Tuesday, February 25, 2020

Sri Chandrasekaramrutham: Periyavaa

Today's Sri Chandrasekaramrutham:

"...இந்த காலங்களில் முன்காலங்கள் போல் தபஸ் எப்படி பண்ணமுடியும்? அப்போ, நாம் நம்முடைய பாப நிவர்த்திக்காக என்ன பண்ணறது? இதைத் தான் பிரஹதாரண்ய உபநிஷத்து சொல்கிறது.
     நமக்கு உடம்புக்கு வருகிறது அல்லவா? மலேரியா ஜுரம் வந்தால் உடம்பு அப்படியே உதறுகிறது; டைபாய்டு ஜுரம் வந்தால் உடம்பு நெருப்பு மத்தியில் நிற்பது போல் எரிகிறது; வாய்க்கு பிடித்த பதார்த்தங்களை எல்லாம் சாப்பிடவே முடிவது இல்லை அல்லவா? இவற்றையே நாம் ஒரு "தபஸ்" என நினைத்துக் கொண்டு விடலாம். மலேரியா வந்தால் இமயமலை பனிக்கு நடுவில் தபஸ் பண்ணுவது போலும், டைபாய்டு வந்தால் பஞ்சாக்னி நடுவே தபஸ் பண்ணுவது போலும் எண்ணிக் கொள்ளலாம். அங்கெல்லாம் போய் அப்படி எல்லாம் பண்ணவேண்டும் என ஏன் நினைக்கிறாய்? அவற்றை உன்னால் செய்யமுடியாது என்று தான் பகவான் இம்மாதிரி எல்லாம் கொடுக்கிறார்.
    இவற்றையே அந்த மாதிரி தபஸ் பண்ணுவதாக ஏன் நாம் சங்கல்பம் செய்துகொண்டு விடக்கூடாது? ஆகவே, நம் சரீரத்துக்கு எந்த வியாதி வந்தாலும், எந்த கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையால் சிரமப்பட்டாலும், இவையனைத்தும் நமக்கு "வைராக்யத்தைக்" கொடுப்பதற்கு ஸ்வாமியால் நமக்கு கொடுக்கப்பட்டவை; இவைகள் எல்லாமே "தபஸ்" என நினைத்துக் கொண்டால், அதுவே நமக்கு ஒரு க்ஷேமம் என்று பிரஹதாரண்ய உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது.
     இப்படி பாவனைப் பண்ணிக் கொள்வதால் டாக்டர் பில் கூட ஜாஸ்தி ஆகாது. அதை விட்டு, உடம்புக்கு வந்தவுடன் டாக்டர் கிட்ட ஓடுவது, குணம் ஆகாவிட்டால் சஞ்சலப்படுவது, வேறு டாக்டர் கிட்ட ஓடுவது, கண்டகண்ட மருந்துகளைச் சாப்பிட்டு மேலும் உபத்திரவங்களை வாங்கிக்கொள்வது என்று நம் கஷ்டம், வேதனை மேலும் அதிகமாகின்றன அல்லவா?
     இந்த உபநிஷத்துக் கருத்தை அனுசரித்து நம் சங்கர பகவத்பாதாள் பரமேஸ்வரனை பார்த்து ஒரு ஸ்லோகம் பண்ணியிருக்கார்:

आत्मा त्वं गिरिजा मतिः परिजनाः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोप भोगरचना निद्रा समाधि स्थितिः।
सञ्चारं पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वागिरः
यतयत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम्।।
ஆத்மா த்வம் கிரிஜா மதி: பரிஜனா: பிராணாச் சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோப போகரசனா: நித்ரா ஸமாதி ஸ்திதி:
சஞ்சாரம் பதயோ: பிரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வாகிர:
யத்யத் கர்ம கரோமி தத்ததகிலம் சம்போ தவாராதனம்.

    "சம்போ! பரமேஸ்வரா! உனக்கு ஆராதனையோ, பூஜையோ பண்ண எனக்குத் தெரியாது; பூஜை பண்ணுவதானாலும் மனம் நிற்கிறதில்லை. ஆனால், நான் ஒவ்வொரு நாளும் எவ்வளவு விஷயங்களை அனுபவிக்கிறேன்! அவைகளை எல்லாம் உன் பூஜையாக ஏற்றுக்கொள்! நித்தமும் நான் பேசுகிற பேச்சு அத்தனையும் உன் ஸ்தோத்திரம் தான் என்று எண்ணிக்கொள் - ஒவ்வொரு நாளும் நான் நல்லதும் பேசுகிறேன், பொல்லாததும் பேசுகிறேன்; எப்படி பேசினாலும் ஒரு பொருளைப் பற்றித் தானே பேசுகிறேன்! எல்லாப் பொருளிலும் இருப்பது உண்மையில் நீ அல்லவா?" 

No comments:

Post a Comment