Tuesday, January 28, 2020

Srimad Bhagavatam skanda 10 adhyaya 28 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தம்

அத்தியாயம் 28

கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் கைசிக ஏகாதசியன்று உபவாசம் இருந்து பகவானை ஆராதித்த நந்தகோபர் அன்றிரவு துவாதசி வந்ததும் நீராடுவதற்கு யமுனையில் இறங்கினார். அது அசுர வேளை, அப்போது நீராடக் கூடாது என்று அறியாமல் அவர் நீரில் மூழ்கியதும் வருணனின் பணியாள் ஒருவன் அவரைப் பிடித்து வருணனிடம் அழைத்துச் சென்றான்.

நீரில் மூழ்கியவர் வெளிவராததைக் கண்ட கோபர்கள் கிருஷ்ணனை நோக்கிக் கூக்குரல் இட்டனர். நடந்ததை அறிந்த கிருஷ்ணன் அவர்களின் பயத்தை நீக்க வருண லோகம் சென்றார். தன் உலகுக்கு வந்த பகவானை வனங்கி வருணன் கூறினான்.

"ப்ரபுவே இன்றுதான் என் உடல் படைத்த பயனைப் பெற்றேன். தங்கள் திருவடிகளைப் பற்றியவர்கள் சம்சாரக்கடலைக் கடக்கிறார்கள்.

நமஸ்துப்யம் பகவதே ப்ரஹ்மணே பரமாத்மனே
ந யத்ர ஶ்ரூயதே மாயா லோகஸ்ருஷ்டிவிகல்பனா

பரப்ரம்மமாகவும் பரமாத்மாவாகவும் அறியப்படுகிற உமக்கு நமஸ்காரம். உலகஸ்ருஷ்டியைக் காட்டிலும் வேறுபட்டதான மாயை உங்களிடம் செயல்படுவதில்லை.

அறியாமையால் உங்கள் பெருமையை உணராத என் சேவகன் உம் தந்தையை இங்கு அழைத்து வந்து விட்டான். அதை பொறுத்தருள வேண்டும். உங்கள் தந்தையை அழைத்துச் செல்லுங்கள். என்னை அனுக்ரஹியுங்கள். "

இவ்வாறு வருணனால் துதிக்கப்பட்ட பகவான் நந்தரை அழைத்துச்சென்றார். நடந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த நந்தகோபர் அதைப்பற்றி எல்லோரிடமும் கூறி வியந்தார். கோபர்கள் அதைக் கேட்டு கிருஷ்ணனாக வந்தவன் பகவானே என்று அறிந்து அவன் இருப்பிடமான வைகுண்டத்தைக் காண ஆவல் கொண்டனர்.

இதை அறிந்த பகவான் தம் அன்பர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யத் திருவுள்ளம் கொண்டார். பிறகு பெருங்கருணையுடன் இருள் சூழ்ந்த இந்த உலகத்திற்கு அப்பால் உள்ள தன் ஸ்ரீவைகுண்டத்தையும், தன் ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் கோபர்களுக்குக் காட்டினார்.

சுகர் கூறினார்.

ஸத்யம் ஞானம் அனந்தம் யத் ப்ரஹ்மஜ்யோதிஸனாதனம்
யத் ஹி பச்யந்தி முனய: குணாபாயே சமாஹிதா:
முதலில் ஸத்தியமும், ஞானமும், எல்லையில்லாப் பெருமையுடையதும், ஜ்யோதிர்மயமானதும், முக்குணங்களைக் கடந்து சமாதிநிலையை அடைந்த யோகிகளே காணூம் அந்த பரப்ரஹ்ம நிலையை அவர்களுக்குக் காட்டினார்.

பிறகு அவர்களை யமுனையில் உள்ள ப்ரஹ்மஹ்ரதம் என்ற மடுவுக்கு அழைத்துப் போய் நீராடச்செய்தார். மூழ்கி எழுந்தவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தைக் கண்டனர். நந்தர் முத்லியவர்கள் அதைக் கண்டு பரமானந்தம் அடைந்து அங்கு வேதமே உருவமேற்று பக்வானைத் துதிப்பதைக் கண்டு வியந்தனர்

(ஆயினும் பகவானின் மாயையால் யசோதை கண்ணன் வாயில் மூவுலகும கண்டும் அதை மறந்தது போல் அதை மறந்தனர்.)

No comments:

Post a Comment