முகுந்தமாலை
27. மஜ்ஜன்மன:பலமிதம் மதுகைடபாரே
மத்ப்ரார்த்தநீய மதனுக்ரஹ ஏஷ ஏவ
த்வத்ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய
ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மரலோகநாத
மதுகைடபாரே- மது கைடபன் இவர்களை அழித்தவரே
மஜ்ஜன்மன:-என் பிறவிக்கு
பலம்- பயன்
இதம்- இதுதான்
மத்ப்ரார்த்தநீய மதனுக்ரஹ- உம்மிடம் நான் வேண்டக்கூடிய அனுகிரஹம்
ஏஷ ஏவ- இதுதான்
லோகநாத – உலகநாயகனே
த்வத்ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய
ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி – உன்னுடைய அடியார்க்கு அடியாரின் அடியார்க்கு அடியாரின் அடியார்க்கு அடியாரின் அடியன் என்று (ஏழாவது அடியானாக )
மாம் – என்னை
ஸ்மர – நினைப்பாயாக
ஏழாவது அடியான் என்பது ஆண்டாள் கூறியதைப்போல ஏழேழு பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் என்றும் வைத்துக்கொள்ளலாம். அல்லது ஏழு நிலைகளை, அதாவது பகவானோடு ஒன்றுதல் , ஜீவாத்மாவாக இருக்கும் நிலை, நான் எனது என்ற நிலை, புத்தி , மனம், உடல் குறிப்பதாகக் கொண்டால் இந்த ஏழு நிலைகளிலும் பக்தன் பகவானின் சேஷனாக விளங்குகிறான் என்று பொருள்.
28. நாதே ந: புருஷோத்தமே த்ரிஜகதாம் ஏகாதிப: சேதஸா
சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸுரே நாராயணே திஷ்டதி
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமேசம் அல்பார்த்ததம்
சேவாயை ம்ருகயாமஹே நரம் அஹோ மூகா வராகா வயம்
த்ரிஜகதாம் – மூவுலகங்களுக்கும்
ஏகாதிபே-ஒரே தலைவரும்
சேதஸா சேவ்யே- மனதினால் வணங்கத் தக்கவரும்
ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி- தன்னுடைய ஸ்தானத்தை அடையச்செய்பவரும் ஆன
நாராயணே ஸுரே - தேவனான நாராயணன்
ந: நாதே- நமக்கு நாதனாக
திஷ்டதி- இருக்கையில்
கதிபயக்ராமேசம் – சில கிராமங்களுக்கு மட்டும் தலைவனும்
அல்பார்த்ததம் – சொற்பமான பொருளே அழிப்பவனும் ஆன
யம் கம்சித்- யாரோ ஒரு
புருஷாதமம் – தரக்குறைவான
நரம் – மனிதனை
சேவாயை – பணிபுரியத்
ம்ருகயாமஹே- தேடி அலைகிறோமே
அஹோ- ஆச்சரியம்
வயம் - அப்படிப்பட்ட நாம்
மூடா: - மூடர்களும்
வராகா:- அற்பமான்வர்களும் ஆவோம்.
நாராயணன் மூவுலகுக்கும் அதிபதி. அவனை சேவித்தால் தன்னையே கொடுப்பான். அவ்வாறு இருக்கையில் அல்ப மனிதனிடம் பணி செய்து பயன் அடைய விரும்புகிறோமே என்கிறார்.
பக்தனுக்கு பகவானே சிறந்த செல்வம் . த்யாகராஜர் நிதி சால சுகமா ராமுனி சன்னிதி சேவா சுகமா என்றார். அதே போல வேதாந்த தேசிகரும் ஒரு பிடி அவல் உட்கொண்டு பெரும் செல்வம் தந்த அவனுடைய சேவையைக் காட்டிலும் அரச சேவை உயர்ந்ததா என்றார்.
