Thursday, July 18, 2019

Headache

இன்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன் என் மொபைலுக்கு ஒரு கால் வந்தது.

ஒரு பெண்மணி பேசினார்: ''சுவாமிநாதன் இருக்காரா?''

''சுவாமிநாதன்தான் பேசறேன்...''

அடுத்த ஒரு சில நிமிடங்களுக்கு எனது நிகழ்ச்சிகளை ஏகத்துக்கும் புகழ்ந்து வாழ்த்து மழை. அடிக்கடி யூ டியூப்பில் எனது சொற்பொழிவுகளைக் கேட்பாராம். சென்னை கந்தன்சாவடியில் ஒரு எம்.என்.சி. நிறுவனத்தில் பணி புரியும் இவரது மகன்தான் அடியேனது சொற்பொழிவு ஃபைல்களை அனுப்பி வைப்பாராம். இந்தப் பெண்மணி இல்லத்தரசி. 

''எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள்?''

''சங்ககிரி...'' 

''உங்க பேரைத் தெரிஞ்சுக்கலாமா?''

''ரேவதி...'' (செய்தியின் நம்பகத்தன்மைக்காக ஊரும் பெயரும் சேர்த்துள்ளேன்).

''சொல்லுங்கோ... என்ன விஷயம்?''

''மாமா... சென்னை மயிலாப்பூர்ல கபாலீஸ்வரர் கோயில் நீங்க சொற்பொழிவாற்றும்போது ஒரு தடவை நேர்ல பார்த்துப் பேசி இருக்கேன். உங்களுக்கு அது மறந்திருக்கும். பரவாயில்லை.
ஆனால், இன்னிக்கு நடந்த ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்லியே ஆகணும். உங்களோட போன் நம்பர் ரொம்ப நாளாவே என்கிட்ட இருக்கு. போன்ல பேசணும் பேசணும்னு நினைச்சுப்பேன். ஏனோ தட்டிப் போயிடும்.

இன்னிக்கு அவசியம் பேசியே ஆகணும்னு போட்டேன். நல்லவேளையா லைன் கிடைச்சிடுத்து. நான் உங்களை தொந்தரவு பண்ணலியே...?''

''இல்லேம்மா... சொல்லுங்கோ...''

''இன்னிக்குக் கார்த்தாலேர்ந்து எனக்குத் தலைவலி. என்னன்னே தெரியலை. எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியலை. கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்னு உட்கார்ந்தேன். அந்த நேரம் பார்த்து என் மகன் மெட்ராஸ்லேர்ந்து போன் பண்ணான். என் பேச்சுல சுரத்து இல்லாததைப் புரிஞ்சுண்டு 'என்னம்மா ஆச்சு?'னு கேட்டான். தலைவலி விஷயத்தைச் சொன்னேன்.
'ஒண்ணும் கவலைப்படாதம்மா... மாமாவோட (அடியேனுடையது) மகா பெரியவா சொற்பொழிவு ஃபைலை அனுப்பறேன். கேளு. எல்லா வலியும் பறந்து ஃப்ரெஷ் ஆயிடுவே'னு சொன்னான். அடுத்த ஒரு சில நிமிஷத்துல அனுப்பி வெச்சான்.

உங்க குரலைக் கேட்டேன் மாமா... மகா பெரியவாளைப் பத்தி உங்களோட உபன்யாசத்தைக் கேட்ட ஒரு சில நிமிஷத்துல என் தலைவலி பறந்து போயிடுச்சு மாமா. என் பையனுக்கும் போன் பண்ணிச் சொன்னேன். அடுத்த முறை சென்னைக்கு வர்றப்ப உங்களை நேர்ல பாக்கணும் மாமா'' என்று மிக உருக்கமாகப் பேசினார்.

''அவஸ்யம் வாங்கோ... வரும்போது முன்கூட்டி போன் பண்ணிட்டு வாங்கோ'' என்றேன்.

மிகவும் சந்தோஷமாக போனில் விடை பெற்றார்.

'காஞ்சியின் கண்கண்ட தெய்வமான மகா பெரியவாளை  உறுதியுடன் எவர் ஒருவர் பற்றிக் கொண்டாலும் அவர்களுக்கு எல்லாமே துச்சம். நோயும் கவலைகளும் க்ஷண நேரத்தில் மறைந்து விடும்' என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்தப் பதிவு!

என்றென்றும் மகானின் நிழலில்...

மகா பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

No comments:

Post a Comment