Tuesday, January 28, 2020

Shyamala Navaratri

ஶ்ரீச்யாமளா நவராத்ரி சிறப்புப் பதிவு 1:

ஶ்ரீ ச்யாமளா நவராத்ரோத்ஸவம் எனும் மாக நவராத்ரி:

பரதேவதையான ஶ்ரீஜகதம்பிகையை உபாஸிக்க ஏற்ப்பட்ட வ்ரதங்களிலே ச்ரேஷ்டமானது நவராத்ரி வ்ரதம். நவராத்ரி புண்யகாலைத்தில் அம்பாளை ஆராதிப்பது அதிவிஷேஷம் என்றும் தேவி மஹாமந்த்ர ஜபங்களை செய்து கொண்டு பரதேவதையை உபாஸிக்க சிறந்தகாலம் என்பதும் சாஸ்த்ரங்களின் துணிபு.

தேவி பாகவதம் விஷேஷமாக நான்கு நவராத்ரங்களையும் கூறுகிறது.

அவற்றுள் ஶ்ரீவித்யோபாஸகர்கள் பொதுவாக வருஷத்தில் சைத்ர(பங்குனி -- சித்திரை) மாதத்தில் வரும் நவராத்ரியை வஸந்த நவராத்ரி என்றும் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக அம்பிகையை உபாஸிக்க மிகுந்த விஷேஷமான காலமானதால் ஶ்ரீலலிதா நவராத்ரி என்றும் கூறுவது வழக்கம்.

ஆஷாட மாதத்தில்( ஆனி -- ஆடி) வரும் நவராத்ரியில் ஶ்ரீமஹாவாராஹியாக அம்பாளை உபாஸிக்கும் வழக்கம் இருப்பதால் ஆஷாட நவராத்ரி அல்லது ஶ்ரீவாராஹி நவராத்ரி என்றும்,

ஆச்வீன மாதத்தில்( புரட்டாசி -- ஐப்பசி) வரும் நவராத்ரியில் ஶ்ரீசண்டிகா பரமேச்வரியாக அம்பாளை உபாஸிக்கும் வழக்கம் இருப்பதால் ஶ்ரீதுர்கா நவராத்ரி, சரத்காலத்தில் வருவதால் ஶ்ரீசாரதா நவராத்ரி, நவராத்ரிகளில் முக்யமானதால் மஹாநவராத்ரி என்றும்

மாக மாதத்தில்(தை -- மாசி) வரும் நவராத்ரியில் ஶ்ரீராஜச்யாமளா ரூபத்தில் அம்பாளை உபாஸிப்பதால ஶ்ரீச்யாமளா நவராத்ரி அல்லது மாக நவராத்ரி என்றும்

உபாஸிக்கும் வழக்கம் உண்டு!!

ஶ்ரீவித்யோபாஸகர்கள் பதினைந்து நாளும் ப்ரதமை தொடங்கி பௌர்ணமி வரையிலும், மற்றோர்கள் நவமி வரையில் நவராத்ரங்களில் அம்பாளை உபாஸிப்பது வழக்கம்.

ஶ்ரீராஜச்யாமளா பரமேச்வரியை விஷேஷமாக இந்த நவராத்ரியில் ஆராதிக்க வேணும் என்பதும், ஶ்ரீமஹாச்யாமளையின் அனுக்ரஹமே ஶ்ரீலலிதோபாஸனையில் சீக்ரம் ஸித்தி அளிக்கும் என்பதும், ஶ்ரீச்யாமளை எனும் மஹாமந்த்ரிணி தேவியே ஶ்ரீலலிதையினடத்தில் பக்தனுக்கு முக்தியளிக்க பரிந்துரை செய்வாள் என்பதாலும் ஶ்ரீச்யாமளா தேவி உபாஸனை முக்யமானது.

வாக்கிற்கு அதிஷ்டாத்ரியான ஶ்ரீச்யாமளா பரமேச்வரி அனுக்ரஹம் இருந்தாலும் ஸர்வ தேவதா மந்த்ரங்களும் ஒரு முறை உச்சரிப்பதாலேயே ஸித்தி ஆகி விடும் என்பது ஶ்ரீச்யாமாளையின் காருண்யத்தைக் கூறுவது.

