Tuesday, May 19, 2020

Vedartha sangraham 9 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

வேதார்த்த சங்க்ரஹம்- 9

"ஸதேவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத், ஏகம் எவ அத்விதீயம்

சௌம்ய- அன்பு மகனே
அக்ரே – முதலில்
இதம்- இந்த பிரபஞ்சம்
ஸத் ஏவ- பிரம்மம் ஆகவே 
ஆஸீத்- இருந்தது 
(ஸத், தத், ஓம் என்ற சொற்கள் பிரம்மத்தை குறிக்கின்றன.)
ஏகம் ஏவ- அது மட்டும்தான் இருந்தது 
அத்விதீயம் – அதைத்தவிர வேறொன்றும் இல்லை

அக்ரே , முதலில் என்றால் எதற்கு முதலில்? படைப்பிற்கு முதலில் என்று அர்த்தம். அதாவது இந்த உலகம் படைப்பிற்கு முன் பிரம்மமாகவே இருந்தது என்று பொருள். ஏகம் ஏவ அத்விதீயம் ஒன்றுதான் இருந்தது இன்னொன்று இல்லை என்பதனால் அதிலிருந்துதான் எல்லாம் ஏற்பட்டது என்று பொருள்.

உதாரணமாக ஒரு பானை செய்வதற்கு மண் வேண்டும். இது முதல் காரணம் அல்லது உபாதான காரணம். (material cause_) குயவன் வேண்டும். இது நிமித்த காரணம். ( effiecient cause ) அதைசெய்யும் கருவி வேண்டும். உதவிக்காரணம் ( auxiliary cause) இங்கு பிரம்மத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என்பதனால் பிரம்மத்திலிருந்து, பிரம்மத்தினாலேயே பிரம்மத்தைக் கொண்டே செய்யப்பட்டது உலகம் என்று ஆகிறது.

சரி பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது? 
தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் பிரஜாயேய என்கிறார். அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. இதன் மூலம் மேற்கூறிய மூன்று காரணங்களும் பிரம்மமே என்று ஆகிறது.

இதற்கு அத்வைதக் கொள்கைப்படி என்ன விளக்கம் என்று பார்த்துப் பிறகு ராமானுஜர் என்ன பதில் கூறுகிறார் என்று பார்ப்போம்.

அத்வைதத்தின் விளக்கம் என்னவென்றால்., எப்படி பானை முதலியவை பெயர், உருவம் இவைகளினால் வேறுபட்டாலும் அத்தனையும் மண் என்பதுதான் உண்மையோ அதேபோல உலகத்தில் உள்ளவை யாவும் பெயர் , உருவம் இவற்றில்தான் வேறு உண்மையில் பிரம்மம்தான். எப்படி கயிறைப் பாம்பாகப் பார்க்கிறோமோ அதேபோல பிரம்மத்தை உலகமாகக் காண்கிறோம். பிரம்மம்தான் சத்யம் என்பதுதான் ம்ருத்திகேதஎவ சத்யம் என்னும் வாக்கியத்தின் பொருள்..இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். சர்க்கரையில் நிறைய பொம்மை செய்வதைப் பார்த்திருக்கிறோம். விதவிதமான பொருள்கள் மிருகங்கள் பட்சிகள் முதலியன. ஆனாலும் நமக்கு எல்லாம் சர்க்கரையாகத்தானே தெரிகிறது? அதே போல் பிரம்மஞாநிகளுக்கு உலகம் ப்ரம்மமாகத்தான் தெரிகிறது. குழந்தைகள் அந்த பொம்மைகளை எல்லாம் வாயில் போட்டாலோ உதிர்த்தாலோ ஒரு நிமிடத்தில் சர்க்கரையாகமாறிவிடும் என்பது தெரியாமல் நிஜம் என்று நினைத்து, என்னுடையது குடம், உன்னுடையது மீன், அவனுடையது வாத்து என்று நினைப்பதுபோல நாம் உலகத்தை வேறுபடுத்திப் பார்க்கிறோம்,.இதுதான ஏகவிக்ஞானேன சர்வ விக்ஞானம், அதாவது எது ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகிறதோ என்ற வாக்கியத்தின் பொருள்.

பிரம்மமே மாயையின் மூலம் பலவாகத் தெரிகிறது. இதுதான் தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் ப்ரஜாயேய , பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது என்பதன் அர்த்தம்.

இதற்கு ராமானுஜர் கூறும் பதில்,

எதுவும் உண்மை இல்லை என்றால் அவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏகவிக்ஞானேன சர்வவிக்ஞானம், எது ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் விளங்குமோ என்பதற்கு அர்த்தமே இல்லை.

.பிரம்மத்தை ஆன்மாவாகக் கொண்டதனால் எல்லாம் உண்மையில் பிரம்மமே என்ற பொருளில்தான் ஏகவிக்ஞானேன சர்வ விஞ்ஞானம் என்பது பொருந்தும்.

எப்படி மண்ணாலான பொருள்கள் பெயர் உருவம் இவை இன்றி மண்ணாகவே இருந்தனவோ அவ்வாறே இந்த உலகம் பிரம்மத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் இருந்தன . அப்போது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. இதுதான் ம்ருத்திகா இத்யேவ சத்யம் என்பதன் பொருள்.

பிரம்மம்தான் பிரபஞ்சத்தின் உபாதான், நிமித்த , உதவிக் காரணமாக இருப்பதால் பிரம்மத்தை தெரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சத்தை தெரிந்துகொள்ளலாம் என்று பொருள். எல்லாம் பிரம்மத்தில் சூக்ஷ்ம வடிவில் உள்ளன. அது ஸ்தூல வடிவத்தில் தோன்றுவதே தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாஎய என்ற வாக்கியத்தின் பொருள்.

சரி ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.


No comments:

Post a Comment