Wednesday, October 16, 2019

Veda competition before Periyavaa

பெரியவா திருவடியே 
                   சரணம். 

இப்போது சொல்லப் போகிற சம்பவம் நடந்தது 1950-களின் இறுதியில். கும்பகோணம் நேடிவ் ஸ்கூலில் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவன் சங்கரன் ( தற்போது சென்னையில் பிரபல ஆடிட்டராக இருக்கிறார்)

பள்ளியில் பாடம் படிக்கின்ற காலத்திலேயே ருத்ரம், சமகம், ஸ்ரீசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்யக் கூடிய நல்ல ஒரு வாய்ப்பு சங்கரனுக்கு அமைந்தது.

பொதுவாக பள்ளியில் படித்து வருகின்ற காலத்தில் படிப்பு அல்லாத விஷயங்களை ஒரு மாணவன் கற்றுவருகிறான் என்றால் அதில் அவனுக்கு நாட்டம், அதிகம் இருக்கிறது என்று பொருள். மாணவன் விரும்பாத எந்த ஒரு விஷயத்தையோ கலையையோ அவனிடம் வலிய புகுத்தக் கூடாது. சிரத்தை இல்லாமல் கற்றுக் கொள்கிற எந்த ஒரு கலையும் மனதில் பதியாது. இதனால் எவருக்கும் லாபம் இல்லை. ஆனால் இன்றைக்கு இருக்கிற பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளுக்குச் சில கலைகளை வலியவே புகுத்துகிறார்கள். பாவம், பிள்ளைகள். போகட்டும். சங்கரனிடம் வருவோம்.

வேத சாஸ்திரங்களைக் கற்கவேண்டும், பிறர் கூறக் கேட்க வேண்டும் என்கிற ஆவலும் சிரத்தையும் சங்கரனுக்கு அந்த வயதிலேயே இருந்தது.

கும்பகோணத்தில் காவிரிக்கரை ஓரமாக அமைந்துள்ள மடத்துத் தெருவில் சங்கரமடம் ஒன்று உண்டு. ஒரு காலத்தில் இந்த மடம், காஞ்சி பீடத்தின் தலைமை பீடமாகக் கூட விளங்கியது. மிகவும் சாந்நித்தியமான மடம். காஞ்சி ஸ்ரீமடத்தை அலங்கரித்த சில ஆச்சார்யர்கள் இங்கே அதிஷ்டானம் கொண்டிருக்கிறார்கள்.

வேதம், சாஸ்திரம் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் அப்போது இந்த மடத்தில் பல மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. சாஸ்திரத்தில் தேர்ந்த சில பண்டிதர்களைக் கொண்டு, இந்த வகுப்புகள் தினமும் காலை ஆறு மணியிலிருந்து எட்டுமணி வரை (இரண்டு மணி நேரம்) நடந்து வந்தன. சுமார் முப்பது மாணவர்கள் இதைக் கற்று வந்தனர்.

இந்த மாணவர்களுக்குள் ஒரு போட்டியே உண்டு. அதாவது, எந்த மாணவர் வேதங்களை அட்சர சுத்தமாகச் சொல்கிறார் என்று. ஒவ்வொரு மாணவருமே 'நான் முந்தி... நீ முந்தி' என்று போட்டி போட்டுக் கொண்டு படிப்பார்கள்.

போட்டி சில இடங்களில் ஆரோக்கியத்தை வளர்க்கும். சில இடங்களில் பொறாமையை வளர்க்கும்.

சாதாரணமாக போட்டியும் பொறாமையும் மாணவர்களிடத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த முப்பது மாணவர்களுக்குப் பயிற்றுவித்த அந்த ஆசிரியர் ஏனோ எல்லா மாணவர்களையும் ஒரே தராசுத் தட்டில் வைத்துப் பாடம் சொல்லித் தரவில்லை. சில மாணவர்களுக்கு வேதங்களைக் கற்பிப்பதில் ஒரு பாரபட்சம் காட்டினாராம்.

பொதுவாக, கலைகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றாலே அது இறைவன் அருள். கலைமகளின் பரிபூரண அருள் ஒருவரது நாவில் குடி கொண்டால் தான், வேதம் போன்ற பொக்கிஷங்கள் பாராயணம் செய்யும் பேறு கிடைக்கும்.

