Monday, September 9, 2019

Kandar anubhooti & tirumandiram - Knadar anubhooti 3rd song

Courtesy: Sri.Manian

கடவுள் நாட்டம் என்ற ஒன்று ஏற்படும் போது, எது கடவுள்? என்ற கேள்வி எழுவது எல்லோர்க்கும் உண்டானது தான். இறை அடியார்கள் இதைத் தேடிக் கொண்டே தான் இருப்பார்கள். இது அல்ல, அது அல்ல, என்று வேதங்களும், மற்றைய தோத்திரப் பாடல்களும்,சொல்லிக் கொண்டே இருந்தாலும், நீ எதுவாக இருக்கிறாய், என்று இறைவனையே கேட்கின்ற பாடல்களும் உள்ளன. இப்படிக் கேட்கின்ற பாடல்களில், முருகன் அடியார்கள் பலரும் அறிந்த பாடல்கள், அருணகிரிநாதர்  அருளிய கந்தர் அனுபூதியில் இருக்கின்றன.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், திருமந்திரம் பத்தாம் திருமுறை. அதுபோல், முருகப் பெருமானின் பன்னிரு திருமுறைகளில், ப்த்தாம் திருமுறையாக இருப்பது கந்தர் அனுபூதி ஆகும். இந்த நூல், அருணகிரி நாதர் அருளிச் செய்த இறுதி நூல் என்று சொல்லுவார்கள்.  கிளி உருவில் இருந்து, முருகனுடைய தோளில் அமர்ந்து, இந்த நூலைப் பாடினதாக வரலாறு. திருமந்திரத்திற்கும், கந்தர் அனுபூதிக்கும் உள்ள ஒற்றுமை என்ன வென்றால், இரண்டுமே, இயற்றியவர் வேறொரு உடலில் இருந்து பாடியவை. நந்தி அருள் பெற்ற சித்த புருஷர், மூலனுடைய உடலில் புகுந்து வாழ்ந்த காலத்தில் திருமந்திரம் இயற்றினார்.  அருணகிரி  நாதரோ, கிளி உருவில் இருந்து கந்தரனுபூதி இயற்றினார். கந்தர் அனுபூதி முருகனடியார்கள் தினந்தோறும் பாராயணம் செய்யக் கூடிய நூலாக இன்றும் இருக்கிறது.

மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணத்தையும், அருணகிரி  நாதர் அருளிச் செய்தா கந்தர் அனுபூதியையும் பாராயணம் செய்யச் செய்ய, அவற்றின் ஆற்றலும், பயனும் வந்து அமையும் . .பாராயணம் செய்யச் செய்ய  அவ்ற்றை உருப் போடுவதால்,பாடல்கள் மனதில் ஏறிவிடுகின்றன.. நாட்கள் செல்லச் செல்ல, சில நேரங்களில், சில கருத்துக்கள் உதயமாகின்றன. பிறகு தான் அடியவர்களுக்கு, பாடலின் கருத்துக்களின் மீது கவனம் செல்லுகிறது. இது காலம் காலமாக நடந்து வருகிற முறை தான். பொருள் தெரிந்து ஓதுவது தான் சிறப்புடையது என்றாலும், பாடல்களை நெஞ்சத்தில் ஏற்றி,  பிறகு பொருள் தெரிந்து கொள்வதென்பதும் நல்லது தான். நல்ல குருமார்கள் அமையும் போது, பாடல்களின் சிறப்பை, அது உணர்த்தும் உண்மை அறிவை அடியார்கள் பெறுகின்றனர்.

சிறப்பான கந்தர் அனுபூதியில், எல்லாப்  பாடல்களுமே, சிறந்தவை தான். அனுபவ நிலையில் இருந்து பாடின பாடல்கள் ஆகையினால், அவை மேலும் சிறப்புடையவை.

ஐம்பத்தி ஓரு பாடல்களுக்கும், சக்க்ரம் அமைத்து வழிபடுவார்கள். ஒலி நிலையில், ஒவ்வொரு பாடலும், இன்ன இன்ன பயனைத் தரும் என்றும் சொல்லுவார்கள். நாம் பார்க்கின்ற அனைத்துமே ஒளி உலகத்தின் விளைவுதான். இவற்றிற்கு மூலமாக இருப்பது ஒலி உலகம். எல்லா ஒலிக்கும் மூல ஒலியாக ஓம் இருக்கிறது. ஓங்காரத்தின் விரிவாக ஐம்பத்தி ஓரு அக்‌ஷரங்கள் இருக்கின்றன. இவை பீஜாட்சரங்கள் எனப்படும். ஐம்பத்து ஓரு பீஜாட்சரங்களுக்கு,(வித்துக்கு) விளைவாக கந்தர் அனுபூதியில், ஐம்பத்தி ஓரு பாடல்கள் அமைந்திருப்பது கவனிக்கத் தக்கது.

இத்தனை சிறப்புடைய கந்தர் அனுபூதியில், மூன்றாவது பாடல், அடியவர்கள் கேட்கும் கேள்வியை கேட்கிறது. அருணகிரிநாதர் ஷண்முகனிடம், அறுமுகனிடம், நீ எதுவாக இருக்கிறாய் என்று கேட்கிறார். ஆறுமுகனிடம், ஒன்றையும் விடாமல், எல்லாவற்றையும் சொல்லி, இவற்றுள் எது மெய்ப்பொருள் என்று கேட்கிறார்.  அவர் சொல்லுகிற பொருட்களில், ஒன்றும் மெய்ப் பொருள் இல்லை என்றாலும், அவை எல்லவற்றிலும், மெய்ப் பொருள் கலந்தே இலங்குகின்றன

ஷண்முகனே
பொருளாவது (எது?)
வானோ? புனல் பார் கனல் மாருதுமோ? (1)
ஞானோதயமோ?(2)
நவில் நான்மறையோ?(3)
யானோ?(4)
மனமோ(5)
எனை ஆண்ட இடம் தானோ? (6)

இப்போது பாடலைப் பார்க்கலாம்.

