Wednesday, October 16, 2019

The painful separation of uddhava from Krishna

கண்ணனை விட்டுப் பிரிய மனதில்லை.?

பகவானே கூறுவதுதான். ஒரு பசு மாடு, தன் கன்றுக் குட்டியிடம் இருக்கும் விருப்பத்தாலே, அது போகும் இடத்திற்கெல்லாம் பின் தொடர்ந்து செல்லும். அதைப் போல், கண்ணன்தான் பசு மாடு. யாரெல்லாம் பாகவத புராணத்தைச் சொல்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கன்றுக் குட்டி. பாகவதத்தைப் படிப்பவனைக் கன்றாகக் கொண்டு, அவன் மேல் இருக்கிற ஆசையாலே, பகவான் எனும் பசு, பின் தொடர்ந்து வருவானாம்.

இப்படி, நம்மைப் பின் தொடர்ந்து கண்ணன் வந்தால், அது எவ்வளவு பெரிய பேறு! மஹா பாக்கியம் அல்லவா? அதை அடைவதற்கு ஒரே வழி பாகவத புராணத்தை வாசிப்பதே!

சரி! மேலும் மேலும் பாகவத புராணம் சிறப்புடையது என்று சொல்கிறோமே! எதனால் அதற்கு இவ்வளவு சிறப்பு ஏற்பட்டது? அது ஒரு சுவையான செய்தி.

கண்ணன் பூவுலகத்தில் பிறந்து, நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருந்து, மறுபடியும் வைகுண்டத்துக்குச் செல்லப் போகிறார். கண்ணனுடைய மிகுந்த பிரியத்திற்குரிய சிஷ்யர், உத்தவர் என்று பெயர் பெற்றவர்; சான்றோர்; மெத்தப் படித்தவர்; பரம பக்தர். உத்தவருக்குக் கண்ணனை விட்டுப் பிரிய மனதில்லை. கண்ணனுடைய திருவடிகளைக் கட்டிக் கொண்டு,

த்வத் வியோகேன தே பக்தா: கதம்
ஸ்தாஸ்யந்தி பூதலே?

– என்று கேட்கிறார். "உன்னை விட்டுப் பிரிந்தால், உன் சீடர்கள், உன் நண்பர்கள், எப்படி உயிர் வாழ்வார்கள்? கண்ணா! திடீரென்று 'புறப்பட்டுப் போகிறேன்' என்று சொல்லாதே! எங்களுக்கு ஒரு வழி காட்டி விட்டுப் போ!" என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது, கண்ணன் தெரிவித்தார். "நான் போய்த்தான் தீர வேண்டும். வந்த வேலை முடிந்து விட்டது. ஆனால், உனக்கு ஒரு வழி கூறுகிறேன். நான் பாகவத புராணச் சொற்களில் இனி தங்கி விடுகிறேன். துவாபர யுகம் வரை நான் நானாக இங்கு மக்களிடையே நடமாடினேன். துவாபர யுகத்தின் இறுதியில், வைகுண்டத்தைச் சென்று அடைகிறேன். கலியுகம் முழுவதும், பாகவத புராணச் சொற்களிலேயே நான் வசிக்கப் போகிறேன். யாரெல்லாம் என்னை தரிசிக்க விருப்பம் கொள்கிறார்களோ, என்னை அடைய ஆசைப்படுகிறார்களோ, அவர்கள் எல்லாம் இங்கேயே கலியுகத்தில் பாகவத புராணத்தைப் படித்துக் கொண்டிருக்கட்டும்" என்றார்.

No comments:

Post a Comment