சங்கரனுக்கு வேதம் சொல்லித்தந்த ஆசிரியரோ, சங்கரன் மற்றும் குறிப்பிட்ட ஏழெட்டு மாணவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை. ஏனைய மாணவர்களுக்கு நன்றாகப் பயிற்றுவிப்பது தவிர, அவர்கள் கேட்கும் சந்தேகங்களைக் களைவது என்று இருப்பார். சங்கரன் மற்றும் ஏழெட்டு மாணவர்களை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.

இந்த முப்பது மாணவர்களில் திறமையான சிலரைத் தேர்ந்தெடுத்து வேதம் ஒப்புவிக்கும் போட்டி ஒன்று கும்பகோணம் மடத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சிலர், இதற்கென வரவழைக்கப்படும் ஒரு பண்டிதரின் முன் தாங்கள் கற்றதையும் அவர்கள் கேட்பதையும் சரளமாக ஒப்புவிக்க வேண்டும். மிகச் சிறந்த மாணவர்களை அவர் தேர்ந்தெடுப்பார் என்று கும்பகோணம் சங்கரமடத்தில் உள்ள பண்டிதர்கள் முடிவு செய்தார்கள்.

இந்தப் போட்டியில் நீதிபதியாகக் கலந்து கொண்டவர் உண்மையிலேயே நீதிபதியாக இருந்த தஞ்சை லட்சுமண ஐயர் என்பவர். போட்டி நடத்துவதற்கான நாளாக ஒரு ஞாயிற்றுக்கிழமை குறிக்கப்பட்டது. காலை பதினொரு மணிக்கு முப்பது மாணவர்களும் ஆஜராகிவிட வேண்டும் என்று அந்த ஆசிரியர் இவர்களுக்கு உத்தரவு போட்டார். காஞ்சி மஹாபெரியவாளும் இந்த போட்டியில் வந்து மாணவர்களைத் தேர்வு செய்யப் போவதாகத் தகவல் வந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி படைத்தவர்கள் என்று முப்பது பேரில் பன்னிரண்டு மாணவர்களை மட்டுமே தேர்வு செய்திருந்தார் அந்த ஆசிரியர். அதாவது போட்டி நடைபெறும் போது பன்னிரண்டு மாணவர்கள் மட்டும் முன் வரிசையில் அமர்ந்து நீதிபதி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். எதை அவர் ஒப்புவிக்கச் சொல்கிறாரோ அதை ஒப்புவிக்க வேண்டும்.

நீங்கள் நினைப்பது போல் சிரத்தையாக இதைக் கற்று வரும் சங்கரனும் மற்றும் அவனுடைய நண்பர்கள் சிலரும் ஆசிரியரின் தேர்வில் பாஸ் ஆகவில்லை. எனவே அந்த ஆசிரியர் 'நீங்கள் எல்லாம் பின் வரிசையில் உட்கார்ந்து போட்டியைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். வேறு எதுவும் சத்தம் கித்தம் போடக் கூடாது' என்று உத்தரவாகச் சொல்லிவிட்டார். போட்டி நடக்கின்ற நேரத்தில் திடீரென துடுக்கான ஒரு மாணவன் எழுந்து 'நான் நன்றாகப் படித்திருந்தும் என்னை இந்தப் போட்டிக்கு இந்த ஆசிரியர் தேர்வு செய்யவிலை' என்று உளறிவிடக் கூடாதில்லையா? என்றாலும் ஆசிரியருக்கு அந்த பயமும் இருந்தது.

திறமை இருந்தும் தங்களை இதில் சேர்த்துக் கொள்ளவில்லையே' என்று சங்கரனும் இன்னும் சில மாணவர்களும் வருத்தப்பட்டார்கள் என்றாலும் எவரையும் குறை சொல்லாமல் தங்கள் ஆசிரியர் - குருநாதர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடந்து கொண்டனர்.

போட்டி நடக்கும் நாளான அந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. காஞ்சி பெரியவா அன்றைய தினம் அங்கே வந்து போட்டியை மேற்பார்வையிட இருப்பதால், எண்ணற்ற பண்டிதர்களும் இதில் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள வந்திருந்தனர். கும்பகோணம் ஸ்ரீசங்கரமடமே அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது.

மஹாபெரியவா தன் பீடத்தில் அமர்ந்திருந்தார். நீதிபதி தஞ்சை லட்சுமண ஐயர் மற்றும் அவருக்குத் துணையாக வேறு இரு பண்டிதர்களும் தத்தமது இருக்கைகளில் - நீதிபதிகளாக அமர்ந்தனர்.

