Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
முகுந்தமாலை
8. சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்தமந்த ஹஸிதானனாம்புஜம்
நந்தகோபதனயம் பராத்பரம்
நாரதாதிமுநிப்ருந்தவந்திதம்
நந்தகோபரின் புதல்வனும் மெல்ல மெல்ல விரியும் நகைப்பை உடையவனும், பரம புருஷனும் , நாரதர் முதலிய முனிவர்களால் வணங்கப்படுபவனும் ஆன ஹரியை எப்போதும் ஸ்மரிக்கிறேன்.
கிருஷ்ணனின் உருவத்தை நாம் பக்தியுடன் நோக்கும்போது அவன் முகத்தில் உள்ள புன்முறுவல் மெல்ல மெல்ல மலர்வது போல் தோன்றும். அது ஏன் என்றால் முதலில் அவன் முதலில் நாம் ஏதோ கோரிக்கையுடன் வந்தது போலப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்பது போல புன்னகை புரிகிறான்.
பிறகு நாம் எதுவும் கேட்க மறந்து அவன் முகாரவிந்தத்தையே பக்தியுடன் அனுபவிக்கையில் அவன் புன்னகை விரிகிறது. பக்தி மிகுந்து அது நம் கண்ணீராக வெளிப்படும்போது அவன் மலர்ந்து அன்புடன் சிரிக்கிறான்.
9. கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே
ஸ்ரமமுஷிபுஜவீசிவ்யாகுலே அகாத மார்கே
ஹரிஸரஸிவிகாஹ்யாபீய தேஜோஜலௌகம்
பவமருபரிகின்ன: கேதம் அத்ய த்யஜாமி
சம்சாரமாகிய பாலைவனத்தில் நீண்ட காலம் அலைந்து சோர்வுற்ற நான் பதங்கள் கரங்கள் என்ற தாமரைகள் பூத்ததும், கண்களாகிய மின்னும் மீன்களைக் கொண்டதும், ஸ்ரமத்தைப் போக்கும் அலைகளாகிய புஜங்களைக் கொண்டதுமான ஹரி என்னும் தடாகத்தில் மூழ்கி என் களைப்பைப் போக்கிக் கொள்கிறேன்.
ஒரு ரஸமான உவமை. ஹரியை ஒரு தடாகத்திற்கு ஒப்பிடுகிறார். அவருடைய கைகளும் பாதங்களும் அந்தத்தடாகத்தில் உள்ள தாமரை மலர்கள்.
சாதாரணமாக பகவானை தாமரைக் கண்கள் உடையவன் என்றுதானே கூறுவது வழக்கம். இங்கே அவை மீன்களுக்கு ஒப்பிடப்படுவது ஏன் என்றால், அவை மீன்களைப்போல் இங்கும் அங்கும் ஓடி பக்தர்கள் துன்பத்தில் இருக்கிறார்களா என்று பார்க்கின்றனவாம். அவருடைய புஜங்கள் அலைகளைப்போல பக்தரைக் காக்க விரைகின்றன.
பகவானின் கருணையே தடாகமாக வர்ணிக்கப்படுகிறது. (கருணாசாகரம்). இதில் மூழ்கியவருக்கு சம்சாரத்தினால் ஏற்பட்ட சிரமங்கள் மறைகின்றன.
No comments:
Post a Comment