Friday, June 14, 2019

Srimad Bhagavatam skanda 9 adhyaya 20/21 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 9- அத்தியாயம் 20/21

அத்தியாயம் 2௦
துஷ்யந்தன் புரு வம்சத்தில் தோன்றியவன். சகுந்தலையின் கதை மகாபாரதத்தில் உள்ளது போன்று இங்கு கூறப்படுகிறது. இது காளிதாசனின் அபிக்ஞானசகுந்தலம் நாடகத்தில் இருந்து சிறிது மாறுபட்டது.

அதில் சகுந்தலை கர்பமாக உள்ள போதே துஷ்யந்தனை நாடிச்செல்கிறாள். அவன் சகுந்தலைக்கு ஏற்பட்ட துர்வாசரின் சாபம் காரணமாக அவளை மறந்து விடுகிறான். பின்னர் நினைவு ஏற்பட்டபின் மகனை ஒரு ஆஸ்ரமத்தில் கண்டு அறிந்து பிறகு மனைவியையும் மகனையும் அழைத்துச்செல்கிறான்.

இதில் துஷ்யந்தன் வேட்டைக்காக வனம் சென்ற பொது கண்வரின் ஆஸ்ரமத்தில் சகுந்தலையை சந்தித்து காதல் கொள்கிறான். அவள் சம்மதிக்க காந்தர்வ மணம் செய்துகொள்கிறான். அதன் விளைவாகப் பிறந்த விஷ்ணுவின் அம்சத்தின் பகுதியால் தோன்றிய புத்திரன் சிங்கங்களைக் கட்டிப்போட்டு விளையாடும் பராக்கிரமம் பொருந்தியவனாக இருந்தான்.

பிறகு அவனை அழைத்துக்கொண்டு சகுந்தலை துஷ்யந்தனிடம் செல்ல அவன் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தான். அப்போது அவள் துஷ்யந்தன் மனைவியே என்று கூறிய அசரீரி வாக்குப்படி அவளை ஏற்றுக் கொள்கிறான்.

அவனுக்குப் பிறகு அரசாண்ட அந்தப் புத்திரனான பரதன் பெயர் கொண்டதே பாரத வர்ஷம். 
பரதன் தன் புத்திரர்கள் மீது அதிருப்தி கொண்டு விததன் அல்லது பரத்வாஜனை தத்து எடுத்துக் கொண்டான். விததனுடைய பிள்ளையான மன்யுவின் வம்சமே குரு வம்சம் என்று கூறப்படுகிறது.

அத்தியாயம் 21
மன்யுவின் மகனான சந்க்ருதியின் புதல்வர்கள் குருவும் ரந்தி தேவனும். ரந்தி தேவன் சிறந்த விஷ்ணுபக்தன். அவன் தன் பொருளை எல்லாம் தானம் செய்து உண்ணக்கூட உணவு இல்லாத நிலையை அடைந்தான். 28 நாட்களுக்குப் பின் சிறிது உணவு கிடைக்க அதை அங்கு வந்த பசியால் வாடிய ஒரு அந்தணனுக்கும், நாலாம் வருணத்தவன் ஒருவனுக்கும் , நாய்களுடன் வந்த ஒருவனுக்கும் அதைக் கொடுத்து விட்டான். பிறகு சிறிது தண்ணீர் மட்டுமே இருந்த நிலையில் ஒரு புலையன் தாகம் எனக்கூற அதையும் கொடுத்துவிட்டு, பகவானை எல்லா உயிரிலும் காண்பதால் தேவையுள்ளவர்க்கு உணவு நீர் இவை அளிப்பதால் தன் உயிர் போகுமானாலும் அதைப் பெரும்பேறாகக் கருதுவதாகக் கூறினான்.

பிறகு விஷ்ணு மாயையால் பல வேடங்களில் வந்த மும்மூர்த்திகள் அவனுக்கு காட்சி அளித்தனர். ஆயினும் ரந்தி தேவன் அப்போதும் நாராயணனிடம் மனம் செலுத்தியவனாகவே இருந்ததால் மாயை விலகிற்று. அப்போது அவன் தன்னை முன்போலவே இருப்பதாக உணர்ந்தான். அவனுடைய வம்சத்தில் உதித்தவர் யாவரும் யோகிகளாகவும் விஷ்ணு பக்தர்களாகவும் இருந்தனர்.

No comments:

Post a Comment