வேத பாடங்களை ஒப்புவிப்பதற்கும், நீதிபதிகள் கேட்கும் பாராயணங்களை அட்சர சுத்தமாகச் சொல்வதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு பேர் முன் வரிசையில் வேஷ்டி - துண்டு அணிந்து, விபூதி அணிந்து சிவப்பழமாக அமர்ந்திருந்தனர்.

பகல் பதினொரு மணிக்கு தேர்வு தொடங்கியது.

அதற்குள் இந்த மாணவர்களின் ஆசிரியர் எழுந்து "இங்கே படிக்கின்ற முப்பது பேரில் இன்றைய தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு மாணவர்கள் முன் வரிசையில் இதோ அமர்ந்திருக்கின்றன. இவர்கள் மிக நன்றாகப் படிப்பவர்கள். இவர்களிடம் கனம் நீதிபதி அவர்கள் தங்கள் தேர்வைத் துவங்கலாம்' என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

நீதிபதி லட்சுமண ஐயர் மஹாபெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்துவிட்டுத் தேர்வைத் துவக்கினார்.

சிவ சொரூபமாக அங்கே அமர்ந்திருந்த மஹாபெரியவா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருந்தார்.

முதல் வரிசையில் அமர்ந்திருந்த பன்னிரண்டு மாணவர்கள் மேல் அவர் பார்வை பதிந்தது. அதே நேரம் பின் வரிசையில் சற்றுத் தள்ளி - தேர்வுக்குத் தயாராகாத ஏழெட்டு மாணவர்கள் மீதும் அவரது பார்வை பதிந்தது.

அதில் சங்கரனும் ஒருவன்.

நீதிபதி லட்சுமண ஐயர் போட்டியைத் துவங்கினார். முதல் வரிசையில் அமர்ந்திருக்கிற பன்னிரண்டு பெரில் ஒரு மாணவனைப் பார்த்து எழுந்திருக்கச் சொன்னார். எதோ ஒரு பாராயண ஸ்லோகத்தின் பெயர் சொல்லி அதை ஒப்புவிக்கச் சொன்னார். கடகடவென்று சொன்னான். ஆனாலும் அதில் சுரத்தும் ஒரு பாவமும் இல்லை என்பதாக மஹாபெரியவா அபிப்ராயப்பட்டார்.

பன்னிரண்டு மாணவர்களில் அடுத்து இன்னொருவனிடமும் வேறு ஒரு பாராயண ஸ்லோகத்தைச் சொல்லச் சொன்னார் லட்சுமண ஐயர். அவனிடமும் இதே நிலைமை தான். போட்டியில் கலந்து கொள்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் நிலையே இப்படியா.... அப்படி என்றால் பின்னால் அமர்ந்திருக்கிற மாணவர்கள் எந்த அளவுக்குக் கற்றுத் தேர்ந்திருப்பார்கள் என்கிற ஐயம் அங்குள்ள பலருக்கும் வந்தது.

அப்போது பெரியவாளின் பார்வை பின்னால் அமர்ந்திருந்த - அதாவது இந்தப் போட்டிக்குத் தேர்வாகாத மாணவர்கள் மேல் விழுந்தது. அவர்கள் அனைவரையும் ஜாடை காட்டி இவர்களுடன் சேர்ந்து உட்காருமாறு சொன்னார் மஹாபெரியவா.

பெரியவா ஏன் இப்படிச் செய்தார் என்று நீதிபதிகள் உள்ளிட்ட அங்கிருந்த பலரும் குழம்பினர்.

இந்தப் பன்னிரண்டு மாணவர்களையும் தேர்வு செய்து, முதல் வரிசையில் அமர்த்தி வைத்த ஆசிரியரின் முகமோ சுருங்கி விட்டது. தன் மேல் ஏதேனும் குற்றச்சாட்டு விழுந்துவிடுமோ என்று பயப்பட்டார். உடனே அந்த ஆசிரியர் பதைபதைப்புடன் எழுந்து 'இல்லே பெரியவா .... பின் வரிசையில் உக்காந்திருந்த மாணவர்கள்லாம் அந்த அளவுக்குத் தயாராகலை. அவாளுக்கு இன்னும் பயிற்சி வேணும்..' என்று ஏதோ சொல்லத் துவங்க... தன் வலக்கையை மேலே உயர்த்தி, முன்னும் பின்னும் அசைத்து அவரைப் பேசாமல் இருக்குமாறு அமர்த்தினார் பெரியவா.