முகுந்தமாலை
29. மதன பரிஹர ஸ்திதிம் மதீயே மனஸி முகுந்தபதாரவிந்ததாம்னி
ஹரநயனக்ருசானுனா க்ருசோ அஸி ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே:
மதன- மன்மதனே , முகுந்தபதாரவிந்ததாம்னி- முகுந்தனின் பாதத்தமரைகள் இருக்கும் இடமான ,மதீயே- என்னுடைய மனஸி-மனத்தில் , ஸ்திதிம் – இருத்தலை, பரிஹர – விட்டுவிடு. ஹரநயனக்ருசானுனா- சிவனின் கண்ணில் உள்ள அக்னியினால் , க்ருசோ அஸி- அழிந்திருக்கிறாய் . முராரே: -முரனை அழித்தவரின், சக்ரபராக்ரமம்- சக்ராயுதத்தின் வலிமை, ந ஸ்மரஸி-நினைவில்லையா?
பகவானின் இருப்பிடம் ஆன மனதில் காமத்துக்கு இடம் இல்லை. ஏனென்றால் அவன் முகுந்தன், அதாவது முக்தி அளிப்பவன்.
30.தத்வம் ப்ருவாணி பரம் பரஸ்மாத் மதுக்ஷரந்தீவ ஸதாம் பலானி
ப்ராவர்த்தய ப்ராஞ்சலி: அஸ்மி ஜிஹ்வே நாமானி நாராயண கோசராணி
ஜிஹ்வே – நாவே , ப்ராஞ்சலி: அஸ்மி – உன்னை கைகூப்பி வணங்குகிறேன். பரஸ்மாத் பரம் – எல்லாவற்றிலும் உயர்ந்ததும், தத்வம் ப்ருவானாணி – உண்மைப்பொருளைக் கூறுவதாகவும், மதுக்ஷரந்தீவ - தேனைப் பொழிபவை போலவும், ஸதாம் பலானி- நல்லோர்கள் விரும்பும் பலனாகவும் உள்ள , நாராயண கோசராணி- நாராயணனைக் குறிக்கும், நாமானி- நாமங்களை , ப்ராவர்த்தய –ஜபம் செய்.
இந்திரியங்களுக்குள் நாக்கை அடக்குவதுதான் மிகவும் சிரமம். நாக்கு ருசியை வெல்வது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் பேச்சை கட்டுப்படுத்துவதும். அதனால்தான் ஆழ்வார் நாவினிடம் வேண்டுகிறார் நாராயண நாமத்தையே எப்போதும் சொல்லென்று. பகவான் நாமம் கூறும் நாவிலிருந்து கடுஞ்சொற்கள் வராது. நாராயண நாமம் தேனைப்போல் இனியது என்கிறார்.
புரந்தரதாசர் 'ராமநாம பாயசகே கிருஷ்ண நாம சர்க்கரே,' ராமநாமம் பாயசம் போல் இனியது , க்ருஷ்ணநாமம் சர்க்கரையை போன்றது என்கிறார். பாயசத்தில் சர்க்கரை கூடினால் மேலும் இனிப்பு அல்லவா. அது போல ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண என்று ராம நாமமும் க்ருஷ்ண நாமமும் சேர்ந்தால் சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்ததுபோல.
கலியில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே போதுமானது ஆனால் அது கூட செய்ய முடியாமல் நம் கர்மவினை தடுக்கிறதே!
முகுந்தமாலை
31. இதம் சரீரம் பரிணாமபேசலம்
பததி அவச்யம் ச்லதஸந்தி ஜர்ஜரம்
கிம் ஔஷதை: க்லிச்யஸி துர்மதே
நிராமயம் க்ருஷ்ண ரசாயனம் பிப
இதம் சரீரம் – இந்த சரீரமானது பரிணாம் பேசலம்- முதிர்ச்சியால்இளைத்து, ச்லதஸந்தி ஜர்ஜரம்- மூட்டுக்கள் தளர்ந்து, அவச்யம் – நிச்சயமாக , பததி- விழப்போகிறது. துர்மதே – துர்புத்தியுள்ள ( பக்தியில்லாத) மூட- மூடனே, ஔஷதை:மருந்துகளால், கிம் –ஏன், க்லிச்யஸி- சிரமப்படுகிறாய் ? நிராமயம் –தீமையற்ற ( பக்கவிளைவுகளற்ற ) க்ருஷ்ண ரசாயனம்- கிருஷ்ணன் என்னும் ரசாயனத்தை, பிப – குடிப்பாயாக.
