சிப்பாய் கலகம் J K SIVAN
இன்று லக்ஷ்மி பாய் தினம்
இந்த பாரத தேசம் நாம் இருக்கும் நாடு நமதென்பதறிவோம், இது நமக்கே உரிமையும் என்பதறிவோம் என்று உயிரைக் கொடுத்து அந்நிய ஏகாதிபத்தியத்தை, ஊடுருவலை எத்தனையோ பேர் எதிர்த்திருக்கிறார்கள். ஆண்கள் மட்டும் அல்ல எண்ணற்ற பெண்களும் இதில் சேர்க்கை. அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த சாஷ்டாங்க நமஸ்காரம்.
இன்று, அதாவது ஜூன் 18 ஆனால் 161 வருஷங்களுக்கு முன்பு 18.6 1858 ல் ஒரு பெண் தன்னுயிரை பலியாக்கி இருக்கிறாள். அவள் தான் ஜான்சி ராணி. லக்ஷ்மிபாய் . குவாலியரில் வெள்ளையனை தனியே நின்று எதிர்த்து 30 வயதில் உயிர் அர்ப்பணம் செய்தவள்.
மராத்திப் பெண். மோரபந்த் தம்பே, பாகீரதி பாய் என்ற பெற்றோருக்கு 19.11.1828ல் காசியில் பிறந்தவள். புண்யம் செய்த பெண்ணல்லவா. அதனால் மணிகர்ணிகா என்று பேர் வைத்தார்கள். நான்கு வயதில் அம்மா போய்விட்டாள். அப்பா அவளை பேஷ்வா என்ற மராத்தி ராஜ குடும்பத்தில் சேவகம் செய்துகொண்டே வளர்த்தார். மராத்தி ராஜா பேஷ்வாவுக்கு இந்த குட்டி தாயில்லாப் பெண்ணை ரொம்ப பிடித்துவிட்டது. ''சப்பிலி' (விளையாட்டுக்காரி) ' என்று கொஞ்சுவான். அரண்மனையில் கல்வியோடு குதிரையேற்றமும் கற்றுத்தந்தார்கள். துப்பாக்கியால் சுடும் பயிற்சியும் பெற்றாள். வில் வித்தையும் பழக்கமாயிற்று.
14வயதில் ஜான்சி ராஜா கங்காதர ராவுடன் திருமணம் நடந்தது. லட்சுமிபாய் என்ற பெயர் வந்தது. 23வயதில் பிள்ளை பெற்றாள். அவன் பெயர் ராஜா தாமோதர் ராவ். பாவம் 4மாத குழந்தையாகவே அவன் மறைந்தான். உறவினர் பிள்ளை ஒருவன் ஆனந்தராவ் என்பவனை தத்து எடுத்து வளர்த்து அவனுக்கு தாமோதர் ராவ் என்று பெயர் வைத்தார்கள். இதற்கு சாட்சி ஒரு வெள்ளைக்கார அதிகாரி. அவன் தான் வெள்ளை அரசாங்கத்துக்கு ஜான்சி ராஜ்யத்தை லக்ஷ்மிபாய்க்கு அவள் காலம் முடியும் வரை அளிக்கவேண்டும் என்று கடிதம் எழுதியவன்.
ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் கணவன் ராஜா கங்காதர ராவ் அவளது 25வது வயதில் இறந்து போனான். இந்த சந்தர்ப்பத்தை விடுவானா பிரிட்டிஷ் கவர்னர் ஜெனெரல் டல்ஹவுஸி . நேர் வாரிசு இல்லாத ராஜ்ஜியங்கள் அரசாங்கத்தை சேர்ந்த என்ற சட்டத்தின் கீழ் ஜான்சி பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு சொந்தம் கொண்டாடியது வெள்ளை அரசாங்கம்.
