Thursday, September 26, 2019

Vishnu Sahasranama 695to 712 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணுஸஹஸ்ரநாமம்

695.மனோஜவ: -மனத்தின் வேகத்திற்கொப்பான வேகமுள்ளவர். ஏனெனில் அவர் சத்யகாமன் சத்ய சங்கல்பன் என்பதால். நினைத்த மாத்திரத்தில் எல்லாம் நடப்பதால். 
பிரம்மத்தைப் பற்றி உபநிஷத் கூறுவது: 'அநேஜதேகம் மனஸோ ஜவீய: ,' அது அசைவற்றது. ஒன்றாக இருப்பது. மனதைவிட வேகமுள்ளது.

தத் தாவதோ அன்யான் அத்யேதி திஷ்டத் – கேனோபநிஷத். அது நிலையாக இருந்துகொண்டே தாவிச்செல்லும் எல்லாவற்றையும் தாண்டுகிறது.

696.தீர்த்தகர:- எல்லா பாவங்களையும் போக்கும் தீர்த்தங்களை சிருஷ்டித்தவர். தீர்த்த என்ற சொல் வேதங்களையும் சாஸ்திரங்களையும் குறிக்கும். உலகங்களை உய்விக்கும் இவற்றை உண்டாக்கி உபதேசித்தவர்.

கடல் போல் இறங்க முடியாத ஆழமான தம்மிடத்தில் பக்தர்களை இறங்கும்படி படிகளை உண்டு பண்ணியவர் ( சங்கரர்)

மது கைடபர்கள் வேதங்களை அபகரித்தபிறகு அவர்களைக் கொன்று அதை மீட்டு பிரம்மாவிற்கு ஹயக்ரீவராக உபதேசித்தவர்.

697. வஸுரேதா: -இதிலிருந்து 786 வரை க்ருஷ்ணாவதாரத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

பொன் மயமான வீரியத்தை உடையவர், கிருஷ்ணாவதாரத்தில் பகவான் அவதரிக்கையில் பொன்மயமான ஒலியுடன் தோன்றினாராம். பிறந்த இடம் முழுவதையும் தன் ஒளியால் வ்யாபித்தார் என பாகவதம் கூறுகிறது.

698.வஸுப்ரத: -வசு என்றால் செல்வம் சிறந்த செல்வமான தம்மையே அளித்தவர்
699. வஸுப்ரத: -அதே நாமம் இரண்டு முறை வருவதன் பொருள் இங்கு பக்தர்களுக்கு மோக்ஷமான செல்வத்தை அளிப்பவர் என்பது.

700. வாஸுதேவ: - வசுதேவரின் மகன். 
வஸதி வாஸயதி இதி வஸுதேவ: எல்லாவற்றின் உள்ளும் வசிப்பதும் அல்லாமல் அவற்றைத் தன்னுள்ளும் வசிக்கச்செய்பவர்

701. வஸு: -வஸதி இதி வஸு: . அந்தர்யாமியாக எங்கும் உள்ளவர். வஸு என்றால் மறைப்பது என்றும் பொருள் தன் தெய்வாம்சத்தை மறைத்துக்கொண்டு இடைச்சிறுவனாக இருந்தவர். வேதாந்த தேசிகர் கோபால விம்சதியில் க்ருஷ்ணனை மித்யாகோப: பொய்யான இடையன் என்கிறார்.

702. வஸுமனா:-வசுதேவரிடம் மனம் வைத்தவர். பகவானுடைய வஸு அதாவது செல்வம் அவருடைய பக்தர்கள்தான். அவர்களை இடைவிடாமல் நினைப்பவர் என்றும் கொள்ளலாம்.

703. ஹவி:- ஹவிஸ்ஸாக இருப்பவர். 'ப்ரஹ்மார்ப்பணம் பிரம்மா ஹவி:' – கீதை . அவனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் ஹவிஸ் அவனே. 
கிருஷ்ணாவவதாரத்தில் நந்தகோபருக்கு வசுதேவரால் அர்ப்பணிக்கப்பட்டவன்.

704.ஸத்கதி: - ஸதாம் கதி: . நல்லோரால் அடையப்படுபவர். அவரே அவரை அடையும் வழியானவர்.'ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,' – கீதை.

705. ஸத்க்ருதி: -சிறந்த செய்கைகளை உடையவர். கிருஷ்ணன் பிறந்தது முதல் கடைசி வரை அவன் செய்கைகள் சிறந்தவையாகவே இருந்தன. அவனுடைய செய்கைகளின் உண்மைப் பொருளை அறிந்தோர் பிறவித்துன்பத்தில் இருந்து விடுபடுகிறார்கள்.

யாதவாப்யுதயத்திற்கு விளக்கம் எழுதிய அப்பைய தீட்சிதர் ஒரு சிறந்த அத்வைதியானாலும் கிருஷ்ண பக்தி உடையவர். அவர் கூறுகிறார். கிருஷ்ணன் பூதனையிடம் பால் குடித்ததை நினைத்தால் மறுபடி தாயிடம் பால் குடிக்கவே நேராது. அவனுடைய ராசக்ரீடையை நினைந்தால் காமம் போகும். வெண்ணை திருடினதை நினைந்தால் மனதில் உள்ள கபட எண்ணங்கள் போய்விடும் என்கிறார்.

706. ஸத்தா-ஸத் சித் ஆனந்த ஸ்வரூபமாக இருப்பவர், பிரம்மா பசுக்களையும் இடைச்சிறுவர்களையும் மறையச்செய்தபோது கண்ணனே அவர்கள் வடிவெடுத்தான் . பிரம்மா அதைக்கண்டபோது எல்லாம் கண்ணனாகவே தோன்றிற்று. அதாவது இருப்பவை எல்லாம் அவனன்றி வேறில்லை.

707.ஸத்பூதி:- அவனுடைய அடியவருக்கு உண்மையான செல்வமாக இருப்பவன். புத்திரன் , மித்திரன், பந்து, தூதன், சாரதி எல்லாமாக இருப்பவன். 
708. ஸத்பராயண:- சாதுக்களுக்கு அடைக்கலமாக உள்ளவர். அல்லது எல்லோருக்கும் மேலான கதியாக உள்ளவன்
'க்ருஷ்ணாச்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ண நாதாஸ்ச பாண்டவா: '
கிருஷ்ணனையே ஆச்ரயமாகவு, பலமாகவும், நாதனாகவும் கொண்டவர்கள் பாண்டவர்கள். – மஹாபாரதம்

709. சூரசேன: - சூரர்களாகிய யாதவப்படையைக் கொண்டவன்.
710. யதுச்ரேஷ்ட: -யதுகுலத்தில் சிறந்தவன்.
711. ஸந்நிவாஸ:-சாதுக்களின் உறைவிடமானவர். சநகாதியர், ஆதிசேஷன் கருடன் முதலிய நித்ய சூரிகள் இவர்களுடன் கூடியவர். 
712. ஸுயாமுன:- யமுனை நதிக்கரையில் லீலைகள் செய்தவர். அவைகள் நினைப்போருக்கு பாவங்களைப் போக்கி நற்கதி தருவன

  

No comments:

Post a Comment