அவ்வளவு தான். அந்த ஆசிரியரும் மற்றும் அங்கிருந்த அனைவருமே கப்சிப் ஆனார்கள். அடுத்து என்ன ஆகப்போகிறதோ என்று கவனிக்கத் துவங்கினார்கள்.

பெரியவாளின் உத்தரவுப்படி பின்வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக முன்னால் வந்து அமர்ந்தனர். சங்கரனும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து பெரியவா பார்வை படும் இடத்தில் அமர்ந்தான்.

சங்கரனைப் பார்த்த பெரியவா அவனை எழுந்து நிற்குமாறு சைகை செய்தார்.

பரவசத்துடன் எழுந்து நின்ற சங்கரன், பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தான். கண்களில் தன் நன்றியைச் சொன்னான்.

'உம் பேர் என்ன?' - பெரியவா.

"சங்கரன்.."

"அட.. எம் பேரா இருக்கே.." என்ற சங்கராச்சார்யரான மஹா பெரியவா வியந்து அவனைப் பார்த்து, 'புருஷ சூக்தம் சொல்லத் தெரியுமா? என்று கேட்டார்.

'தெரியும்' என்றான் சங்கரன், முகத்தில் சந்தோஷத்துடன்.

'அட்சரம் பிசமாகல் சொலுவியா?"

"சொல்லுவேன் பெரியவா"

சங்கரனின் ஆசிரியர் உட்பட அங்கு கூடியிருந்த பண்டிதர்கள் அனைவரும் இந்த சம்பாஷணையை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

பிறகு மஹாபெரியவா சங்கரனைப் பார்த்து ' சரி...இதைச் சொல்லு... ஸ்ரீமந் நாராயணனைப் பத்தி 'சஹஸ்ர ஸீரிஷம் தேவம்'னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தைக் கடைசி வரை சொல்லு பார்க்கலாம்' என்றார்.

சாதாரணமாக வேதம் கற்கும் மாணவர்களில் ஆரம்பித்து நன்றாக புருஷ சூக்தம் கற்றுக் கொண்ட பலருமே கடகடவென்று சொல்லத் தயங்கும் ஸ்லோகம் இது. ஆனால் பயபக்தியாகக் கைகளை கட்டிக் கொண்டு மடை திறந்த வெள்ளம் போல் ஒரே எட்டில் ஸ்வரம் பிசகாமல் சொல்லி முடித்தான் சங்கரன்.

'பலே..' என்று உற்சாகமான மஹாபெரியவா. 'உனக்கு சமஸ்க்ருதம் தெரியுமா? கிரந்தம் தெரியுமா? என்று ஆர்வத்தோடு கேட்டார்.

'தெரியாது பெரியவா. இன்னும் கத்துக்கலை. என்னோட வாத்தியார் எனக்குச் சொல்லிக் கொடுத்த ஸ்லோகங்களை அப்படியே மனப்பாடம் பண்ணி ஒப்புவிக்கிறேன்' என்ற சங்கரன், தன் ஆசிரியரையும் அந்த வேளையில் நன்றியுடன் பார்த்தான்.

'எல்லாத்தையும் தெரிஞ்சுக்கோ... கேள்வி ஞானம் இருந்தாலே போதும். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம். எதிர்காலத்துல நீ என்ன உத்தியோகம் பார்க்கப் போறியோ....ஆனா எந்த உத்தியோகம் பண்ணலும் இதை எல்லாம் மறக்காம இருக்கணும். வேதம், சாஸ்திரம் தான் நம் ஆணிவேர்' என்றார் பெரியவா.

'அப்படியே ஆகட்டும் பெரியவா..' என்ற சங்கரன், மீண்டும் ஒரு முறை அவருக்கு நமஸ்காரம் செய்தான்.

உடனே, சங்கரரின் ஆசிரியரையும், மற்றும் சில வேத பண்டிதர்களையும் பார்த்து 'இன்னும் இவனைப் போல நல்லா சொல்ற்வா யார்னு டெஸ்ட் பண்ணுங்கோ' என்றார் பெரியவா. இதை அடுத்து அங்கே நீதிபதியாக அமர்ந்திருந்த தஞ்சை லட்சுமணஐயரே வேறு ஒரு கனபாடிகளை அருகே அழைத்து, இந்தப் போட்டிக்குத் தேர்வாகாத மற்ற மாணவர்களையும் தனித்தனியே சோதித்துப் பார்க்கச் சொன்னார். அப்படி சோதிக்கப்பட்டதில், வேறு இருவரும் தேர்வானார்கள்.

