முகுந்த மாலை
8. சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்தமந்த ஹஸிதானனாம்புஜம்
நந்தகோபதனயம் பராத்பரம்
நாரதாதிமுநிப்ருந்தவந்திதம்
நந்தகோபரின் புதல்வனும் மெல்ல மெல்ல விரியும் நகைப்பை உடையவனும், பரம புருஷனும் , நாரதர் முதலிய முனிவர்களால் வணங்கப்படுபவனும் ஆன ஹரியை எப்போதும் ஸ்மரிக்கிறேன்.
கிருஷ்ணனின் உருவத்தை நாம் பக்தியுடன் நோக்கும்போது அவன் முகத்தில் உள்ள புன்முறுவல் மெல்ல மெல்ல மலர்வது போல் தோன்றும். அது ஏன் என்றால் முதலில் அவன் முதலில் நாம் ஏதோ கோரிக்கையுடன் வந்தது போலப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்பது போல புன்னகை புரிகிறான்.
பிறகு நாம் எதுவும் கேட்க மறந்து அவன் முகாரவிந்தத்தையே பக்தியுடன் அனுபவிக்கையில் அவன் புன்னகை விரிகிறது. பக்தி மிகுந்து அது நம் கண்ணீராக வெளிப்படும்போது அவன் மலர்ந்து அன்புடன் சிரிக்கிறான்.
9. கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே
ஸ்ரமமுஷிபுஜவீசிவ்யாகுலே அகாத மார்கே
ஹரிஸரஸிவிகாஹ்யாபீய தேஜோஜலௌகம்
பவமருபரிகின்ன: கேதம் அத்ய த்யஜாமி
சம்சாரமாகிய பாலைவனத்தில் நீண்ட காலம் அலைந்து சோர்வுற்ற நான் பதங்கள் கரங்கள் என்ற தாமரைகள் பூத்ததும், கண்களாகிய மின்னும் மீன்களைக் கொண்டதும், ஸ்ரமத்தைப் போக்கும் அலைகளாகிய புஜங்களைக் கொண்டதுமான ஹரி என்னும் தடாகத்தில் மூழ்கி என் களைப்பைப் போக்கிக் கொள்கிறேன்.
ஒரு ரஸமான உவமை. ஹரியை ஒரு தடாகத்திற்கு ஒப்பிடுகிறார். அவருடைய கைகளும் பாதங்களும் அந்தத்தடாகத்தில் உள்ள தாமரை மலர்கள்.
சாதாரணமாக பகவானை தாமரைக் கண்கள் உடையவன் என்றுதானே கூறுவது வழக்கம். இங்கே அவை மீன்களுக்கு ஒப்பிடப்படுவது ஏன் என்றால், அவை மீன்களைப்போல் இங்கும் அங்கும் ஓடி பக்தர்கள் துன்பத்தில் இருக்கிறார்களா என்று பார்க்கின்றனவாம். அவருடைய புஜங்கள் அலைகளைப்போல பக்தரைக் காக்க விரைகின்றன.
பகவானின் கருணையே தடாகமாக வர்ணிக்கப்படுகிறது. (கருணாசாகரம்). இதில் மூழ்கியவருக்கு சம்சாரத்தினால் ஏற்பட்ட சிரமங்கள் மறைகின்றன.
10.ஸரஸிஜநயனே ஸசங்கச்சக்ரே
முரபிதி மா விரமஸ்வ சித்த ரந்தும்
ஸுகதரம் அபரம் ந ஜாது ஜானே
ஹரிசரணஸ்மரணாம்ருதேன துல்யம்
. மனமே முரனைக் கொன்றவனும், தாமரைக் கண்ணனும் சங்கு சக்கரம் ஏந்துபவனான ஹரியை நினைக்கும் இன்பத்தை மறக்காதே. ஹரிசரணஸ்மரணமாகிய அம்ருதத்தை விட மேலானது எதுவும் இல்லை
.மனம் என்பது சஞ்சலமானது அதனால்தான் அதை கட்டுப்படுத்துவது காற்றைக் கட்டுப்படுத்துவது போல கடினம் என்று அர்ஜுனன் கூறினான். அதற்கு கண்ணன் அப்யாசேன து கௌந்தேய வைராக்யேன ச க்ருஹ்யதே என்று பதிலுரைத்தான்
. அப்யாசம் என்பது எப்போதும் நினைத்தல். அவனுடைய நாமஸ்மரணம் சதா செய்யவேண்டும்.
