Friday, June 14, 2019

Bhakti - just 10 pasurams

பத்துப் பாசுர பலே ஆழ்வார்

அவர் ஒரு இனிய கரும்பு மனிதர். சாது விஷ்ணு பக்தர். அவர் எழுதியது ஒரு பத்தே பத்து பாசுரங்கள் தான். அமலனாதிபிரான் என்று பெயர் பெற்று நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் இடம் பெற்றவை. நிறைய எழுதினால் தான் புகழ் என்பது இல்லை. கடுகளவு ஆனாலும் கடலினும் பெரிது என்று திருக்குறள் போல் சுருக்கமாக இருந்தாலும் படிக்கும்போது அந்த வார்த்தைகளில் இருந்து அளவிடமுடியாத பக்தி ரசம் பொங்கித் ததும்புகிறது. இந்த பத்தே பாசுரங்கள் அவரைப் பாருள்ளவரை பரமனமடியார் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக பீடமேற்றி வைத்து விட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அனைத்தும் அரங்கன் மீதானவை. அவரைப் பற்றி ஒரு சுவாரசியமான கதை இப்போது.

பக்திக்கு முக்கியம் குலம் அல்ல என்று சைவ வைணவ மதங்களில் நிறைய சான்றாக நாயன்மார்களும் ஆழ்வார்களும் உள்ளனர். அவருள் ஒருவர் தான் இந்த திருப்பாணாழ்வார். தாழ்ந்த குலம் என்று சிலரை வேற்றுமைப் படுத்திய காலம் ஒன்று உண்டு முற்காலத்தில். அதில் அந்த அவதிக்கு உள்ளானவர்களில் அவரும் ஒருவர்.
இத்தகையோர் ஆலயங்களில் அனுமதிக்கப் படவில்லை. க்ஷேத்ரங்களில் நுழைய மறுக்கப் பட்டார்கள். நமது சரித்திரங்களில் சில மா மனிதர்களின் இயற்பெயர்கள் விடு பட்டுப் போய் விட்டன. . அவரவர் தொழில், உருவம், ஏதோ ஒரு அனுபவம் இதை வைத்தே பேர் நிலைத்து விட்டது. நன்றாக பாக்களை இயற்றியதால் திரு நாவுக்கரசர், வில்லிப்புத்தூரில் வாழ்ந்ததால் ஒரு வில்லிபுத்தூரார், தலையை ஓலை எழுதும் எழுத்தாணியால் நெருடிக்கொண்டே யோசித்து, தலை புண்ணாகி ஒருவர் சீத்தலை சாத்தனார். ஒரு குருடர் தோளில் அமர்ந்த முடவர் இருவருமே புலவர்கள் என்பதால் பேர் மறந்து போய் வெறும் இரட்டைப் புலவர்கள். இந்த ஆழ்வார் பெயரும் இப்படியே எத்தனையோவில் ஒரு உதாரணம்.
பண்ணிசைக்கும் இசைக் குடும்பத்தில் வந்தவர்கள் 'பாணர்கள்'. இந்த பாணர் ஆழ்ந்த பக்தியை பரமன் பால் வைத்ததால் பாண்+ஆழ்வார் . சிறந்த பக்தியை கொண்டதால் மரியாதையோடு '' திரு'' . மொத்தமாய் திருப் பாணாழ்வார்.

ஆழ்வார் ஸ்ரீ ரங்கத்தில் காவேரிக்கு தெற்குக் கரையில் வாழ்ந்தவர். அங்கிருந்தே சதா சர்வ காலமும் அரங்கன் திருக் கோயில் கோபுரத்தை மட்டுமே தரிசனம் செய்து வாழ்ந்தவர். கோவிலுக்குள் சேர்க்க மாட்டார்களே! ஆனால் அரங்கனை யார் தடுப்பார்கள்? ஆழ்வார் இருந்த திசையை நோக்கியே தெற்குப் பக்கத்தில் இருந்த இலங்கையை அரங்கன் பார்த்துக்கொண்டிருந்தான் என்று கூட சொல்லும்படியாக '' தென் திசை இலங்கை நோக்கியவாறு'' இருந்த பெம்மான் அல்லவா திருவரங்கன்..

