Monday, December 9, 2019

Namadevar part1 spiritual story

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விட்டல விட்டல பாண்டுரங்கா

நாமதேவர் -1

நாமதேவர்

நாமதேவர் 13-வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஞானதேவர், முக்தாபாய், ஜனாபாய் , கோராகும்பர்,கபீர் மற்றும் சிலர் இவருடைய ஸமகாலத்தவர் மட்டும் அன்றி பக்திப்பாதையில் சந்தித்து ஒன்றாக பயணித்தவர்கள். முகலாய ஆட்சியில் இந்தியா இருந்தபோது இவர்கள் நாமசங்கீர்த்தனத்தால் மட்டுமே பகவானை அடைய முடியும் என்று நிரூபித்தவர்கள்.

ஜனாபாய் இயற்றிய அபங்க் ஒன்றில் இவர்கள் பெருமையை இவ்வாறு கூறுகிறாள்.

விடுமாஜா லேங்குரவாளா சங்க லேங்குராஞ்சாமேளா
(விட்டலன் தன் பக்தர்களை சுமந்து செல்கிறான்.)

ஏகநாத் காந்த்யாவரீ கபீராத் ஹாதோதரீ
புடே சாலே ஞானேஸ்வர் மாயே முக்தாயி ஸுந்தர்

(ஏகநாதர் விட்டலனின் தோளில், கபீர் அவன் கையில், ஞானேஸ்வர் அவனுடைய முதுகிலும் மார்பில் முக்தாபாயியையும் சுமந்து செல்கிறான்.)

கோராகும்பா மாண்டீவரீ சோகாமேளா பரோபரீ
பன்ஹாபசே கடியேவரீ நாம கராங்குலீதரீ

( கோராகும்பா அவன் தொடைமீதும் சோகாமேளா அவன் பக்கத்திலும் , பன்ஹா அவன் இடுப்பிலும் நாமதேவர் அவன் விரலைப் பிடித்துக்கொண்டும் காணப்படுகிறார்கள்.)

நாமதேவர் பண்டரிபுரத்தைச் சேர்ந்தவர். தாமசேதி என்ற தையற்காரரும் அவர் மனைவியான குணாபாயும் பாண்டுரங்கனின் பக்தர்கள். தினமும் உணவை பாண்டுரங்கனுக்கு சமர்ப்பித்துப் பிறகே உண்ணும் வழக்கம் உடையவர்கள். அவர்களுக்கு சந்ததி இல்லாமையால் வருந்தினபோது ஒருநாள் பாண்டுரங்கன் கனவில் தோன்றி மறுநாள் சந்த்ரபாகா நதியில் அவர்களுக்கு ஒரு குழந்தை கிடைக்கும் எனக் கூறினான்.

மறுநாள் தாமசேதி நதியில் குளிக்கப் போகையில் ஒரு பெரிய பேழை மிதந்து வருவதையும் அதற்குள் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்பதையும் கண்டார். இது பாண்டுரங்கனின் அருளே என உணர்ந்து அந்தக் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச்சென்றார்.

நாமதேவர் பக்தி நிறைந்த சூழ்நிலையில் வளர்ந்தாலும் இயற்கையிலேயே பக்திமானாகத் திகழ்ந்தார். உத்தவரே பக்தியைப் பரப்ப பகவானின் திருவுள்ளப்படி நாமதேவராகத் தோன்றினார் என்று கருதப்படுகிறது.

ஒரு சமயம் தாமசேதி வெளியூர் சென்றபோது நாமதேவரின் தாய் சமைத்த உணவை பாண்டுரங்கனுக்கு நைவேத்யம் செய்யுபடி கூறினாள். நாமதேவரும் அதை பாண்டுரங்கன் முன் வைத்து அவனை வந்து சாப்பிடுமாறு கூற அவன் வராததால் கதறி அழுதார் . அவருடைய பக்திக்கு மகிழ்ந்து பாண்டுரங்கன் நேரில் பிரசன்னமாகி அந்த உணவை உண்டான். பிறகு வீட்டிற்குச் சென்றபின தாய் உணவு எங்கே என்று கேட்க அதை பாண்டுரங்கன் உண்டுவிட்டான் என்று கூறினார்.

இதைக் கேட்டுக்கொண்டே வந்த அவர் தந்தை அதை நம்பவில்லையானாலும் நாமதேவருடைய களங்கமில்லாத முகத்தை பார்க்கையில் தன் பிள்ளையை சந்தேகிக்க இயலவில்லை. 
அடுத்த நாள் நாமதேவரை அழைத்துக்கொண்டு அவர் தந்தை கோவிலுக்குச் சென்றார்.

அப்போது நாமதேவர் பாண்டுரங்கனை வந்து உணவை உண்ணுமாறு கேட்க அவன் வரவில்லை.அப்போது நாமதேவர் பாண்டுரங்கனிடம் அவன் வராவிடில் தன் பெற்றோர் தன் வார்த்தையை நம்பமாட்டார்கள் என்று இறைஞ்சினான். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்து. பாண்டுரங்கன் வாயைத் திறக்க நாமதேவர் அவனுக்கு தன் கையால் உணவு ஊட்டியதைக் கண்டு வியந்த அவன் பெற்றோர் தங்கள் புதல்வன் ஸாமான்ய மனிதப்பிறவி அல்ல என்பதை உணர்ந்தார்கள். 

No comments:

Post a Comment