2
ஸ்ரீ ராம ஜயம்
ஆவணி மூலம்
இன்று செப் 8-ம் தேதி , ஆவணி 22-ஆம் நாள் ஆவணி மூலம் .இன்று காலையில் , ஸ்ரீ மாணிக்க வாசக ஸ்வாமிகள், (அநிருத்த பிரம்ம ராயர் ) என்ற மந்திரி மூலமாக பதினாயிரம் அரபுக்குதிரைகள் பாண்டிய மன்னனுக்காக மதுரை வந்து சேர்ந்தன. இந்தக்குதிரைகளை வாங்க பாண்டியமன்னனால் ஸ்ரீ ராயர் காவிரிப்பூம்பட்டினத்துக்கு அனுப்பப்பட்டார். போகும் வழியில், ராயர் திருப்பெருந்துறைக்கு
( தற்காலத்தில் அது ஆவுடையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.) வர நேர்ந்தது. அங்கே ஒரு குருந்த மரத்தடியில், ஒரு சிவனடியார் தன் ஆயிரம் சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக்கொண்டிருப்ப தையும் கண்டார். ராயரும் ஒரு சிவபக்தரானதால், அவரருகே செல்ல, சிவனடியார் அவருக்கு சக்ஷு தீக்ஷையும் ஹஸ்த தீக்ஷையுமளித்து, அவரை ஆட்கொண்டார். (சக்ஷு தீக்ஷை என்பது தன் கண் பார்வையாலேயே சிஷ்யனுக்கு அருளுதல். ஹஸ்த தீக்ஷை என்பது, தன்னுடைய வலது கரத்தை சிஷ்யனின் உச்சந்தலையில் வைத்து, அருளுதல்) . யோகியாக வந்தது சிவபெருமானேயாம். அவர் பிரும்ம ராயருக்கு சிவபஞ்சாக்ஷரம் ஓதுவித்து, தான் இருந்த அந்த இடத்தில் பெருமானுக்காக ஒரு கோயில் கட்டச்சொன்னார். ராயர் கோயிலையும் கட்டினார் .அதற்கு சில காலம் பிடித்தது. தான் குதிரைகள் வாங்கக் கொண்டுவந்த பணம் முழுதும் செலவழித்தும் விட்டது. காலம் அதிகம் கடந்த நிலையில் மன்னன் ஆட்களை அனுப்பி நிலவரம் அறிய ஏற்பாடு செய்தான். குதிரைகள் ஒன்றும் இன்னும் வாங்கப்பவில்லை என்பதையும், பணம் முழுவதும் கோயில்கட்டவே செலவழிந்து விட்டதையும் அறிந்தான். உடனேயே பிரும்ம ராயரை மதுரைக்கு வரவழைத்து, அவரிடம் உண்மை நிலவரம் கேட்க, அவர் பெருமானை மனதால் வேண்ட, பெருமான் அவரிடம்,"ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும், என்று சொல்" என்று ஆணையிட, அவரும் மன்னனிடம் அதைச்சொல்ல , மன்னன் அதை நம்பாமல் அவரை சிறையிலிட்டுத்துன்புறுத்தினான்.
சரியாக ஆவணி மாதம் மூல நன்னாளில்,விடியல் நேரத்தில், மதுரை மாநகரத்தில்,எங்கு பார்த்தாலும் குதிரைகள், குதிரைகளே . அத்தனையும் பஞ்சகல்யாணி குதிரைகள், கறுப்பு வெள்ளை, பழுப்பு, இரு நிறங்கள் கலந்தது, என்றிவ்வாறு. ஒவ்வொரு குதிரையும், சவுக்கை சொடுக்கி, லகானை சற்று தளர்த்தினால் போதும். பஞ்சாக ப்பறக்கும். குளம்பு சத்தம் கூடக்கேளாது. அத்தனை வேகம்.