இந்த மாணவர்களைப் பயிற்றுவித்து, போட்டிக்கு இவர்களைத் தேர்வு செய்யாத அந்த ஆசிரியரின் முகத்தில் ஈயாடவில்லை.

இந்தப் போட்டியின் இறுதியாக சிறந்த முறையில் ஒப்புவித்ததற்காக சங்கரன் மஹாபெரியவாளால் பிரத்தியோகமாகக் கௌரவிக்கப்பட்டான். எப்படித் தெரியுமா?

தங்கக்காசு ஒன்றைப் பரிசாக மஹாபெரியவாளே சங்கரனுக்குக் கொடுத்தார். அந்தக் காசின் மேல் ஒரு சிறு வளையம் இருந்தது. பூணூல் அல்லது ஒரு கறுப்புக் கயிற்றில் கோர்த்து மாட்டிக் கொள்ள வசதியாக அந்த வளையம் அமைந்திருந்தது.

தங்கக் காசைப் பெரியவாளிடம் இருந்து பரிசாகப் பெற்றதில் சங்கரனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். அந்த தங்கக் காசை இப்படியும் அப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டான். நெகிழ்வின் காரணமாக அவனுடைய கண்களே கலங்கி விட்டன.

'இதை எதுல கோத்து மாட்டிப்பே?' சங்கரனிடம் பெரியவா கேட்டார்.

ஒரு ஊக்குல கோத்து பூணூல்ல மாட்டிக்கிறேன்" சங்கரன் சட்டென்று சொன்னான்.

"ஊக்குல கோக்கக் கூடாது. பூணூல்ல மாட்டிக்கோ. எப்படின்னு இங்கே இருக்கிற கனபாடிகள் கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கோ" என்று அறிவுறுத்தினார் பெரியவா.

அந்தத் தங்கக் காசைக் கையில் வைத்துக் கொண்டு மஹாபெரியவாளுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான் சங்கரன். அவனையும் அறியாமல் அவன் கண்களில் நீர் வழிந்தது.

பிறகு, தேர்வான மற்ற மாணவர்களுக்கும் மடத்தின் சார்பாக வெள்ளியால் ஆன டாலரை பெரியவாளே தந்தார். மறக்காமல் இந்த மாணவர்களின் ஆசிரியரையும் அழைத்து அவரையும் கௌரவித்தார் பெரியவா.

அதுதான் பெரியவா!

'இவா எல்லாருக்கும் மடத்துலயே போஜனம் ஆகட்டும்; என்று அனைத்து மாணவர்களையும் சாப்பிடும்படி அனுப்பினார் பெரியவா.

காலம் உருண்டோடியது. மஹா பெரியவாளின் ஆசியோடு, சங்கரன் சென்னையில் பிரபலமான ஆடிட்டர் ஆகிவிட்டார்.

இந்த கும்பகோணம் ஸ்ரீமடம் சம்பவம் நடந்து சுமார் இருபது ஆண்டுகளைக் கடந்த பின் ஒரு நிகழ்ச்சிக்காகத் தன் குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் சென்றார் சங்கரன். மஹா பெரியவா மடத்தில் இருப்பதை அறிந்து, அவரது தரிசனத்துக்காக அங்கே சென்றார்.

தன்னைப் பற்றி ஓரிரு வார்த்தைகளை சங்கரனே முன்வந்து மஹாபெரியவாளிடம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். பழைய சம்பவங்கள் அனைத்தையும் சட்டென்று ஞாபகப்படுத்திக் கொண்ட பெரியவா. 'அந்தத் தங்கக்காசை இன்னும் வெச்சிருக்கியோ? என்று கேட்டாராம் ஆர்வமாக.

உடனே சங்கரன். 'அது எப்போதும் என் பூணூல்லயே தான் பெரியவா இருக்கும். அன்னிக்கு நீங்க தான் அப்படி உத்தரவு போட்டேள்!' என்று நெகிழ்வுடன் சொல்ல... சந்தோஷப்பட்ட பெரியவா பிரசாதம் தந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆசிர்வதித்து அனுப்பினார்.

பகிர்தல்:

பட்டு சாஸ்திரிகள் 
சென்னை.
29-8-2019.

No comments:

Post a Comment