Tuesday, October 29, 2019

Srimad Bhagavatam skanda10 adhyaya 8 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம்- தசம ஸ்கந்தம்- அத்தியாயம் 8 (தொடர்ச்சி)

கிருஷ்ணனின் பால லீலைகளை பாகவதம் பின்வருமாறு வர்ணிக்கிறது
வத்ஸான் முஞ்சன் க்வசித் அஸமயே க்ரோஶஸஞ்ஜாதகஹாஸ:
ஸ்தேயம் ஸ்வாத்வத்யத ததிபய : கல்பித: ஸ்தேய யோகை:
மர்கான் போக்ஷயன் விபஜதி ஸசேத் ந அத்தி பாண்டம் பினக்தி
த்ரவ்யாலாபே ஸ க்ருஹகுபித: யாதி உபக்ரோஶ்ய தோகான்

கோபிகள் யசோதையிடம் வந்து முறையிட்டனர்.
"வேளையல்லாத வேளையில் சில சமயம் கன்றுகளை அவிழ்த்து விடுகிறான். கோபித்தால் சிரிக்கிறான். திருட்டுத்தனமாக தயிரையும் வெண்ணையையும் கவர்ந்து ருசித்துச் சாப்பிடுகிறான். சாப்பிட்டுக் கொண்டே குரங்குகளுக்குப் பங்களிக்கிறான். ஒரு குரங்கு சாப்பிடாவிட்டால் கோபம் கொண்டு சட்டியை உடைக்கிறான். சாப்பிட ஒன்றும் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின்மேல் கோபம் கொண்டு குழந்தைகளை அழவைத்து விட்டுப் போய் விடுகிறான். "

ஹஸ்தாக்ராஹ்யே ரசயதி விதிம் பீடகோலூகலாத்யை:
ச்சித்ரம் ஹ்ய்ந்தர் நிஹித வயுன: சிக்ய பாண்டேஷு தத்வித்
த்யாந்தாகாரே த்ருத மணிகணம் ஸ்வாங்கமர்த்த ப்ரதீபம்
காலே கோப்யோ யர்ஹி க்ருதக்ருத்யேஷு ஸுவ்யக்ரசித்தா:

எந்த ஸமயத்தில் கோபிகள் வீட்டு வேலையில் ஆழ்ந்திருக்கிறார்களோ அப்போது இவன் கைக்கெட்டாத்த இடத்தில் உள்ளதை எடுக்கப் பலகை , உரல் முதலியவைகளைக் கொண்டு உறியில் உள்ள சட்டிகளில் ஓட்டை போடுகிறான். இருட்டறையில் கூட ரத்தின ஆபரணங்கள் கொண்ட தன் மேனியையே விளக்காக்கிக் கொள்கிறான் .

இதையே தேசிகர் எவ்வாறு சுவைபடக் கூறுகிறார் என்று பார்ப்போம் .

த்ரஸ்யன் முகுந்தோ நவனீத சௌர்யாத்
நிர்புக்னகாத்ர: நிப்ருதம் சயான:
நிஜானி நிஶ்ஶப்ததஶாம் யயாசே
பத்தாஞ்சலிம் பால விபூஷணானி (யாதவாப்யுதயம்)

கிருஷ்ணன் வெண்ணை திருடுவதற்காக, கோபிகளிடம் பயத்தால் தன் மேனியை குறுக்கிக் கொண்டு இருந்தபோது அவன் மேனி பயத்தால் நடுக்கமுற்றதாம் . அப்போது அவனுடைய ஆபரணங்களை சப்திக்க வேண்டாம் என்று கைகூப்பிக் கேட்டுக் கொண்டானாம் .