இறைவனே குதிரைராவுத்தனாகவந்துஅத்தனைகுதிரைகளையும்பாண்டியமன்னனுக்குக்கொடுத்ததாக வரலாறு. அதற்கு அடையாளமாக தனது குதிரைச்சவுக்கை பாண்டியமன்னனுக்கு கொடுத்ததாகவும், அதன் மூலம் குதிரைகளின் பொறுப்பை பாண்டியமன்னன் ஏற்க வைத்ததாகவும்,திருவிளையாடல் புராணம் மூலமாக நாம் அறிகிறோம். குதிரைகள் வந்தபின்பு, மன்னன் ராயரை சிறையிலிருந்து விடுவிக்கிறான் .
ஆனால்அ,ன்றிரவே எல்லாக்குதிரைகளும் நரிகளாக மாறி, அங்கு லாயத்தில் ஏற்கனவேயிருந்த மற்ற குதிரைகளையும் கடித்துக்குதறிவிட்டு ஓடியும் விட்டன என்பது மறு நாள் காலையில் தான் தெரியவந்தது. மன்னன் கோபாவேசனாகி ,ப்ரும்மராயரை மீண்டும் சிறையில் தள்ளி வதைக்கிறான். பகல் பன்னிரண்டு. மணிக்கு சுடும் வெயிலில்,அவர் தலை மீது ஒரு பெரிய கல்லை ஏற்றி அவரை வைகையாற்றின் சுடுமணலில் நிற்க வைத்தான். எம்பெருமானுக்கு தன் பக்தன் இவ்வாறு அவதிப்படுவது பொறுக்காது, அன்றிரவே வைகையில் பெரு வெள்ளம் ஏற்படுமாறு சங்கல்பித்தான்.உடனே வைகையாற்றில் பெரும் வெள்ளம் , மதுரை மாநகர் முழுதும் மூழ்கும் நிலைக்கு வந்தது. அதன் தென் கரை உடனேயே பலப்படுத்தப்பட்டாலன்றி மதுரை மாநகரம் முழுதும் நாசமாகிவிடும் என்ற நிலை. மன்னனுடைய ஆணை உடனே பிறந்தது. எல்லா மதுரை வாசிகளும், வீட்டுக்கு ஒரு நபர் என்ற வீதத்தில் அணை கட்ட ஆளனுப்பவேண்டும் என்று தண்டோரா போடச்சொன்னான். அந்நகரத்தில் அப்பொழுது ஒரு கிழவியான பிட்டு வாணிச்சி இருந்தால். பிட்டு செய்து, அதை விற்று, அந்த வரும்படி மூலம், தன் வயிற்றை கழுவி வந்தாள். அவள் தனி ஆள். வேறு யாரும் கிடையாது. அன்னை மீனாக்ஷியை துதித்தாள். அவள் முன் ஒரு யுவன் தோன்றினான் , கட்டுமஸ்தான தேகம். "தாயே, எனக்கு பிட்டு தாருங்கள்", என்றான்.அதற்கு அவள், "தருகிறேன். அதற்கு எனக்கு நீ என்ன செய்வாய்", என்று கேட்டாள். " நீ சொல்வதை செய்கிறேன்", என்றான். அப்படியானால், என் சார்பாக நீ வைகையில் அணை போடவேண்டும் ",என்று சொல்லி அவனிடம் சிறிது உதிர்ந்த, விலைபோகாத பிட்டைக்கொடுத்தாள் .அவனும் சந்தோஷத்துடன் (அவன் ஆசுதோஷியல்லவா) அதை வாங்கிக்கொண்டு, தன்னை வந்தியின் பெயரில்வந்த கூலியாளாக சேர்த்துக்கொண்டு, அவனுக்கு காண்பிக்கப்பட்ட இடத்துக்கு சென்று,அங்கேயே தன் மண்வெ ட்டியையும்,கூடையையையும் போட்டுவிட்டு , கூடையைத்தத்தன் தலையணையாக்கிக்கொண்டு, நீட்டி நிமிர்ந்து உறங்கலானான். யார் எழுப்பியும் பயனில்லை. மேஸ்திரி தன்னுடைய தலைவனுக்கு இதைச்சொல்ல,தலைவனும் அங்கேயிருந்த மந்திரியிடம் அதைச்சொல்ல, அது அங்கே எதேச்சையாய் வந்த மன்னனின் காதுக்கு எட்ட, மன்னனும் அங்கே வந்து, அங்கே வந்தியின் கூலியாள் இடம் மட்டும் அடைபடாமல் இருக்கக்கண்டு, அவனை எழுப்ப உத்திரவிட்டான். எழுந்ததும் அந்த கூலியாள் இங்குமங்கும் ஓடக்கண்டு, அவனை உடனேயே பிடித்துவரச்செய்தான்.