Friday, September 25, 2020

Kovil Nambi becomes Amudanar by Ramanujar - Spiritual story

வந்தவதரித்த வருமான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளை நாம் வாழ்வதற்கு அப்பெருமானரது திருநாமங்களையே சங்கீர்த்தனம் பண்ணுவோம்.

1.கோயில் நம்பி

    ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வகித்து மிகுந்த செல்வாக்குடன் இருந்த்தால், இவரைக் 'கோயில் நம்பி' என்றும் 'பிள்ளை' என்றும் கௌரவமாக எல்லோரும் அழைத்தனர். பிற்பாடு இவருக்கு ராமானுஜர் சூட்டிய பெயர் 'அமுதனார்'. இவரது ஆசிரியர் கூரத்தாழ்வார்.

    ஸ்ரீரங்கம் கோயில், ராமானுஜர் காலத்துக்கு முன்பு பலருடைய கட்டுப்பாட்டில் இருந்து வந்திருக்கிறது.ஆளவந்தாருக்கு பிறகு ராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்த பிறகு கோயில் நியமனங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்பி பல ஆலோசனைகளை வழங்கினார்.

    கோயிலின் நிர்வாகம் மற்றும், புராணம் வாசித்தல் போன்ற கைங்கர்யங்களை கோயில் நம்பி செய்து வந்தார். ராமானுஜர் கொண்டு வந்த திட்டங்கள், நிர்வாகத்தில் அவர் குறுக்கிடுவதாக ராமானுஜருக்கு பல இடையூறு செய்ததாகத் தெரிகிறது.

2.பெருமாளின் எண்ணம்

    நம்பியை ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வெளியேற்றினாலதான், தான் நினைத்தபடி கோயிலை நிர்வகிக்க முடியும் என்று எண்ணினார் ராமானுஜர்.

    ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காக காத்திருக்கும் போது, ராமானுஜர் சற்றே கண்ணயர்ந்து விட்டார். அப்போது, பெருமாள் ஸ்ரீராமானுஜர் கனவில் 'கோயில் நம்பி நீண்ட காலமாக என்னையே நம்பி இருக்கிறார். அதனால் அவரை நீக்கவேண்டாம்" என்று சொல்ல, ராமானுஜர் கூரத்தாழ்வானிடம் "நமக்கு பல இன்னல்களை தரும் கோயில் நம்பியை நாம் வெளியேற்றுவது பெருமாளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது, அதனால் நாம் திரும்பவும் காஞ்சிபுரத்துக்கே சென்றுவிடலாம்" என்றார். "பெருமாள் இப்படி சொல்லுகிறார் என்றால் நிச்சயம் பெரிய கோயில் நம்பியை மனம் மாறச் செய்துவிடுவார்" என்று கூரத்தாழ்வான் சொல்ல "அப்படியானால் நம்பியை திருத்தும் பணியை நீங்களே மேற்கொள்ளும்" என்று உடையவர் கூரத்தாவாழ்வானைப் பணித்தார்.

3.கூரத்தாழ்வான், கோயில் நம்பியிடம் நட்பு

    கூரத்தாழ்வான், பெரிய கோயில் நம்பியிடம் நட்புக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக உடையவரின் அருமை பெருமைகளை சொல்லி அவர் மனத்தை மாற்றினார். அதன் பிறகு பெரிய கோயில் நம்பி உடையவர் மீது மிகுந்த பக்தி கொண்டவாராக மாறினார்.

    ராமானுஜரின் பெருமைகளை அறிந்துகொண்ட நம்பி தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி ராமானுஜரை வேண்டினார். "உங்கள் மனம் மாறச் செய்த கூரத்தாழ்வானே உங்களுக்கு உகந்த ஆச்சாரியன்" என்றார் ராமானுஜர்.

           நம்பியின் இலக்கிய அறிவையும், வாக்குவன்மையையும் போற்றி, அவருக்கு 'அமுதன்' என்ற திருநாமத்தை சூட்டினார் ராமானுஜர். "திருவரங்கத்தமுதனார்" என்றும் 'பிள்ளை அமுதனார்' என்றும் இவரை அழைப்பர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு அமுதனாருடைய தாயார் பரமபதித்திட, பத்து நாட்கள் காரியம் நடந்து முடிந்து, ஏகாஹம் எனப்படும் 11ஆம் நாள் ஒரு நல்ல ஸ்ரீவைஷ்ணவரை அமர்த்த விரும்பினார் அமுதனார்.

4.கூரத்தாழ்வான் ஏகாஹத்துக் வருதல்

    ராமானுஜரிடம் தனக்கு ஒருவரை நியமிக்க வேண்டினார். ராமானுஜர் கூரத்தாழ்வானை அழைத்து, அமுதனார் வீட்டுக்கு ஏகாஹத்துக்கு போகப் பணித்தார். தனது ஆசாரியரான கூரத்தாழ்வானே ஏகாஹத்துக் வந்ததால் அமுதனாருக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.

