Sunday, July 7, 2019

Sattva guna

ஹே..! பாதுகே-26
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 17.06.2019)

சத்வ குணத்தினால் என்ன உண்டாகும்..?
 
தயை, பொறுமை, ஒழிவு, பணிவு, தீர்க்கமான தீர்மானமான முடிவு, தெய்வபக்தி போன்ற நல்ல பல குணங்கள் உண்டாகும்.
 
இந்த சத்வ குணத்தினை அடைவதெப்படி..?
 
ஆழ்வாரை இந்த உலகத்தினைக் காப்பாற்றுவதற்கு ஏற்படுத்தி, பெருமாள் கவலையற்று இருக்கின்றார்..!

ஆழ்வார்களுடைய பாசுரங்கள் ஸேவிக்கும் போது அவர்களுடைய சத்வ குணத்திற்கு எல்லையேயில்லை..!  

ஆகவே ஆழ்வார்களுடைய பாசுரங்களை அநுசந்திப்பதனாலும், ஸகலலோக காப்பாற்றுதலை ஏற்று கொண்டிருக்கும் பாதுகையினை சிரஸ்ஸில் ஏற்பதாலும் அடையமுடியும்..!
 
பாதுகையில் இழைக்கப்பட்டுள்ள முத்துக்களின் காந்தி நாலாபுறமும் பரவி, பாதுகையின் எல்லையில்லாத சத்வ குணத்தினை எல்லா லோகத்திற்கும் காண்பிப்பது போலுள்ளது..!
 
ஜோதிட சாஸ்திரம் சந்திரனை மனோ காரகனாகவும், தாய்மை கிரஹமாகவும் கூறுகின்றது.  சூரியனைத் தந்தை கிரஹமாகக் கூறுகின்றது..!  

சந்திரன் என்னும் இந்த கிரஹத்திற்குரிய ரத்னம் முத்து ஆகும்..!  

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவரது மனநிலை,   அதாவது சத்வ குணம் குறைந்து ரஜோ, தமோ குணங்கள் அதிகரித்து,  பாதிக்கப்பட நிறைய வாய்ப்புண்டு.!  அப்போது ஜோதிடர் முத்தாலான ஆபரணத்தினையோ அல்லது மோதிரத்தினையோ அணியச் சொல்லுவர்..!  

இந்த முத்தின் காந்தியானது மனநிலையை சீராக்கும்..!

ஜாதகரின் சந்திர கிரஹ கோளாறினை சமப்படுத்தும்..!

மனநிலை சமனப்படுவது, சாந்தி பெறுவது சத்வகுணம்..!    

ஒரு நல்முத்திற்கே இவ்வளவு சக்தியென்றால் தேசிகரது காலத்தில் நம்பெருமாளின் பாதுகையில் பதிக்கப்பெற்ற நல்முத்துக்களின் காந்திக்கு எவ்வளவு சக்தியிருந்திருக்கும்!.  

மூலவருக்கு அத்யயன உற்சவத்தின் போது சாற்றப்பெறும் முத்தங்கியினை ஸேவிக்கப் பெறும் பாக்யம் பெற்றவர்கள் பெறும் காந்தி – அவர்களது சத்வகுணத்தினை எவ்வளவு மேம்படுத்தியிருக்க வேண்டும்!.
 
எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம்!  அத்யயன உற்சவத்தின் போது மட்டும் பெருமாளுக்கு முத்தங்கி மற்றும் இரத்னங்கி ஏன் சாற்றுகின்றார்கள் என்று?

பெரியவர்கள் முத்தங்கியை திருப்பாற்கடல் ஸேவைக்கு ஓப்பாகக் கூறுவர்.  பெரியபெருமாள் நல்முத்துக்கள் குவிந்த க்ஷீராப்தி சமுத்திரத்தில் பள்ளிக் கொண்டவன்.  ஆகவே இந்த ஸேவை க்ஷீராப்திநாதன் ஸேவை என்று!
இருக்கலாம்….!
 
அதனை ஏன் அத்யயன உற்சவத்தின் போது மட்டும் சாற்றிக் கொள்ள வேண்டும்..? வேறு உற்சவங்களே இல்லையா…..என்ன..,?

பாதுகையினை ஆழ்வாராகவும், அதிலுள்ள முத்துக்கள் ரத்னங்கள் அனைத்தையும் ஆழ்வாரின் பாசுரங்களாக பாவிக்கின்றார் ஸ்வாமி தேசிகன்.
அப்படியிருக்க முழுக்க ஆழ்வார்களின் அனுபவத்திலும்,  ஆழ்வார்களது தீந்தமிழ் பாசுரங்களையும் ஆடிப்பாடிக் கொண்டாடும் அத்யயன உற்சவத்தில், பாதுகையாயுள்ள நம்மாழ்வாரின் மோட்சத் திருநாளில், இந்த முத்துப் போர்வையினை, முத்தங்கியையும்,  இரத்னங்கியையும் சாற்றுவதுதான் மிகவும் பொருத்தமாகும்!  சாலச் சிறந்ததாகும்!

தாஸன் - முரளீ பட்டர்
#ஹேபாதுகே

No comments:

Post a Comment