பகவான் நோயை அகற்றுகிறான். ஆனால் வைத்தியன் அதற்கு பணம் பெருகிறான். .( God cures the disease while the Physician gets the fee) என்று சொல்வதுண்டு. இது உண்மை. ஏனென்றால் ஒரே நோய் உள்ள இருவரில் ஒருவருக்கு குணமாகிறது ஆனால் இன்னொருவர் இறந்துவிடுகிறார் என்பதை கண்கூடாகக் காண்கிறோம். அதனால் வைத்தியரிடம் போய் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் இறைவனின் அருள் அவசியம்.
நாமெல்லாம் நாராயண பட்டாத்ரியைபோல் முழு நம்பிக்கையுடனம் இறைவனிடம் நீதான் என் நோயைத் தீர்க்கவேண்டும் என்று சரணடைய முடியுமானால் வைத்தியரிடமும் போக வேண்டாம் மருந்துகளையும் உண்ண வேண்டாம். ஆனால் நாம் அப்படியில்லையே. வைத்தியரிடமே முழு நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது! பகவானிடம் முழு நம்பிக்கை வருவது எப்படி?
ஆழ்வார் சொல்கிறபடி கிருஷ்ண நாமத்தையே ஔஷதமாகக் கொண்டு மற்ற மருந்துகளை எல்லாம் தூர எறிய முடியுமானால் அதுதான் பரமௌஷதம். மேலும் அது நிராமயம் ரசாயனம் அதாவது உடல் நோயை மட்டும் அல்ல பிறவித் துன்பத்தையே நீக்க வல்லது. இதையே 24வது ஸ்லோகத்திலும் கூறியுள்ளார்.
என்னுடைய ( my composition) பகவத்ச்சரணாஷ்டகம் என்னும் எட்டு ஸ்லோகங்களில் ஒன்று இந்தப் பொருளை பிரதிபலிக்கிறது. உடல் நோயுற்றபோதேல்லாம் நான் சொல்வது.
விவிதானி ஔஷதானி பவந்தி நிஷ்பலம்
வைத்யோபி ஆமயம் ந நாசயிதும் சக்த:
ஸ்திதே த்வயி மஹாவைத்யே ந கிஞ்சித் பயம் மே
தஸ்மாத் த்வமேவ சரணம் மம சக்ரபாணே
விதவிதமான மருந்துகள் பயனின்றிப் போயின. வைத்யராலும் நோயைத் தீர்க்க முடியவில்லை. மஹாவைத்யனான நீ உள்ளபோது எனக்கு ஒரு பயமுமில்லை. அதனால் உன்னையே சரணமடைகிறேன் சக்கரக்கையனே.
கிருஷ்ண ரசாயனம் என்பது நோய் வந்தபோது மட்டும் மருந்தல்ல. எப்போதும் உட்கொள்ளவேண்டிய அம்ருத ரசாயனம். எப்போதும் கிடைப்பது. . ( NO PRISCRIPTION NEEDED!) கிருஷ்ணரசாயனம் என்பது கிருஷ்ணானந்த லஹரியாகிய ஆனந்தக்கடல். அதில் மூழ்குவோருக்கு நோயுமில்லை சம்சாரத்துன்பமும் இல்லை
முகுந்த மாலை
32.தாரா வாராகரவரஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேதா: தவ ஸுரகணா: ப்ருத்யவர்க: ப்ரஸாத:
முக்திர்மாயா ஜகதவிகலம் தாவகீ தேவகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுத: த்வயி அதோ அன்யத் ந ஜானே
தே-உன்னுடைய, தாரா- மனைவி, வாராகரவரஸுதா- அலைகடலின்
மகளான லக்ஷ்மி, தனூஜ: - புதல்வன் , விரிஞ்சி: - பிரம்மா. வேதா: - வேதங்கள் , தவ- உன்னுடைய , ஸ்தோதா: - துதிப்பாடகர்கள்.