ஸகல மந்த்ரங்களுக்கும் ஈச்வரியாக தேவி மஹாச்யாமளையே விளங்குகின்றாள். ஶ்ரீலலிதேசிக்கும் ஶ்ரீச்யாமளைக்கும் எள்ளளவு பேதமும் இல்லை.

 ஸௌபாக்யலக்ஷ்மி கல்பத்தில் ஶ்ரீமஹாவிஷ்ணு ஶ்ரீலக்ஷ்மி அம்பாளிடம்
"ஓ!! லக்ஷ்மி!! தந்த்ரங்கிலுள்ள லலிதா தேவியின் நாமங்களின் ஸாரம் திரண்டு ஶ்ரீச்யாமளா ஸஹஸ்ரநாமமாக உள்ளது". என்று கூறுவதால் ஶ்ரீலலிதா தேவியின் நாமங்களே தான் ச்யாமளைக்கும் கூறப்படுகிறது!! ஶ்ரீலலிதையே ச்யாமளையாக வந்தாள் என்றும் தெரிகிறது.

மேலும் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் ஆனந்தோல்லாஸத்திலிருந்து ஶ்ரீமஹாகணபதியும்
புத்தியிலிருந்து ஶ்ரீராஜச்யாமளையும்
அஹங்காரத்திலிருந்து ஶ்ரீமஹாவாராஹியும்
விளையாட்டிலிருந்து ஶ்ரீபாலா த்ரிபுரஸுந்தரியும்
குண்டலினியிலிருந்து ஶ்ரீபூர்ண காயத்ரியும்
பெருமையிலிருந்து ஶ்ரீசண்டிகா பரமேச்வரியும்
அர்த்தாம்சத்திலிருந்து ஶ்ரீமஹாதுர்கையும்
வாக்கிலிருந்து மாலினி தேவியும்
க்ரூரத்திலிருந்து ப்ரத்யங்கிரா தேவியும் தோன்றியதாகவே கூறப்படுவதால், இந்தந்த தேவதோபாஸனை செய்வோரும் ஶ்ரீலலிதாம்பாளையே அந்தந்த வடிவங்களில் பூஜிக்கின்றனர் என்பதாகும்!!

மதங்க ருஷிக்கு பெண்ணாய்த் தோன்றிய ஶ்ரீலலிதா தேவிக்கு மாதங்கி என்று பெயர். அவளே ஶ்ரீச்யாமளை என்று கூறுவதும் உண்டு!!

சோழ தேசத்திலமைந்த சிவாலயங்களிலே அம்பாள் ஶ்ரீராஜமாதங்கி ஸ்வரூபமாக ப்ரகாசிக்கும் க்ஷேத்ரங்கள் உண்டு!!

திருநாங்கூர் -- மதங்கேச்வரர் கோவில் -- ஶ்ரீராஜமாதங்கீச்வரி/ ஶ்ரீமஹாச்யாமளா

திருவெண்காடு -- ச்வேதாரண்யேச்வரர் கோவில்-- ஶ்ரீப்ரஹ்மவித்யாம்பாள் -- ஶ்ரீலகு ச்யாமளா

திருக்கோலக்கா -- ஶ்ரீதாளபுரீச்வரர் கோவில் -- ஶ்ரீத்வனிப்ரதாம்பாள் -- ஶ்ரீ வாக்வாதினி

அம்பர்மாகாளம் -- ஶ்ரீமஹாகாளநாதர் கோவில்-- ஶ்ரீபயக்ஷயாம்பிகா -- ஶ்ரீராஜ மாதங்கீச்வரி

பாண்ட்ய ராஜகுமாரியான ஶ்ரீமீனாக்ஷி பரதேவதை ஶ்ரீச்யாமளை என்று கூறினாலும்,  ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ரூபத்திலேயே பல மஹான்கள் கண்டுள்ளனர்!!

இந்த புண்ய நவராத்ரி காலத்தில் ஶ்ரீமஹாச்யமாளாம்பாளை உபாஸித்து/வழிபட்டு அவளருளைப் பெறுவோம்!!

ஜய மாதங்க தனயே!! ஜய நீலோத்பலத்யுதே!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:


No comments:

Post a Comment