எனவே ஆழ்வாரால் அதிகப்படியாக ஆற்றங்கரை வரை மட்டுமே செல்ல முடிந்தது. ஆற்றைக் கடந்து அக்கரையில் ஆலயமோ ஸ்ரீரங்கமோ அவரால் நுழைய முடியாததால் மனம் உருகி பரமனைப் பாடுவார். மனதிலேயே உருவாகி வாய் வரை வந்து வார்த்தையாக காற்றில் கலந்து, பிறகு மனதிலேயே புதைந்து விடும் அவை. காவிரி நதியின் குளிர்ந்த காற்றில் கலந்து மண மலர்கள் வாசம் தோய்ந்து ஆலயத்தில் புகுந்து அரங்கன் செவிக்குள் நுழைந்து அவன் அவருடைய பக்தியை பாசுரங்களாக அனுபவித்தான். .

அவர் இருந்த தெற்குப் பகுதியில் ஒரு வைணவரும் இருந்தார். விஷ்ணு பிரியர். அவர் பெயர் லோக சாரங்க முனிவர். தினமும் அதிகாலை காவிரிக் கரையில் நின்று ஆலயம் தொழுது ஆற்றில் ஸ்நானம் செய்து நித்ய அனுஷ்டானங்கள் எல்லாம் முடித்து அரங்கன் ஆலயத்துக்கு அபிஷேகத்திற்கு காவேரி ஜலம் எடுத்து செல்வது அவர் வழக்கம்.

ஒருநாள் அவ்வாறே வழக்கம்போல் காலையில் ஸ்நானம் முடிக்க, அரங்கன் ஆலயத்துக்கு அபிஷேக ஜலம் எடுக்க வந்த லோக சாரங்கர் அங்கே ஆற்றின் கரையோரமாக நின்றவாறு திருப்பாணாழ்வார் கண்மூடி கை கூப்பி நின்று அரங்கனை வணங்குவது கண்டார்.
''ஏய், யாரப்பா நீ, இங்கிருந்து தூரமாகப் போ. சுவாமிக்கு ஜலம் எடுத்துக் கொண்டு போகும் வழியில் நிற்கிறாயே. ''
வெகு தூரத்தில் ஆழ்வார் நின்றிருந்தாலும் லோக சாரங்கருக்கு அவரை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்ற கவலை வந்து விட்டது. உரக்க இவ்வாறு கத்தினார். ஆனால் திருப்பாணாழ்வார் தான் இந்த உலகத்திலேயே இல்லையே. அவர் தியானத்தில் மூழ்கி இருந்ததால் காதில் எதுவும் விழவில்லை.

என்ன செய்வது என்று யோசித்த லோக சாரங்கர் ஒரு கல்லை எடுத்து ஆழ்வார் மீது எறிந்தார். கூரான அந்த கல் சரியாக ஆழ்வார் நெற்றியில் பட்டு சிதறி ரத்தம் வடிய ஆரம்பித்தது. தியானமும் சிதறியதால் மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்தார் ஆழ்வார்.

அடுத்த நிமிஷமே புரிந்து விட்டது அவருக்கு. தன்னைக் கல்லால் தாக்கியதற்கு கோபம் வரவில்லையே. ''ச்சே என்ன தவறு இழைத்து விட்டேன். என்று தான் ஏதோ பெரும் அபசாரம் செய்துவிட்டதாக உணர்ந்து வேகமாக அங்கிருந்து வெகுதூரம் நகர்ந்து சென்று விட்டார். லோக சாரங்கரும் திருப்தி அடைந்து, வழக்கம் போலவே தன்னுடைய நித்ய கர்மாநுஷ்டானம் எல்லாம் முடித்து ஜலத்தோடு கரை ஏறி அரங்கன் ஆலயத்துக்கு சென்றார்.
எங்கும் எதையும் எப்போதும் அறியும் அரங்கனுக்கு நடந்தது தெரியாமலா இருக்கும்? தன்னைக் காட்டிலும் தன் பக்தர்களைச் சிறந்தவர்களாக கொண்டாடுபவன் அல்லவா?. பக்தவத்சலன் என்ற பெயர் சும்மாவா?
லோக சாரங்கருக்கு அரங்கன் கட்டளை இட்டான்.