வெள்ளைக்கார வக்கீல்களை ஆலோசனை கேட்டாள் லக்ஷ்மிபாய் . லண்டனில் வழக்கு போட்டாள் . அவள் வழக்கு தள்ளுபடி ஆயிற்று. அவளது ஜான்சி கஜானா சொத்துக்களை எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் கைப்பற்றியது. அவளது 26வது வயதில் வெள்ளை அரசாங்கம் அவளுக்கு 60,000 ரூபாய் பென்ஷன் தந்தது. ஜான்சி கோட்டையை, அரண்மனையை விட்டு வெளியேறு என்று உத்தரவிட்டது. ராணி மஹால் என்கிற இடத்துக்கு குடி பெயர்ந்தாள். ஜான்சி செல்பவர்கள் அந்த மஹாலை அதை அருங்காட்சி அகமாக காணலாம். ஆத்திரத்தில் துடித்த லக்ஷ்மிபாய் படை சேர்த்தாள் .ஆண்களுக்கும் பெண்களுக்கும் போர் பயிற்சி கொடுத்தாள் . சிப்பாய் கலகம் நடந்த வருஷம் 1857 அவளது 29வது வயதில் என்ன நடந்தது தெரியுமா. வெள்ளைக்காரன் கொடுத்த துப்பாக்கி குண்டுகளை, பீரங்கிக்கான பொடிகளை,(GUN POWDER ) பன்றி, மாட்டு மாமிச கொழுப்பால் சுற்றி ஈரமில்லாமல் உலர்ந்ததாக வைத்திருந்தார்கள். பிளாஸ்டிக் கண்டுபிடிக்காத காலம் அல்லவா. அந்த கொழுப்பு கலந்த தோலை பல்லால் கடித்து இழுத்து தான் குண்டுகளை வெளியே எடுத்து துப்பாக்கியில் உபயோகிக்க வேண்டும். பன்றி, மாடு மாமிசத்தை ஹிந்து சிப்பாய் பல்லில் கடித்து துப்பி குண்டு உபயோகிப் பானா? கொதித்தெழுந்த ஹிந்து சிப்பாய்கள் வெள்ளை அரசாங்கத்தை எதிர்த் தார்கள். இது தான் முதல் சுதந்திர தாகம். லட்சுமிபாய் அலெக்சாண்டர் ஸ்கீன் என்னும் அதிகாரியிடம் தனக்கு பாதுகாப்புக்கு சிப்பாய்களை கேட்டு பெற்றாள் . மெதுவாக வீரர்களை சேர்த்து கோட்டையை பலப்படுத்திக் கொண்டாள் .
ஹ்யூக் ரோஸ் என்கிற வெள்ளை ராணுவ அதிகாரி லட்சுமிபாய் கோட்டையை வீரர்களோடு பலப்படுத்திக்கொண்டதை கண்டுபிடித்து அவளை சரணடைய கட்டளையிட்டான். சரணடைய முடியாது வா சண்டைக்கு என்று சவால் விட்டாள் லக்ஷ்மிபாய் . மராத்திய பேஷ்வா போர்வீரர் தாதியா தோபே என்கிற வ ர் உதவியை லக்ஷ்மி பாய் நாடினாள். 2 0,000 ராணுவ வீரர்க ளோடு தாதியா தோபே ஜான்சி வந்தார். பிரிட்டிஷ் சைன்யம் கடல் போல் பெரியது அல்லவா? ஜான்சியை விட்டு லக்ஷ்மி பாய் அவள் வளர்ப்பு மகன் தாமோதர் ராவ், ஆகியோர் இரவோடு இரவாக தப்பி தாதியா தோபே படையோடு சேர்ந்துகொண்டார்கள் . ராவ் சாஹேப் என்ற அனுபவ வீரரும் அவளோடு இருந்தார். அவர்கள் முயற்சி தோல்வி கண்டது. பிரிட்டிஷ் ராணுவ படையை எதிர்த்து வெல்ல முடியவில்லை. குவாலியரை வெள்ளையரி
டமிருந்து காப்பாற்ற முடியவில்லை. அடையாளத்தை மறைக்க லக்ஷ்மிபாய் ஒரு ஆண் வேடத்தில் குதிரையேறி போரிட்டாள் .முதுகில் குழந்தை தாமோதர் ராவை துணியால் இறுக்கி கட்டிக்கொண்டு குதிரையில் ஏறி சண்டையிட்டாள். குற்றுயிரும் குலையுயிருமாக போர்க்களத்தில் விழுந்து அவளை ஒரு துறவி பார்க்கிறார். வெள்ளையன் என் உடலை தொடக்கூடாது.என்னை எரித்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறாள். அவள் இறந்தவுடன் அவள் உடல் அவ்வாறே தஹனம் செய்யப்பட்டது. 30வயதில் எல்லாம் முடித்துவிட்டு இந்திய சரித்திர புத்தகத்தில் எழுத்துகளாக நிரந்தரமாகிவிட்டாள் .
எத்தனையோ நூற்றாண்டுகள் ஓடிவிட்டது. ஜான்சி ராணி இன்னும் நினைவில் உள்ளாள். குவாலியரில் அவள் பெயரில் இன்று காலேஜ், ஆஸ்பத்திரி, இன்னும் என்னன்னவோ அவளை நினைவுபடுத்துகிறது. காற்றில் லக்ஷ்மிபாயின் சுதந்திர மூச்சு என்றும் கலந்திருக்கும்.
No comments:
Post a Comment