Sunday, July 7, 2019

Sraddhaa traya vibhaga yogam

ஐந்தாம் வேதம் J K SIVAN 
பகவத் கீதை 17

ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்

பகவத் கீதை என்றாலே ஏதோ புரியாத தலை சுற்றும் விஷயம் என்ற எண்ணம் தான் பெரும்பாலோரை அதன் அருகே நெருங்காமல் செய்கிறது. அதை விளக்குபவர்கள் சிலருக்கோ, பலருக்கோ, இதில் பெரும்பங்கு உண்டு. இந்த தலைப்பு பயமுறுத்துகிறது. அர்த்தம் சாதாரணம் தான். ஸ்ரத்தையோடு செய்யவேண்டிய மூன்று தினுசு காரியங்கள்.

''ஸ்ரீ கிருஷ்ணா, நீ சொன்னதெல்லாம் புரிகிறது. சாஸ்திரப் பிரகாரம் தான் காரியங்களை ஸ்ரத்தையோடு செய்யவேண்டும் என்றாய். ஒருவேளை ஸ்ரத்தையோடு ஆனால் சாஸ்திர விதிகளை மீறி யக்னம் செய்தால், அது சத்வ நிலையா, ரஜோ நிலையா, தமோ நிலையா?'' என்று கேட்கிறான் அர்ஜுனன்

'' அர்ஜுனா நீ ஏதாவது ஒரு கேள்வியை உனக்குள்ளே உற்பத்தி செய்து கொள்கிறாய். இருந்தாலும் உன் சந்தேகத்தை போக்குகிறேன், கேள்'' என்று ஆரம்பித்து ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு உபதேசம் செய்வது போல் நமக்கு உணர்த்துவது தான் கீதையின் பதினேழாவது அத்யாயமாகிறது. மேலே சொன்னபடி ஸ்ரத்தையோடு செய்யும் மூன்று தினுசு காரியங்கள். ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நாம் வாழ்க்கையில் நமக்கென்று ஒரு பாதை அமைத்துக் கொள்கிறோம். சரியான பாதையில் செல்பவன், சீராக கவலையின்றி மனம் அதில் ஈடுபடாமல் செல்கிறான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாதை தேர்ந்தேடுக்கிறவன், முழு கவனமும் அந்த பாதையிலே சென்றுவிடுகிறது. பாதையே இல்லாதவன் காட்டிலும் மேட்டிலும் முள்ளிலும் கல்லிலும் உழல்கிறான். இது புரிகிறதல்லவா. வழக்கமான பாதையில் செல்லும்போது கவனம் வேண்டாம். கண்மூடிக்கொண்டே வீடு சென்றுவிடலாம்.

மனிதனது நம்பிக்கை அதேபோல் மூன்று வகை. சாத்விகி, ராஜசி, தாமசி, என்ற இவை அவரவர் இயல்புக்கு தக்கவாறு உண்டாகும். எப்படியென்றால் இவை முறையே, தூய்மையில், ஆசையில், அல்லது மயக்கத்தில் உருவாகும் நம்பிக்கைகள் தான் மேலே சொன்னவை.

இந்த மூன்று வகை மக்களுக்கேற்ப அவர்கள் வழிபாடு, உணவு, செய்யும் யாகங்கள், தன்மைகள் அமையும். சில உதாரணங்கள் கூறுகிறேன் கேள்.

சாத்விகி - சத்வ வழி செல்பவன். அவன் தூய வழிபாடு புரிபவன். சாஸ்திரப் படியே தேவர்களுக்கு யாக யஞங்களை பயன் விரும்பாமல் செய்பவன், அவன் உண்பது, உயிர், சக்தி, பலம்,நோயின்மை, இன்பம், உறுதியான இவற்றை தரும் உளமுகந்த உணவு. அதை முதலில் ஆண்டவனுக்களித்து ருசித்து புசிப்பவன். 
நம்மில் எத்தனை பேர் எதை உண்பதற்கு ,குடிப்பதற்கும் முன்பும் பகவானே, கிருஷ்ணா, இது உனக்கே அர்ப்பணம் என்று அவனுக்களித்துவிட்டு சாப்பிடுகிறோம்? இன்று முதலாவது இந்த எளிய சுலப பழக்கம் உருவாகட்டும்.