''இங்கே நிற்காதே போ உடனே. என் பக்தன் திருப்பாணாழ்வானின் கால்களில் விழுந்து நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேள், அவரை என்னிடம் அழைத்து வா''

லோக சாரங்கர் லோகாயதமாக நடை முறையில் இருந்த வழக்கத்துக்குட்பட்டு தவறு செய்தார் என்பதைத் தவிர அவர் ஞானத்திலோ, பக்தியிலோ குறைந்தவர் இல்லையே. தான் செய்தது பெருந்தவறு என்று பெருமாளே சுட்டிக் காட்டி அதற்கு தக்க பிராயச்சித்தமும் செய்ய ஆணையிட்டவுடன் பதறினார். ஓடினார். தேடினார். எங்கே திருப்பாணாழ்வார்? விசாரித்து பாணர்கள் ஒதுங்கி வாழும் பகுதிக்குள் விரைந்தார். திருப்பாணாழ்வார் வசித்த குடிசையைக் கண்டுபிடித்து வேகமாக உள்ளே நுழைந்தார்.
பகுதி வாழ் மக்கள் தங்கள் கண்களையே நம்பமுடியாமல் பிளந்த வாயுடன் சிலையாக நின்றார்கள். என்ன நடக்கிறது இங்கே? சிறந்த பிராமணோத்தமர் நம் பகுதியில் குடிசைகளிடையேவா??

திருப்பாணாழ்வரை அடையாளம் கண்டு அவர் கால்களில் விழுந்தார் லோக சாரங்கர். திகைத்தார் ஆழ்வார்.

''நான் செய்தது அபசாரம் சுவாமி என்னை மன்னியுங்கள் '' என்று லோக சாரங்கர் தனது காலை வேறு தொட்டதில் உடல் குலுங்கியது ஆழ்வாருக்கு. பேச்சு வரவில்லை, தலை சுற்றியது, கண்கள் இருண்டது. கால்கள் வலுவிழந்தன. நடுங்கிப் போய்விட்டார் ஆழ்வார். எவ்வளவு பெரிய உயர்குல ஞானி, இந்த பகுதிக்குள் வந்து, தன் குடிசையில் நுழைந்து தன் கால்களில் விழுந்து கண்ணீருடன் மன்னிப்பு கேட்பதா?'' இந்த பாபத்தை நான் எங்கே கொண்டு தொலைப்பேன்?''

''சுவாமி என்ன செய்கிறீர்கள் தாங்கள்? எனக்கு பெரும் பாபத்தை அளித்து விட்டீர்களே''. என்றார் ஆழ்வார்.

''அடியேன் தான் சுவாமி பாபி. அரங்கன் உடனே என்னை இங்கே அனுப்பி நான் செய்த காரியத்துக்கு பிராயச்சித்தமாக இதை செய்யச் சொன்னான்'' என்று நடந்ததைக் கூறி அவரைக் கையோடு அரங்கனிடம் கூட்டிச் செல்ல அழைத்தார் லோக சாரங்கர்.

''ஐயோ நான் அந்த புண்ய க்ஷேத்ரத்தில் காலைக் கூட வைக்க அருகதை இல்லாதவனாயிற்றே'' என்று அலறினார் ஆழ்வார். ஸ்ரீரங்கத்தில் நுழையவே மறுத்தார். விடுவாரா லோக சாரங்கர்?