இப்போது லீலாசுகரின் கற்பனையைக் காண்போம்.
பீடே பீட நிஷண்ண பாலககலே திஷ்டன் கோபாலக:
யந்த்ராந்தஸ்தித துக்தபாண்டம் அவபித்ய ஆச்சாத்ய கண்டாரவம்
சக்ரோபாந்த க்ருதாஞ்சலி: க்ருதசிர: கம்பம் பிபன் ய: பய:
பாயாத் ஆகத கோபிகா நயனயோ: கண்டூஷ பூத்காரக்ருத்
(க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

ஒரு பலகை அதன்மேல் இன்னொரு பலகை அதன்மேல் ஒரு சிறுவன் உட்கார அவன் தோள்மேல் ஏறி நின்ற கோபாலன் பால் சட்டியைச் சரித்து அதனுள் இருந்த பாலை பருகும்போது அதில் கட்டியிருந்த மணியை ஒலிக்கவிடாமல் பிடித்துக் கொண்டு கையைக் குவித்துப் பருக ஆரம்பித்த சமயம் கோபி வந்து விட்டாள். அப்போது வாயில் உள்ள பாலை அவள் முகத்திலே துப்பிவிட்டானாம். கண்ணில் விழுந்த பாலை அவள் துடைக்குமுன் ஓடிவிட்டான்.

கோபி அப்போது எப்படி வந்தாள் என்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. கண்ணன் அங்கு கட்டியிருந்த மணியை ஒலிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டானாம் . அதுவும் சம்மதித்த்தாம். ஆனால் அவன் பருகும் சமயம் அது ஒலிக்க ஆரம்பித்ததாம் . இது தர்மமா என்று அவன் கேட்க, மணியானது தெய்வமாகிய உனக்கு நைவேத்யம் நடக்கையில் மணி ஒலிப்பதுதானே தர்மம்?என்றதாம்.

லீலாசுகர் கண்ணன் லீலைகளை பல வித்மாக அனுபவிக்கிறார். அதற்குத் தனிப்பதிவு தேவை
.
இன்னொரு காட்சி கோபாலவிம்சதியில் தேசிகர் வர்ணிக்கிறார்.

ஹர்தும் கும்பே விநிஹிதகர; ஸ்வாது ஹையங்கவீனம்
த்ருஷ்ட்வா தாமக்ரஹண சடுலாம் மாதரம் ஜாதரோஷாம்
பாயாத் ஈஷத் பிரசலிதபத:நாபகச்சன் ந திஷ்டன்
மித்யாகோப: ஸபதி நயனே மீலயன் விச்வகோப்தா

கண்ணன் புதிதாகக் கடைந்த வெண்ணை வைத்திருக்கும் குடத்தில் கை விட்டு வெண்ணை எடுக்கப் பார்க்கிறான். அப்போது அவன் தாய் யசோதை அங்கு வந்துவிடுகிறாள். உடனே நகர்ந்தாலும் அந்த இடத்தை விட்டுப் போகாமல் போவது மாதிரி போக்குக்காட்டி அங்கேயே நிற்கிறான். தாயின் கோபத்தைக் கண்டு அஞ்சியவன் போல் கண்ணை மூடிக்கொள்கிறான்.
கண்ணனை தேசிகர் மித்யாகோபன் அல்லது பொய்யாக இடையனாக வந்தவன் என்கிறார். ஏனென்றால் உலகையே காப்பவன் இங்கு அன்னைக்கு பயந்து அழுகிறானாம்

இந்தக் காட்சி பாகவதத்தில் பின்வருமாறு வர்ணிக்கப்படுகிறது
க்ருதாகஸம் தம் ப்ரருதந்தம் அக்ஷிணீ
கஷந்தம் அஞ்சன் மஷிணீ ஸ்வபாணினா
உத்வீக்ஷமாணம் பயவிஹ்வலேக்ஷணம்
ஹஸ்தே க்ருஹீத்வா பிஷயந்த்யவாகுரத் (ஸ்ரீமத் பா. 1௦.9.11)
தவறு செய்துவிட்டு மையிட்ட கண்களை தன் கையால் கசக்கிக்கொண்டு அழுபவனும் பயத்தினால் சலிக்கின்ற கண்களை உடையவனும் மேலே அவளைப்பார்க்கின்றவனும் ஆன அவனைக் கையில் பிடித்துக்கொண்டு பயமுறுத்தி அதட்டினாள்.
என்ன ஒரு அழகான சித்திரம்!

  

No comments:

Post a Comment