Monday, July 15, 2019

Vishnu Sahasranama 469 to 487 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

469.ஸ்வாபன:-பிராணிகளை மாயையால் ஆத்மஞானம் இன்றி உறங்கச்செய்பவர்.
யோகநித்திரையில் ஆழ்ந்து பிரளயகாலத்தில் எல்லாஉயிர்களையும் உறங்கச்செய்பவர்.

470. ஸ்வவச:-பிறர்க்கு வசப்படாதவர். எல்லாவற்றையும் தன் வசத்தில் வைத்துள்ளவர்

471. வ்யாபீ- எங்கும் நிறைந்தவர். 'ஆகாசவத் சர்வகத: ச நித்ய:' ஆகாயம் போல எங்கும் வியாபித்திருந்தாலும் நித்யமானவர்.

472.நைகாத்மா-திருமேனி ஒன்றில்லாதவர். 
'பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே; பலபலவே சோதி வடிவு' – திருவாய்மொழி- 2.5.6

அஜாயமானோ பஹுதா விஜாயதே – புருஷசூக்தம். பிறவியே இல்லாதவர் பலவாகத் தோன்றுகிறார். 
'ததைக்க்ஷத பஹுதாம் பிரஜாயேய' – உபநிஷத். 
ஒன்றான பிரம்மம் பலவாக சங்கல்பித்தது.

முந்திய நாமம் பகவானுடைய ஸர்வவ்யாபித்துவத்தைக் குறிப்பது . இது அவனுடைய அந்தர்யாமித்துவத்தைக் குறிக்கும். எல்லா உயிர்களிலும் அந்தராத்மாவாக இருப்பதால் நைகாத்மா எனப்படுகிறார். இது அவருடைய அவதாரங்களையும் குறிக்கும்.

பாகவதம் கூறுகிறது,
வற்றாத ஏரியிலிருந்து ஆயிரக் கணக்கான ஊற்றுக்கள் உற்பத்தியாவது போல நாராயணனிடம் இருந்து கணக்கிலா அவதாரங்கள் தோன்றுகின்றன. (எங்கெங்கு நல்ல பண்புகள் செயல்கள் காணப்படுகின்றனவோ அவை எல்லாம் பகவானின் அவதாரங்களே.)

473. ந ஏக கர்மக்ருத்-சிருஷ்டி ஸ்திதி அம்ஹாரம் முதலிய பல கர்மங்களை செய்பவர்.அம்ருதமதனத்தில், கடைவது, மலையைத்தாங்குவது, பகைவரை ஒழிப்பது, அமுதம் அளிப்பது முதலிய பல செய்கைகள் . உலகில் எல்லா செய்கிகளும் அவரால்தான் என்றதனால் பல செய்கைகளை செய்பவர்.

474. வத்ஸர:- வஸதி இதி வத்ஸர:. எல்லாவிடத்திலும் அவர் உள்ளார் , அவரிடத்தில் எல்லாம் உள்ளது. அதனால் அனைத்திற்கும் தாமே இருப்பிடமானவர் வத்ஸர: எனப்படுகிறார். வத்ஸரம் என்றால் வருடம் என்றும் பொருள். அவரே காலமானதால் இந்தப் பொருளும் பொருந்துகிறது. கீதையில், 'கால: கலையதாம் அஹம், ' 'கணிக்கப்படுவதான காலம் நானே'' என்கிறார்.

475. வத்சல: -அன்புள்ளவர். பக்தவத்ஸலர். வத்ஸ என்றால் கன்று என்றும் பொருள். அதன்படி ஒரு பசுவுக்குத் தன் கன்றிடத்தில் எவ்வளவு அன்பு இருக்குமோ அவ்வளவு அன்பு நம்மிடம் உடையவர்.

476.வத்ஸீ- வத்ஸா: அஸ்ய அஸ்தி இதி வத்ஸீ. பல குழந்தைகளை உடையவர். ஜகத்பிதா ஆனபடியால் எல்லாம் அவர் குழந்தைகளே.

மாதா ச லக்ஷ்மீ தேவி பிதா தேவோ ஜனார்தன: பாந்தவா: விஷ்ணுபக்தா: ச வஸுதைவ குடும்பகம். 
கிருஷ்ணாவதாரத்தில் கன்றுகளை எல்லாம் குழந்தைகளைப்போல் காத்தவர்.

477.ரத்னகர்ப: -ரத்தினங்களை உள்ளே வைத்திருக்கும் கடல் போன்றவர். கடலைப்போல ஆச்சரியம் ஆனந்தம் இவைகளைக் கொடுப்பவர். அதைப்போல காம்பீர்யம் உடையவர்.