அரங்கன் ஆணையை நிறைவேற்ற, ஆழ்வாரின் விருப்பத்துக்கும் செவி சாய்த்து (அதாவது புண்ய க்ஷேத்ரம் ஸ்ரீ ரங்கத்தில் தனது கால் படக்கூடாது, புனிதம் பாதிக்கப் படக்கூடாதே) இரண்டையும் நிறைவேற்ற ஆழ்வாரை தனது தோளிலேயே வாகனமாக அவரைச் சுமந்து ஆலயம் அடைந்தார் லோக சாரங்கர். இதனாலேயே திருப்பாணாழ்வாருக்கு ''முனி வாஹனர்'' என்றும் ஒரு பெயர் வைணவ சம்பிரதாயத்தில் உண்டு.

தனது மனத்திலேயே இது வரை கண்டு களித்த அரங்கனை ஆதி சேஷ நாக சயனனாக ஆழ்வார் கண் குளிர கண்டார். கண்ணை இமைக்க கூட விரும்பவில்லை. அந்த நேரத்தில் அவனைக் காண முடியாமல் போகுமே.கடல் மடையாக காவேரி வெள்ளத்தையும் விட வேகமாக நெஞ்சில் பக்தி பரவசம் பெருகி பாசுரமாக வெளி வந்தது தான் அமலனாதி பிரான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இந்த சிறிய காவியத்தைப் படிக்கும்போது முத்தாய்ப்பு வைத்தது போல் கடைசி பத்தாவது பாசுரத்தின் முடிவில் அருமையான ஒரு வாசகம் பொன்னெழுத்தில் பொறித்து வைத்திருக்கிறார் ஆழ்வார். ''என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே'' இதற்கு அர்த்தம் வேறு தேவையா? வேறு யாருக்காவது இப்படி நினைக்கவாவது தோன்றியதா, தோன்றுமா'?''

பத்து பாசுரமும் அமிர்தம். முதல் பாசுரத்தில் விசேஷமாக அரங்கனைப் பாடவில்லை. திருமலையப்பனை. விரையார் பொழில் வேங்கடவனை, நினைந்து பாடுகிறார். வார்த்தைகள் விமரிசையாக விழுகின்றன. மற்றதெல்லாம் அரங்கத்தம்மான் மீதே. மூன்றாவதில் என்னவோ தெரியவில்லை வேங்கடவனில் ஆரம்பித்து அரங்கனில் முடிக்கிறார். நாராயணனை அரங்கனாகப் பார்த்தால் என்ன, வேங்கடவனாகப் பார்த்தால் என்ன, நின்றால் என்ன சயனித்தால் என்ன. இருவரும் ஒருவர் தானே. நாமே நிற்கிறோம், அமர்கிறோம், படுக்கிறோம். அவர் செய்யக்கூடாதா என்ன?

அரங்கனைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்றால் வேறே எந்த கோவிலுக்கும் போகமாட்டேன் கண்ணை மூடிக்கொள்வேன் என்றா அர்த்தம்? இப்படியும் கூறலாமே, அரங்கா உன்னை இன்று என் வாழ்நாளில் முதல் முறையாக கண்ணார, கண் குளிர கண்டேனே. உன்னை அப்படியே கண்ணில் இருத்தி வைத்துக் கொண்டுவிட்டேனே. கண் நிறைந்து நீ இருந்தால் வேறு எதை நான் பார்ப்பது. பார்க்கும் எல்லாமே நீ யாக இருந்தால் மற்றவை எதையும் பார்க்க முடியாதே!,

