் இருக்கும் இடம்நாடி அவரைத் தம் மண்ணை மிதிக்க வைத்தனர்.
 
கலைக்கோட்டு மாமுனிவர் விபாண்டன் என்னும் தவ முனிவரின் ஒரே மகன்; அவர் வெளியுலகப் பாதிப்புகள் இல்லாமல் வளர்க்கப்பட்டார்,'காமம்' என்பதன் நாமமே அறிய முடியாதபடி அவர் வளர்ந்தார்; காட்டில் திரியும் மான்! அதற்குக் கொம்பு உண்டு. மகளிர்க்கு வம்பு செய்யும் வனப்பு உண்டு; அவரைப் பொறுத்தவரை மானுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடே இல்லை; கச்சணிந்த மாது ஆயினும், இச்சையைத் துண்ட இயலாதபடி அவர்களிடமிருந்து ஒதுக்கி அவர் வளர்க்கப்பட்டார். காட்டுச் சூழலில் தவசிகள் மத்தியில் வாழ்ந்ததால் நகர மாந்தர்தம் ஆசைகள் அவருக்கு அமையவில்லை. "சுத்தம் பிரமம்" என்று சொல்லத்தக்க நிலையில் ஞானியாய் வாழ்ந்து வந்தார். அவரை மயக்கி நகருக்கு அழைத்து வர அந்த நாட்டு நங்கையர் சிலர் முன்வந்தனர்.
 
அவர்கள் அரசன் உரோமபாதரிடம் "கலைக் கோட்டு முனிவனைத் தம்மால் அழைத்து வரமுடியும்" என்று உறுதி தந்திருந்தனர்; அவர்கள் ஆடல் பாடலில் வல்ல அழகியர். அரசனும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்; கட்டற்ற செல்வத்தை அவர்களுக்கு வாரி வழங்கினான்; ஆடை அணிகள் தந்து, அவர்களைச் சிறப்பித்தான்.
 
நாட்டைவிட்டுக் காட்டை அடைந்த அக் காரிகையர், தூரிகையில் எழுதிய சித்திரங்கள்போல் அவன்முன் நின்றனர். முல்லை சூடிய அம் முறுவலினர் அவர்
தங்கியிருந்த தவச் சாலையை மகளிர் சாலையாக்கினர்; காயும் கனியும் கொண்டு சென்று மருளும் மான்போல அவரை அணுகினர். புத்தம் புதிய மாதராய அவர்களை முதற்கண் நித்தம் தவம் புரியும் தவசியர் என்றே நினைத்தார். அழகும், இளமையும் அவரை ஈர்த்தன; அவர்கள் தந்த பழங்களைச் சுவை பார்த்தார். "தம்மோடு வருக" என்று அவர்கள் அழைத்தனர்; விழிகளால் அவருக்கு வழிகாட்டித் தம் பின்னால் வரச் செய்தனர்; வேல்விழி மாதரார் காட்டிய சாலை வழியே சென்று நாட்டு மண்ணை மிதித்தார் அம் மாமுனிவர்; காலடி பட்டதும் வறண்ட நிலங்கள் எல்லாம் வான் மழை நீரால் நிரம்பி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தன. வற்றி உலர்ந்திருந்த மரங்கள் எல்லாம் பசும் தழைகளைப் போர்த்தன. மயில்கள் எல்லாம் களிநடம் செய்தன. சாய்ந்து கிடந்த நெற்பயிர்கள் தழைத்துக் கதிர் மணிகளை விரித்து, முகம் காட்டின.
 
உரோமபாதர், "கலைக்கோட்டு மாமுனிவர் வருகையால்தான் மழை பெய்தது" என்பதை உணர்ந்தார்; ஒடோடி வந்து அவர் மலரடிகளில் விழுந்து வணங்கினர்; நங்கையர் சிலர் தவசிகள்போல வந்து மயக்கியமையை மன்னிக்கும்படி வேண்டினர்; 'எல்லாம் நன்மைக்கே' என்று அம் மாமுனிவர் நயம்படக்கூறி, அவர் அச்சத்தைப் போக்கினார். காவி உடை அணிந்து காயத்திரி தேவியைச் செபம் செய்து வந்து தவசி, சாவித்திரி ஒருத்தியைக் கைப் பிடிக்க அரசன் வழி வகுத்தான். தன் ஒரே மகள் சாந்தை என்பாளை அவருக்கு மணம் முடித்து உயர்பேறு பெற்றான். சுத்த பிரம்மம் ஆக இருந்த ஞானி மாயையின் பிடியில் அகப்பட்டு உலகக் குடிமகனாக மாறினார். எனினும், ஒழுக்கசீலர் என்பதால் விழுப்பம் உடையவர் என மதிக்கப்பட்டார். உரோமபாதரின் மருமகனாக இருந்த கலைக்கோட்டு மாமுனிவரை அழைத்து வரத் தசரதன் சென்றான்.
 
அவர் தலைமையில் மகவு நல்கும் வேள்வி நடத்த இருப்பதாயும், அவரை அனுப்பி வைக்கும்படியும் அழைப்பு விடுத்தான். மாமன்னன் வேண்டு கோளை மறுக்க முடியாமல் மாமுனிவராகிய கலைக் கோட்டா சானை அவரிடம் அனுப்பி வைத்தார் உரோம பாதர். வந்தவருக்கு வரவேற்பும், வாழ்த்தும் கூறிச் சிறப்புகள் செய்தான் தசரதன்...!

தசரதனும் கலைகோட்டு மாமுனிவரும் பற்றி நாளை பார்ப்போம்..!

    தொடரும்..!

ஶ்ரீராம ஜெயம்🙏

No comments:

Post a Comment