478.தனேஸ்வர: -பெரும்தனம் உடையவர். மோக்ஷம் என்கிற மிகப்பெரிய செல்வத்தைத் தருபவர். 
'அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம்,' அத்திகிரி மேல் என் பரம்பரை சொத்து இருக்கிறது. – வேதாந்த தேசிகர்- வைராக்ய சதகம்.

479. தர்மகுப்- தர்மத்தைக் காப்பவர். தர்மம் நலிவுறும் சமயம் தோன்றுவேன் என்றவர். ராமாவதாரத்தில் சீதையையும் லக்ஷ்மணனையும் கூட விட்டுவிட்டாலும் தர்மத்தை விடமாட்டேன் என்று கூறியவர்.

மேலும். நெருப்பும் உஷ்ணமும், நீரும் குளுமையும் என்றபடி அந்தந்தப் பொருளின் இயற்கை தர்மத்தை நிலை நிறுத்துபவர். சமுத்திரம் எல்லை கடக்காமல் அதன் தருமத்தை நிலை நாட்டுபவர்.

ஆயின் தருமம் அழிவுறும்போது இயற்கை தருமத்தை மீறச்செய்பவர். அப்போது ஐம்பூதங்களினால் , சுனாமி, பூகம்பம் எரிமலை சீற்றம் முதலியன ஏற்படுகின்றன.

480.தர்மக்ருத் – தர்மத்தை ஸ்ருஷ்டிப்பவரும், தாங்குபவரும் அவரே. 'ஆசாரப்ரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபுரச்யுத: ,' விஷ்ணு சஹஸ்ரநாமம் பலஸ்ருதி.

481. தர்மீ—தர்ம: அஸ்ய அசதி இதி தர்மீ. தருமத்தின் இருப்பிடம். ராமோ விக்ரஹவான் தர்ம:- வால்மீகி. 
பீஷ்மர் கூறுகிறார்,

லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூதபவோத்பவம் 
ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோ அதிகதமோ மத: 
லோகநாதனும், பரப்ரம்மமும், உலகஸ்ருஷ்டிகர்த்தாவும் உலகைக் காப்பவனுமாகிய அவனே எல்லாதர்மங்களிலும் சிறந்த தர்மமாவான்.

482. ஸதஸத் -ஸத் என்பது பிரம்மத்தைக் குறிக்கும். ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் . ஏகமேவ அத்விதீயம் என்பது உபநிஷத் வாக்கியம். இதன் பொருள்:

ஆதியில் இது ஒன்றேயாக இரண்டற்றதாய் ஸத்தாக இருந்தது. 
ஓம் தத் ஸத் என்று பிரம்மத்திற்கு மூன்று வகையான குறிப்புப் பெயர். 
அஸத் என்பது பெயர் வடிவம் இவற்றில் மறைந்துள்ள பிரம்மம்.

483. க்ஷரம்- அழியக்கூடியது. அதாவது நிலையற்ற பிரபஞ்சமாகவும் இருப்பது அவரே என்று பொருள்.

484. அக்ஷரம்- அழிவில்லாத நிரந்தரமான பிரம்மம்.

485. அவிக்ஞாதா-அறியாதவர் என்பது மேலெழுந்த வாரியான பொருள் . ஆனால் பகவான் பக்தர்களின் குறைகளை அறியாதது போல் இருப்பதால் அவன் அவிக்ஞாதா எனப்படுகிறார்.

அல்லது அவி: என்றால் காப்பவர் என்றும் பொருள். ஞாதா என்றால் எல்லாம் அறிந்தவர். இவ்விதம் இரு சொற்களும் இணைந்து அவிக்ஞாதா என்று கூறப்படுகிறது.

486. ஸஹஸ்ராம்சு: ஆயிரக்கணக்கான அதாவது கணக்கற்ற கிரணங்களாகிய தேஜஸ் உடையவர். விஸ்வரூபத்தைக் கண்ட சஞ்சயன் ஆயிரம் சூரியர்கள் ஒரே சமயத்தில் உதித்தாற்போல என்கிறான்.

கிரணங்களால் பிரகாசிக்கும் ஆயிரம் முனைகளுடன் கூடிய சுதர்சன சக்கரத்தை உடையவர் என்றும் சொல்லலாம்.

487. விதாதா –நீதியை நிலை நாட்டுபவர். யமன் முதல் அனைவரையும் கட்டுப்படுத்துபவர். அவரவர் கர்ம பலனை நிச்சயிப்பவர்.

488. க்ருதலக்ஷண: -எல்லாப் பொருள்களுக்கும் தனித்தனி லக்ஷணம் அமைத்தவர்.
'அனேன ஆத்மனா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி,' என்பது உபநிஷத் வாக்கியம். இதன் பொருள் பிரம்மம் எல்லாவற்றினுள்ளும் உட்புகுந்து பெயர் உருவம் இவை கற்பிக்க சங்கல்பித்தது என்பதாகும்.

  

No comments:

Post a Comment