5.அமுதனாரிடமிருந்து நிர்வாகம் மாறுதல்

அன்று கூரத்தாழ்வான் உணவு உட்கொண்ட பின் 'திருப்தி' என்று கூறாமல் இருக்க, அமுதனார் வேறு என்ன வேண்டும் என்று கேட்க, அமுதனாருடைய கோயில் புராணம் வாசிக்கும் கைங்கர்யத்தையும், கோயில் நிர்வாகத்தையும் காணிக்கையாக கேட்டுப் பெற்றார். அவற்றை உடைவரிடம் சமர்ப்பித்தார். ராமானுஜரும் மிக்க மகிழ்ச்சி அடைந்து கோயில் நடைமுறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

    அமுதனாரிடமிருந்து நிர்வாகம் கைமாறிய பின், அவர் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது. இவர் செய்து வந்த புராண வாசித்தல் மற்றும் வேறு பணிகளை கூரத்தாழ்வான் செய்து வந்தார். அதனால் அமுதனார் கோயில் பணிகளில் அதிக ஈடுபாடுகொள்ளாமல் இருந்ததை பார்த்த ராமானுஜர் வருத்தப்பட்டு, இவருக்கு ஏதாவது பொறுப்பு தர வேண்டும் என்று எண்ணினார்.

6.அமுதனார் சன்னதியில் இயற்பா சேவித்தல்

           'பிள்ளை திருவரங்கப்பெருமாள் அரையரிடம்' ராமானுஜர் இயற்பா சேவிப்பதை மட்டும் பிக்ஷையாகப் பெற்று அமுதனாரை பெரிய பெருமாள் சன்னதியில் இயற்பாவைச் சேவிக்க நியமித்தார். அப்படி சேவிக்கும் நாட்களில் அமுதனாருக்கும் அதே போன்ற பிரம்மரத மரியாதையை ஏற்படுத்தி வைக்கப்பட்டது. அமுதனார் தனக்கு புத்தகம் பார்க்காமல் சேவிக்க வராது என்று ராமானுஜரிடம் சொல்ல, அமுதனாருக்கு புத்தகத்தைப் பார்த்துச் சேவிப்பதற்கு விசேஷமாக அனுமதி வழங்கினார். இன்றும் புத்தகத்தை பார்த்து இயற்பா சேவிக்கும் முறை இருப்பதற்கு இதுதான் காரணம்.

7.திருவரங்கத்தமுதனார்–ராமானுஜ நூற்றந்தாதி

    அமுதனார் ராமானுஜர் மீது கொண்ட பற்றின் காரணமாக ராமானுஜரை போற்றும் விதமாக சில பிரபந்தங்களை செய்து அவற்றை எம்பெருமானார் முன் வைக்க, அதை படித்துப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து இருப்பது தனக்கு உவப்பானதாக இல்லை என்றார்

. கூரத்தாழ்வான் அறிவுரைப்படி ஆழ்வார்களிடத்திலும் திவ்யதேசங்களிடத்திலும் ராமானுஜர் கொண்ட பற்றைத் தெளிவுபடுத்தி, ராமானுஜ நூற்றந்தாதியை அமுதனார்பாடி, அதை ராமானுஜர் முன் வைத்தார். இதை பிரபன்ன காயத்திரி என்றும் சொல்லுவர்.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, சித்திரை மாதம் 11ம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி "இன்று என்னுடன் கூட வர வேண்டாம்" என்று சொல்லிவிட்டு, அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வாத்தியங்களை நிறுத்தச் சொல்லிவிட்டு, வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க, அதை பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார்.

           இன்றும் இந்த வழக்கம் அங்கு இருக்கிறது. அதே போல் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒரு அங்கத்தினராக ஆக்கிக்கொள்கிறார் என்பது. வாத்தியங்கள் இசைக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க அதை நம்பெருமாள் செவிசாய்க்கும் வைபவத்திற்காக.

    இன்றும் பெரிய சன்னதியில்(ரங்கநாதர் சன்னதியில்) இயற்பா சேவித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது. அதே வழக்கம் நாச்சியார் கோயிலிலும், ஆண்டாள், ஆழ்வார் சன்னதிகளில் பின்பற்றப்படுகிறது

*ஆழ்வார்கள் அருளிய திவ்வியப் பிரபந்தங்களை நாதமுனிகள் தொகுத்தார். பின்னர் இதில் இராமானுச நூற்றந்தாதியையும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தமாய் அமைந்தது.

No comments:

Post a Comment