அங்கிருந்த ஆட்கள் அவனை பிடித்துவந்து மன்னனிடம் நிறுத்தியதும், மன்னன் அவனுடைய நடத்தையின் காரணம் கேட்க, அவன் ஏதோ சால்ஜாப்பு சொல்ல ஆரம்பிக்க, மன்னன் வெகுண்டு அவனைத்தன் கைப்பிரம்பால் முதுகில்ஓங்கி அடிக்க, அந்த அடி அங்கிருந்த எல்லோர் முதுகிலும் விழுந்தது, மன்னன் முதுகிலும் நன்றாகவே விழுந்தது. மன்னன் ஸ்தம்பித்துநிற்க, எம்பெருமான் ரிஷபாரூடராய் அங்கிருந்த எல்லோருக்கும் காக்ஷி தந்து, மன்னனைநோக்கி,"மன்னா, அநிருத்தப்பிரும்மராயரை உடனே விடுவி. அவர் நான் சொல்லித்தான் நீ கொடுத்த ஆயிரம் வராகனை கோயிலுக்கு செலவழித்தார்.அவர் என் பக்தர்..உனக்கு அரபுக்குதிரைகள் கிடைக்கும்.வைகையும் தணியும் ".என்று சொல்லி மன்னனை சமாதானப்படுத்தினார் .
வைகைவெள்ளமும் வடிந்து ஆற்று நீர் பழைய நிலைக்கு வந்தது.மன்னன் ராயரை அணுகி தன்னுடைய தவற்றுக்கு மன்னிக்குமாறு அவரை வேண்டினான். அவர், தான் இனி சிவக்ஷேத்ரயாத்திரை செல்லஉத்தேசித்திருப்ப தாக சொல்லி மன்னனிடம் விடைபெற்றார்.
பிட்டு வாணிச்சி சந்து இன்றும் மதுரை மாநகரில் காணலாம்.வடக்கு ஆவணி மூல வீதிக்கும் ,வடக்கு மாசி வீதிக்குமாக , அது தளவாய் அக்கிரஹாரத்தின் பின்புறமாக அமைந்துள்ளது.குறுகிய சந்து.வைகைக்கரையில் பிட்டுத்தோப்பு என்ற இடம் உள்ளது.அங்குஆவணி மூலத்தன்று எம்பெருமான் அம்மையுடன் அன்று அங்கு மண்டகப்படி. பிட்டு பிரசாதமாக வினியோகமாகும். அவரவர் தத்தம் வீடுகளிலிருந்தும் பிட்டு கொண்டுவந்து அம்மைக்கும் எம்பெருமானுக்கும் நைவேத்தியம் செய்து,அங்குள்ள மக்களுக்கும் விநியோகம் செய்வர். இது இன்றும் நடப்பதைக்காணலாம். தமிழ் நாட்டுமக்கள் ,இயற்கையாகவே தெய்வபக்தியுள்ளவர்கள்.இதை சமீபத்தில் அத்தி வரதர் காக்ஷி கொடுத்த 48 தினங்களிலும் காண முடிந்தது. நமது கோயில்கள் இப்பொழுது இல்லாதது மாதிரி நன்றாகவே பராமரிக்கப்பட்டால் தமிழ் நாட்டிலுள்ள எல்லாக்கோயிகளிலும் மக்கள் அதிக அளவில் எல்லா நாட்களிலும் கூடித்தொழுவதைக்காணமுடியும் .அதனால் அவர்களுடைய நடத்தையும் மேம்படும். குற்றம் புரிதலும் வெகுவாகக்குறையும். தமிழ் நாடு அற நிலையத்துறையின் நிர்வாகம் சரிப்பட்டால் இது நடக்கும். அந்நாளை நாம் எதிர்பார்த்திருப்போமாக.