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோதயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது ஷண்முகனே!

இப்பாடலில் முதலடியில் புறத்தில் காணப்படுகின்ற ஐம்பூதங்களையும் குறிப்பிடுகின்றார்.  ஏனென்றால், ஐம்பூதங்களில், எல்லாப் பருப் பொருள்களும் அடங்கி விடுகின்றன.  அடுத்த வரிகளில், அகத்திலுள்ள பொருள்களைக் கூறுகின்றார்.  அவை பலவாக இருப்பினும், அவற்றைக் காண்பதற்கு தேவைப்படுவது ,(அவை பருப் பொருள்களாக இல்லாத காரணத்தால்), அகமுகம் ஒன்றே ஆகும்.. (அதோ முகம் என்றும் இதைச் சொல்லுவார்கள்) இந்த அதோ முகத்தோடு புறத்தில் நான்கு திசைகளிலும், மேல் திசையிலும் உள்ளவற்றை காண்பதற்கு ஐந்து முகங்களுக், ஆக ஆறு முகங்களின் பார்வையில் எல்லாமே அடங்கி விடுகின்றன. ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே என்ற பாடலில் ஆறுமுகமான பொருள்  நீ அருள வேண்டும்  என்று கேட்கிறார் . ஆறுமுகங்களின் சிறப்பை இதனால அறிந்து கொள்ளலாம்

கேட்கின்ற கேள்வி ஆறு. பார்க்கின்ற  முகங்கள் ஆறு. முதலில் ஐம்பூதங்கள் தான் மெய்ப் பொருளோ என்றார். அதன் மெய்த் திறத்தை, அழகை உள்ளே தானே எண்ணுகிறோம். அவ்வாறு எண்ணும் போது ஒரு தெளிவு பிறக்கிறது. அதைத் தான் ஞானோதயமோ என்றார்.
ஞானோத்யம் பெற்றவர்களிடமிருந்து தான் வேத வாக்குகள் வரும். என்வே முதலில் ஞானோதயத்தைச் சொன்னவர், பிறகு மறைகளைக் குறிப்பிட்டார்.  யானோ என்பது ஆன்மாவைக் குறிக்கிறது.. ஆன்மா என்பதில் இறை தத்துவம் கலந்திருந்தாலும் அது மெய்ப் பொருள் ஆகாது என்பர்.
மனம் என்பதை சுட்டிக் காட்ட முடியாது. அது அந்தக் கரணங்களுக்குள் ஒன்று

மனம் நினைக்கும். புத்தி என்பது, நினைத்த பொருளை ஆராய்ந்து நிச்ச்சயிக்கும். அகங்காரம், நிச்சயிக்கப் பட்டதை செய்து முடிக்க முற்படும். இந்த மூன்றின் தொகுப்பைத் தான் சித்தம் என்று சொல்லுவர். இவை எல்லாவற்றிற்கும் ஆதாராமாயிருப்பது மனமே ஆகும். ஆகவே அதை அடுத்துக் குறிப்பிட்டர்.

எனை ஆண்ட இடம் என்பது "ஆண்ட நிலையைக் குறிக்கும். அது வாழ்க்கை நிறைவு நிலை.  அது பக்குவத்தால் ஏற்படுவது. ஆள்வது என்பது ஓரிடத்தில் நிகழ்ந்தாலும், நிறைவு நிலை வேறு ஒரு இடத்தில் கிடைக்கும்.. பக்குவ நிலை ஏற்பட்டால் தான் நிறைவு நிலை சித்திக்கும். பக்குவப்படுதல் என்பது ச்ட்டென்று நடக்கின்ற காரியம் இல்லை. பக்குவம் பெறுகின்ற நிலை பல பிறவிகளில் அமைவது. மாணிக்க வாசகருக்கு பக்குவ நிலை திருப்பெருந்துறையில் கிடைத்தது. திருக்கழுக் குன்றத்திற்கு வந்த போது நிறைவு பெற்றது.  அருணகிரி  நாதருக்கு, பக்குவ நிலை திருவண்ணாமலையில் கிடைத்தது,  நிறைவு நிலை வேறொரு இடத்தில் கிடைத்திருக்கும்.

கடவுள் , அருளுவதற்கு தயாராக இருந்தாலும், ஆன்ம பக்குவம் வரவில்லையானால்,  நிறைவு நிலை தடைப்படும்.  இது மிக உயர்ந்த நிலை என்றாலும், இதுவும் மெய்ப் பொருள் ஆவதில்லை.

மெய்ப்பொருளை மறைகள் இன்னும் தேடிக் கொண்டே இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள். அருணகிரி  நாதரும், கேள்விக்கு உண்டான பதிலை வெளிப்படையாக்க் கூறாமல்,, மெய்ப் பொருள் என்பது நீதான் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார், என்றே கொள்ள வேண்டும்.

ஒரு நான்கு வரிகளில்,எளிய சொற்களால்  பாடலைச் சொல்லிவிட்டு, இத்தனை வித்மாக எண்ண வைத்த அருணகிரிப் பெருந்தகையை வாழ்த்தி வணங்குவோம்

 

No comments:

Post a Comment