ஸுரகணா: - தேவர்கள் ப்ருத்ய்வர்க்க: - உனது சேவகர்கள். பிரசாத: - உனதருள் என்பது , முக்தி: - முக்தி. தாவகீ- உன்னுடைய மாயா- மாயையே, ஜகதவிகலம் – இந்த பிரபஞ்சம். தேவகி- தேவகி , தே மாதா – உன் தாய். மித்ரம் – உன் நண்பன் , வலரிபுஸுத: - இந்திரனின் மகனான அர்ஜுனன். த்வயி – உன்னிடத்தில், அத:அன்யத் - இதைத்தவிர , நஜானே – நான் வேறு ஒன்றும் காணவில்லை.
பகவானின் பெருமையைக் கூறும் ஸ்லோகம் இது. என்னிடம் என்ன பெருமையைக் கண்டாய் என்று பகவான் கேட்டதற்கு விடை கூறுவதாக உள்ள ஸ்லோகம். உன்னிடத்தில் என்ன பெருமை? பாற்கடலில் உதித்த திருமகள் உன் மனைவி. உலகை சிருஷ்டித்த பிரமன் உன் நாபியில் தோன்றியவன். வேதங்கள் உன்னையே துதிக்கின்றன. தேவர்கள் உனக்கு சேவை செய்கின்றனர். நீ அளிப்பதோ வேறு யாரும் கொடுக்க இயலாத முக்தி. இந்த உலகம் முழுவதும் உன் மாயை. அப்படிப்பட்ட நீ தேவகியின் மகனாகத் தோன்றினாயே. உன் நண்பன் இந்திரன் மகனான் அர்ஜுனன் . ( அதாவது நீ நாராயணன் அவன் நரன் ) இதைத்தவிர வேறு என்ன பெருமையைக் கூறட்டும்? என்கிறார்.,
33. க்ருஷ்ண: ரக்ஷது ந: ஜகத்த்ரயகுரு: க்ருஷ்ணம் நமஸ்யாமி அஹம்
க்ருஷ்ணேன அமரசத்ரவ: விநிஹதா: க்ருஷ்ணாய தஸ்மை நம:
க்ருஷ்ணாத் ஏவ ஸமுத்திதம் ஜகத் இதம் க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்மி அஹம்
க்ருஷ்ணே திஷ்டதி சர்வம் ஏதத் அகிலம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம்
ஜகத்த்ரயகுரு:.மூவுலகுக்கும் குருவான
க்ருஷ்ண: - கிருஷ்ணன்
ரக்ஷது ந: நம்மை ரட்சிக்கட்டும்
க்ருஷ்ணம் – கிருஷ்ணனை
நமஸ்யாமி அஹம் – நான் நம்ஸ்கரிக்கிறேன்
க்ருஷ்ணேன – கிருஷ்ணனால்
அமரசத்ரவ: - தேவர்களின் எதிரிகளான அசுரர்கள்
விநிஹதா: - கொல்லப்பட்டனர்.
க்ருஷ்ணாய தஸ்மை- அந்த கிருஷ்ணனுக்கு
நம: -நமஸ்காரம்
க்ருஷ்ணாத் ஏவ- கிருஷ்ணனிடம் இருந்தே
ஜகத் இதம்- இந்த உலகம்
ஸமுத்திதம்- உண்டாயிற்று
க்ருஷ்ணஸ்ய- கிருஷ்ணனுடைய
தாஸோஸ்மி அஹம்- தாசன் நான்.
க்ருஷ்ணே- கிருஷ்ணனிடத்தில்
சர்வம் ஏதத் அகிலம்- இந்த அகில பிரபஞ்சமும்
திஷ்டதி- நிற்கிறது.
ஹே க்ருஷ்ண – ஹரே கிருஷ்ணா
ரக்ஷஸ்வ மாம்- என்னைக் காப்பாற்று
இந்த ஸ்லோகத்தில் க்ருஷ்ண என்ற சொல்லின் எல்லா வேற்றுமை உருபுகளும் சொல்லப் பட்டிருக்கின்றன.. இந்த ஸ்லோகத்தை தெரிந்துகொண்டாலே வேற்றுமை உருபுகளையும் அவற்றின் பொருளையும் தெரிந்து கொள்ளலாம். முந்தைய லோகத்தைப்போலவே இதுவும் பகவானின் பெருமையைக் கூறுவது.
No comments:
Post a Comment