சுத்தமான பக்திக்கு இலக்கணம் வேண்டாம். பக்தி எல்லாவற்றையும் நிறைவு செய்துவிடும். திருப்பாணாழ்வார் தமிழ் எளிமையாக தெள்ளிய நீரோடையாக செல்கிறது. தங்கு தடையில்லாமல் மனதில் குடி கொள்கிறது. திருமாலின் கமல பாதத்திலிருந்து துவங்கி திருப்பாணாழ்வார் மற்ற அங்கங்களின் அழகையும் அனுபவிக்கிறார். பாதம், சிவந்த ஆடை, உந்தி, உதரம், மார்பு, கழுத்து, வாய், பெரிய கண்கள், நீலமேனி ("நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே") இவைகள் அனைத்தும் தன்னை ஆட்கொண்டதாக மிக நெருக்கமான கடவுளாகத் திருமாலைப் பாடுகிறார். 'நீண் மதில் அரங்கம்' என்கிற சொல் மூலம் அவர் பார்த்த ஸ்ரீ ரங்கம் எப்படி இருந்தது என்று விவரிக்கிறார். திருவரங்கம் கோயிலில் நீண்ட மதில்கள் கட்டிய பிறகு வாழ்ந்தவர் என்பதைத் தவிர, பத்து பாடல்களே அவர் கண்ட திருவரங்கத்தையும், அவரது பரி பூரண பக்தியையும் அடையாளம் காட்டுகிறது.

1.அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன்நீள்மதிலன ரங்கத் தம்மான் திருக்
கமல பாதம் வந்தென் கண்ணினுள்ளன ஒக்கின்றதே.

''ஆஹா இந்த இயற்கை சூழ் பொழில் விண்ணவர் கோன் திருவேங்கட மலையானின் கமல பாதங்கள் எப்போது என் கண்ணில் பட்டதோ அவை கண்ணை விட்டு அகலவில்லையே''

2 .உவந்த உள்ளத்தனா யுலகமளந் தண்டமுற 
நிவந்த நீள் முடியான், அன்று நேர்ந்த நிசாசரரை 
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான்அரைச் 
சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென சிந்தனையே.

''சிவந்த ஆடை கண்ணைப் பறிக்கிறதே. உலகமளந்தவா, ராமனாகி அரக்கர்களை அழித்தவா, நீயே திருவரங்கத்தானாகி உன் சிவந்த ஆடையிலிருந்து என் சிந்தனையை வேறெங்கும் செல்லாது வைப்பவனே,

3 மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் 
சந்தி செய்ய நின்றான் அரங்கத் தரவின் அணையான் 
அந்தி போல் நிரத்தடையுமதன் மேல் அயனைப் படைத்த தோரெழில் 
உந்தி மேலதன்றோ அடிஎனுள்ளதின்னுயிரே,

''அரங்கா, நீயே வட வேங்கடவன், அந்தி மாலை நிறத்தில் உன் ஆடையும், வயிறும் , ஆஹா அந்த வயிறு தானே படைக்கும் தொழில் பிரமனையே படைத்தது, அதன் மேல் வைத்த என் கண்ணை அகற்ற முடியவில்லையே,''

4. சதுரமாமதில் சூழ் இலங்கைக் கிறைவன் தலைப் பத்து 
உதிர வோட்டி , ஓர் வெங்கணை உய்த்தவன் ஒத வண்ணன் 
மதுர மா வாண்டு பாட மாமயில் ஆட அ ரங்கத்தம்மான்,
திருவயிற்று தர பந்தன மென் நுள்ளத்துள் நின்று லகாகின்றதே.''

''ரங்கநாதா, பாம்பணை மேல் துயில் கொள்பவனே, ஞாபகம் வருகிறது. இலங்கையில் பத்து தலை ராவணனை கோதண்டத்தின் சரங்களால் கொன்றவனே, உன் வயிற்றில் உடுத்தியுள்ள ஆடைநிறம் அந்த ராவணன் சிந்திய செந்நிற ரத்தத்தை ஒத்து இருக்கிறதே. என்னுள்ளத்தில் பதிந்த அந்நிறத்தை அகற்றவே முடியாதே''
.
5"பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன் 
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன்கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே"

''என்ன ஆச்சர்யம், அரங்கநாதா, உன்னை தரிசித்த அக்கணமே என் பழவினைகள் அனைத்தும் நீங்கி விட்டது மட்டுமா. என்னையே குத்தகை எடுத்து விட்டானே. , நான் என்ன தவம் செய்தேனோ, இப்பிறவியில் உன்னை இங்கே தரிசிக்க, உன் மார்பில் திரு. என் நெஞ்சிலோ நீங்கள் இருவருமே..வேறொன் றறியேன் பராபரமே, பெரிய தவம் ஒன்றுமே தேவையில்லையே அரங்கனை அடைய. முழு மனது ஒன்றே போதுமே.''