யஞம் என்பதே ஸ்ரிஷ்டிக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக புரியும் காரியம். 'லோகம் சமஸ்தமும் சுகித்து' சுகமாக இருக்க செய்யும் தன்னலமற்ற வேள்வி. அடிக்கடி சொல்கிறோமோ லோகா ஸமஸ்தா ஸு கினோ பவந்து: '' இது நம் கடமை. தேவ கடன், சமூக சேவை, பித்ரு கடன் ஆகியவற்றை கடமையாக செய்தல். செய்யும் காரியங்களை பகவானுக்கே அர்பணித்தல். உணவை பிரசாதமாக ஏற்றுக்கொள்ளுதல். தூய உணவினால் சித்த சுத்தம் கிடைக்கும். தேக பலமும் உண்டாகிறது.

ராஜசி, ரஜோகுணத்தவன் - யக்ஷர்கள், ராக்ஷசர்களை வழிபடுவான், டம்பத்திற் காகவும், அகங்காரமுடனும் ஆடம்பரத்துக்காக, யஞங்கள் செய்வான். இவனுக்கு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு , உறைப்பு தூக்கலாக இருக்க வேண்டும். செய்யும் தொழிலிலும் காம குரோத மோக லோப உணர்வுகள் உண்டு. இவை துன்பம் நோய் தருவன. பயன் கருதி, பெருமையை நாடி காரியங்கள் செய்பவன்.

தாமசி -தமோகுண ஆசாமி. பூத பிரேத பைசாசங்களை வழி படுவான். உடலை வருத்திக் கொள்வான், உடலில் உள்ள என்னையும் சேர்த்து. பழையது, எஞ்சியது, கெட்டுப்போனது, எச்சில், அசுத்தம் இவற்றை உண்பான். விதிமுறை அற்ற, தன்னலம் கொண்ட, என்மீது நம்பிக்கையில்லாமல், பிறர்க்குதவாத காரியங்கள்செய்பவன்.
புரிகிறதா அர்ஜுனா?

எல்லா வேதங்களுமே 'ஓம் தத் சத்' என்ற பிரமாணப்படி பிரமவாதிகள் பலன் கருதாமல் உச்சரிப்பது. . இவ்வாறான தவமும், வேள்வியும் மோக்ஷம் தருபவை. 'சத்' என்றால் நன்மையையும் உண்மையையும் சேர்த்து குறிக்கும் சொல். ''ஓம்' என்பது ப்ரணவாதாரம், ப்ரணவாகாரம். ஆம், 'பரம்பொருள்'' என்ற அர்த்தம் கொண்டது. ''ஓம்'' என்பதை விளக்க ஒரு முழு புத்தகமே எழுத வேண்டியிருக்கும். அப்படியும் முழுமை இருக்காது என்று தோன்றுகிறது. அவ்வளவு விஷயம் இருக்கிறது.

''சத் '' என்பது ஆண்டவனை. சத்தியத்தை, நன்மை பயப்பதை குறிக்கும் சொல். ''தத்'' 'அது ' என்பது பரம்பொருளிலிருந்து வேறுபட்டது. பகவான் வேறு சிருஷ்டி வேறு. தாயிலிருந்து சேய் உண்டானாலும் தாய் வேறு சேய் வேறு இல்லையா.

பகவானிடமிருந்தே உண்டானாலும் ஸ்ரிஷ்டி அவன் தொடர்பு அற்றது. எல்லாவற்றையும் அந்த ஆண்டவனுக்கே அர்ப்பணித்தலைத்தான் '' யத் கரோதி யதஸ்னாஸி '' என சொல்வதின் பொருள்.

அஸ்ரத்தையோடு செய்யும் வேள்வி, தவம், தானம்,கர்மம் யாவையும் அஸத் ( உண்மையற்றது, நன்மை தராதது). இவற்றை புரிவதால் இம்மையில் மட்டுமில்ல, மறுமையிலும் பயன் இல்லை.

இனி அடுத்தது கீதையின் கடைசி அத்யாயம் 18வது. அடுத்த கட்டுரையில் அது பற்றி தெரிந்து கொள்வோம்.
அதற்கு பிறகு யுத்தத்தில் நுழைவோம்.

  

No comments:

Post a Comment