Monday, June 3, 2019

Srimad Bhagavatam skanda 9 adhyaya 16 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 9- அத்தியாயம் 16

அத்தியாயம் 16
ஒரு சமயம் ஜமதக்னியின் மனைவியான ரேணுகா கணவரின் ஹோமத்திற்காக கங்கையிலிருந்து நீர் எடுக்கையில் ஒரு கந்தர்வனைக் கண்டு அவன் அழகில் ஈடுபட்டதால் நீர் எடுக்க நேரம் ஆகிவிட்டது. பிறகு ஆஸ்ரமத்தை அடைந்து பயத்துடன் நின்றவளைக் கண்டு ஜமதக்னி தன் தவவலிமையால் நடந்ததை அறிந்தார். அதனால் சினம் கொண்ட அவர் தன் பிள்ளைகளை அவள் தலையைக் கொய்யுமாறு ஆணையிட்டார். ஆனால் அவர்கள் ஒப்பவில்லை.

பிறகு தாயுடன் சகோதரர்களையும் சேர்த்துகொல்லும்படி ஆணையிடப்பட்ட பரசுராமர் தந்தையின் தவவலிமையை உணர்ந்தவராய் அவ்வாறே செய்து முடித்தார். பிறகு அதனால் திருப்தியடைந்த முனிவர் பரசுராமரை என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவர் தாயும் சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்றும் அவர்கள் நடந்ததை மறந்துவிடவேண்டும் என்றும் கூறினார். அவ்வாறே அவர்கள் தூங்கி எழுந்தவர்கள் போல மீண்டும் உயிர் பெற்றனர்.

பின்னொரு சமயம் பரசுராமரும் அவர் சகோதரர்களும் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே சென்றிருந்தனர். அப்போது தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கார்த்தவீரியனுடைய குமாரர்கள் அங்கு வந்து ஜமதக்னி முனிவரைக் கொன்று பசுவைக் கவர்ந்து சென்றார்கள்

. ரேணுகா பரசுராமரைக் கூவி அழைக்க அங்கு வந்த அவர் மிகுந்த கோபத்துடன் மாஹிஷ்மதி நகரம் சென்று அவர்களைக் கொன்று பின்னர் அதர்ம வழியில் சென்றதால் க்ஷத்திரியர்களிடம் பகைமை கொண்டு 21 முறை பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாமல் செய்து அவர்கள் உதிரத்தைக்கொண்டு ஸ்யமந்தக பஞ்சகத்தில் ஒன்பது மடுவை உருவாக்கினார்.

பிறகு அவர் தந்தையின் தலையை உடலோடு பொருத்தி பகவானை பிரார்த்திக்க ஜமதக்னி தன் தேகத்தை மீண்டும் அடைந்து ரிஷிமண்டலத்தில் ஏழாவது ரிஷியானார்.

இதைக் கூறிய சுகர் பரசுராமர் இப்போதும் மகேந்திர பர்வதத்தில் சாந்தம் அடைந்தவராக விளங்குகிறார் என்று கூறினார்.

No comments:

Post a Comment