குறிப்பு:
அநிருத்தபிரும்ம ராயர் கட்டின, ஆவுடையார் கோயிலிலுள்ள (திருப்பெருந்துறை தான் இதன் பெயராக இருந்தது),ஆத்ம நாதர் -யோகாம்பிகை யின் கோயில் அபூர்வ வேலைப்பாடுகள் உடையது.அதிலுள்ள கல்லிலாலான கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்குமாறு (பேப்பர் போன்று) வடிக்கப்பட்டது.இது உலகெங்கும் காணமுடியாத அதிசயமே .அவ்வாறான கோயில் இன்று சரியாகப்பராமரிக்கப்படாமல் கேட்பாரற்று இருக்கிறது. மேலும் இந்தக்கோயிலில் நந்தியோ, கொடிமரமோ கிடையாது. ஆத்ம நாத லிங்கத்துக்கு உருவமே கிடையாது அதன் அடியில் உள்ள ஆவுடையாரைத்தான் காண முடியும். (அவ்விதமான அருவ நிலை அவர் பரம்பொருள் என்பதையே குறிக்கிறது). மேலும் இந்த ஆத்மநாதருக்கான நைவேத்தியம் புழுங்கலரிசியாலான சாதத்தையும் , வெந்த கீரையையும் அவர் முன்னே இருக்கும் ஒரு பெரிய நீண்ட சதுரமான மேடையில் கொட்டி, அவற்றின் ஆவியையே அவருக்கு நைவேத்தியமாக படைப்பர். இந்த மாதிரியான நைவேத்திய முறையை எந்தக்கோயிலிலும் காண முடியாது. யோகாம்பிகைக்கும் உருவம் கிடையாது. ஒரு பெரிய மேடையின்மேல் இரண்டு பாதங்களின் உள்ளங்கால்கள் மட்டும் தெரியுமாறான அமைப்பு. அம்மையின் சந்நிதிக்கு நேராக மாணிக்க வாசகப்பெருமானின் சந்நிதியும் அமைந்துள்ளது . அம்மைக்கும் மணிவாசகப்பெருமானுக்கும் ஒரே சமயத்தில் கற்பூர தீபாராதனை நடக்கும். உள் பிராகாரத்தில் அக்னி மூலையில் குருந்தமரமும் அதன் கீழ் யோகியும் சிஷ்யர்களுமான ஒரு புடைப்புச்சிற்பம் காணலாம். மூன்று காலம் பூஜை. செய்பவர்கள் சோழிய குல பிராம்மணர்களே . அவர்கள் ' நம்பியார் ' என்று அழைக்கப்படுகிறார்கள். (பொருளாதாரத்தில் பொதுவாகவே எல்லா பிராமணர்களும் கீழ் நிலையில் உள்ளவர்களே. அவர்களிலும் சோழியர் கீழ்பட்டவர்கள். அவர்களிலும் நம்பியார்கள் மிகவும் கீழ்பட்டவர்கள் --யாரிடம் இதை சொல்வது? ஆண்டவன் தான் துணை )1970-ல் இந்தக்கோயிலுக்கு முதன்முதல் சென்றதாக ஞாபகம். அப்புறம் செல்லவில்லை.கோயில் கோபுரம் முழுமையாகக்கட்டப்படாமலும்,மிகவும் பழுதடைந்த நிலையிலும் காணப்பட்டது. கோபுரத்துக்கு வெளியே, கோயிலின் வலப்புறமாக ஒரு சிறிய குளம் காணப்பட்டது. அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.வியாச தீர்த்தம் என்றும் சொல்கிறார்கள். அக்னி மூலையில் அமைந்ததால் அக்னி தீர்த்தம் என்ற பெயர் வந்திருக்கக்கூடும்.
தமிழ் நாட்டில் இதேபோன்று பல கோயில்களைக்காணலாம். ஒவ்வொன்றும் ஒரு அரிய பொக்கிஷமே.தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான் என்பவர் எல்லா தமிழ் நாட்டுக்கோயில்களைப்பற்றியும் ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அது ஒரு அறிவுப்பெட்டகம்.
ச. சிதம்பரேச ஐயர்
செப் 9, 2019
No comments:
Post a Comment