6.துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய 
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய வப்பன் 
அண்டரண்ட பகிரன்டத்தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் 
உண்ட கண்டன் கண் டீர் அடியேனை உய்யக் கொண்டதே.

''அரங்கா, நீ சிவன் துயர் தீர்த்தவன், ஆண்ட பகிரண்டம் அனைத்தையும் உண்டு வாயில் யசோதைக்கு காட்டியவன். உன்னை அடைந்த என்னை, கண்டவுடனேயே அப்படியே ஆட்கொண்டு விட்டாயே''
.
7.கையினார் சுரி சங்கண லாழியர் நீள்வரை போல் 
மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம் 
ஐயனார் அணியரங்கனார் அரவின் அணை மிசை மேய மாயனார்
செய்யவா யையோ!என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!

''ஆஹா, என்ன சொல்வேன், ஐயோ வார்த்தை வரவில்லையே, ஆதிசெஷன்மேல் பள்ளிகொண்ட ரங்கநாதா, உன் செவ்வாய்... அதில் தானே பாஞ்சஜன்யத்தை வைத்து சப்தித்தாய். கம் மென்று துளசி மனம் கமிழ என் மனமெல்லாம் உன்னையே நாடி நிற்கிறதே. இனி எனக்கு என்று ஒரு தனியாக ஒரு மனமில்லை. அதை நீ எடுத்துக் கொண்டுவிட்டாயே.''

8.பரியன் ஆகி வந்த அவுண நுடல்கீந்த அமரர்க்கு 
அரிய ஆதி பிரான்அரங்கத்தமலன் முகத்து 
கரிய வாகிப் புடைப் பாரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே''

''ஆமாம். நீ தான் அந்த நரசிம்ஹன். இரணியனை வாதம் செய்தவன். பெரிய வாய், செங்கண், என்னை அந்த கண்கள் மதி மயங்கச் செய்து விட்டனவே. இனி நான் இல்லை. உன்னில் ஒரு துகள்.''

9 ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் 
ஞால மேழு முண்டான் அரங்கத் தரவின் அணை யான் 
கோலமாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில் 
நீல மேனி யையோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே!

''மார்கண்டேய ரிஷி சொன்ன பிரளய காலத்தில் நீ ஒரு சிறு குழந்தையாக, ஆலிலை மேல் கால் விரல் சூப்பி, ''வட பத்ர சாயி'யாக, பிரபஞ்சம் துளிர்க்க செய்தவன். இந்த உன் அழகுக்கு அழகா, முத்துமாலையும், மணி ஆரங்களும், நீல மேனியும். அடடா என்ன சொல்வேன், எப்படி சொல்வேன். என் நெஞ்சை விட்டகல வில்லையே.''

10."கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே."

''அடே வெண்ணை திருடா, வாயில் வெண்ணை உன்னை காட்டிக்கொடுத்துவிட்டதே, தேவாதி தேவா, என் அமுதமே, நீல மெகா ஸ்யாமளா, உன் அழகை பருகிய என் கண்கள் இனி வேறெதையுமே காணபோவதில்லை, முடியாதே, என் கண்ணை உன்னிடமிருந்து எடுத்தால் தானே அதெல்லாம்''...

.
இந்தக் கடைசி பாசுரம் பாடிய திருப்பாணாழ்வார் திரும்பி லோகசாரங்கர் தோள் மீது ஏறி திரும்பவில்லை. அங்கேயே அப்போதே அரங்கனோடு இரண்டறக் கலந்தார்.

No comments:

Post a Comment