வைராக்கியம் என்பது மனதை மற்ற விஷயங்களில் இருந்து இழுப்பது. பகவானின் உருவத்தை சதா தியானித்தால் மற்ற விஷயங்களில் மனம் செல்லாது.
11.மாபீர்மந்தமனோ விசிந்தய பஹுனாயாமீ:: சிரம் யாதனா:
நாமீ ந பிரபவந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீதர:
ஆலஸ்யம் வ்யபனீய பக்திசுலபம் த்யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸனாபனோதன கரோ தாஸஸ்ய கிம் ந க்ஷம:
மனமே, யா அமீ: சிரம் யாதனா:- மாபீ: - நரகத்தின் பலவேறு தண்டனைகளைப் பற்றி அஞ்சாதே . இவை பாப ரிபவ: - பாவிகளுக்குத்தான் எதிரிகள். ஸ்வாமீ நனு ஸ்ரீதர:- நமக்குத்தான் நம் சுவாமி ஸ்ரீதரன் இருக்கிறாரே. ஆலஸ்யம் வ்யபனீய- காலதாமதம் செய்யாமல் பக்தி ஸுலபம்- பக்திசெய்வதற்கு ஸுலபமான , நாராயணம்- நாராயணனை த்யாயஸ்வ- தியானிப்பாய். லோகஸ்ய –உலகம் முழுவதும் உள்ள வ்யஸனாபநோதனகர: - எல்லா துக்கங்களையும் போக்குபவருக்கு தாஸஸ்ய- பக்தனின் துக்கத்தை கிம் ந க்ஷம: -போக்க முடியாதா?
இதன் கருத்து என்னவென்றால் பக்தனுக்கு மரண பயமோ அதன் பின் நரகவாஸத்தின் பயமோ ஏற்படுவதில்லை. முந்தைய ஸ்லோகத்தில் பகவானை எப்போதும் நினைக்கக் கூறுகிறார். ஆனால் நமக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து நமக்கு அருள்வானா என்ற பயம் வரலாம். அதற்கு இந்த ஸ்லோகம் பதில் கூறுகிறது.
உலகத்தையே காக்கும் பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார் என்று ஆழ்வார் அறுதியிட்டுக் கூறுகிறார்.. ஸ்ரீபாஷ்யத்தின் மங்களஸ்லோகத்தில் ராமானுஜர் , வினதவிதித பூத வ்ரதரக்ஷைக தீக்ஷ: என்று பகவானைக் குறிப்பிடுகிறார். அதாவது அவன் சரணமடைந்தவர் எவராயினும் அவரை ரட்சிக்கும் வரதம் பூண்டவன் என்று.ஜடாயு, கஜேந்தர்ன் முதலியோர் இதற்கு உதாரணம். அதனால்தான் பெரியாழ்வார் 'ஒப்பிலேன் ஆகிலும் நின்னை அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்,' என்றார்.
பகவான் கீதையில் 'அபிசேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அனந்யபாக் ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ,' பெரும் பாவியானாலும் என்னிடம் பக்தி கொண்டு என்னையே தியானித்தானாகில் அவன் நல்லவனாகவே எண்ணப்படுவான். ஏன் என்றால் அவன் ,' க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா,' சீக்கிரமே அவன் பாவங்கள் அழிந்து தர்மாத்மாவாகி விடுகிறான்.' என்று கூறுகிறார்.
அதனால் தான் இங்கு ஆழ்வார் , 'ஆலஸ்யம் வ்யபனீய,' என்று கூறுகிறார் அவன் நமக்கு அருள் செய்யவில்லைஎன்றால் அது நம் குற்றமே. ஏனென்றால் அவன் பக்தி ஸுலபன், பக்தியினால் எளிதில் அடையக் கூடியவன்.
No comments:
Post a Comment