Monday, June 3, 2019

Saranagati

8 5 19

ஸ்ரீமதே லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பரப்ரம்மணே நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:

மோக்ஷத்தில் இச்சை உள்ளவர்கள், பிராட்டியோடு கூடிய எம்பெருமானிடத்தில், சாஸ்த்திர விதிப்படி சரணாகதியை அனுஷ்டிக்க வேண்டுவதே!

ஸர்வேஸ்வரனான கண்ணன், பகவத் கீதையில், மோக்ஷத்திற்கு உபாயமாக சரணாகதி அனுஷ்டானத்தை விதிக்கவில்லை என்கிற கருத்து வேதாந்தங்களோடும் ஸ்ரீராமானுஜர் அருளிய, பகவத் கீதை வ்யாக்யானமாகிய கீதா பாஷ்யம் போன்ற ஸித்தாந்த க்ரந்தங்களோடும் முரண்படும்.

1. ஸர்வேஸ்வரனான கண்ணன், அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசிக்கும் போது, 18ம் அத்யாயம் 66 வது ஸ்லோகத்தில் -

'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ. அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயஇஷ்யாமி மாஷுச:'

அதாவது,

'மோக்ஷ ஸாதனமான அனைத்து நிவ்ருத்தி தர்மங்களையும் (பக்தி யோகமும் அதற்கு அங்கங்களான கர்ம யோகம் மற்றும் ஞான யோகங்களையும்) விட்டு என் ஒருவனையே சரணமாக பற்று. நான் உன்னை மோக்ஷத்திற்கு விரோதியான பாபங்களிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கிறேன். சோகப் படாதே'  

என்கிறான் கண்ணன் அர்ஜுனனிடம்.

இதற்கு, அர்த்தத்தை நிர்வஹிக்கும் போது, 

'மோக்ஷ ஸாதனமான அனைத்து நிவ்ருத்தி தர்மங்களையும் விட்டு என் ஒருவனையே சரணமாக பற்ற தக்கவன் ஸர்வேஸ்வரன் என அறிந்து போக வேண்டும்' 

எனக் கண்ணன் கூறுவதாக, சில வைணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

அதனால், சரணாகதி அனுஷ்டானம் செய்ய வேண்டுவதில்லை எனிறாயிற்று என கூறுவர். 

இக்கருத்து, ஸ்ரீராமானுஜரின் கீதா பாஷ்யம் மற்றும் ஸகல சாஸ்த்திரங்களோடும் முரண்படும்.

2. 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ', 

அதாவது 

'என் ஒருவனையே சரணமாகப் பற்று' 

என்று கண்ணன் உரைக்கிறான். 

இந்த வரிக்கு ஸ்ரீராமானுஜர் போன்ற நம் பூர்வாசார்யர்கள் அருளும் விளக்கம் கலக்கத்தைப் போக்கும்.

3. 'மாம்' 

என்று சொல்லி ஸர்வேஸ்வரனான கண்ணன் தன்னுடைய திருமேனியை தொட்டுக் காட்டுகிறான். 

இதனால், ஸம்ஸாரி ஜீவர்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வல்ல, அவனிடம் உள்ள, மூன்று ஒப்புயர்வற்ற குணங்கள் வெளிப் படுகின்றன:

# வாத்ஸல்யம் - தன் அடியார்களின் குற்றத்தைப் பாராமல் ஏற்றுக் கொள்வது

# ஸௌசீல்யம் - ஸர்வேஸ்வரனான கண்ணன், பாப புண்ய கர்மவஸ்யனான அர்ஜுன ன் போன்றவர்களுடன் கலந்து பழகுதல்; அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் பணி புரிதல்.

# ஸௌலப்யம் - மஹா யோகிகளுக்கும் எளிதில் கிடைக்கப் பெறாத தன் விஸ்வரூபத்தை, தனக்கு ப்ரியமான அர்ஜுனனின் ஆசைக்கு இணங்கி காட்டியது.

4. 'ஏகம்' 

என்ற சொல்லினால் சாஸ்த்ரத்தில் விதித்த  பக்தி யோகத்தைச் செய்ய தகுதி அற்ற ஜீவர்கள் விஷயத்தில், சாஸ்த்திர முறைப்படி செய்ய வேண்டிய 

'சரணாகதி' 

அன்றிக்கு வேறு எதையும் மோக்ஷத்திற்காக எதிர் பாராமல் இருத்தலைக் கூறுகிறது.

5. இந்த 'ஏகம்' 

என்ற சொல்லில் முக்கியமாக கவனிக்க வேண்டியது:

# ஸர்வேஸ்வரனான கண்ணனே மோக்ஷத்திற்கு வழியாக இருக்கிறான்.

# சரணாகதி அனுஷ்டானத்திற்கு சாஸ்த்திரத்தில் விதித்த ஐந்து அங்கங்களைத் தவிர  வேறு ஒரு செயலையும் எதிர்பார்க்காதவன்.

# சரணாகதியை ஒரே முறை அனுஷ்டித்த பிறகு, வேறொரு செயலையும் இந்த ஜீவர்களிடம் எதிர்பாராமல், அவர்கள் கேட்ட காலத்தில், தானே தனித்து நின்று மோக்ஷத்தை அடைவிக்கிறவன்.

6. 'சரணம் வ்ரஜ' 

என்ற சொற்களினால்  ஐந்து அங்கங்களோடு செய்ய வேண்டிய சரணாகதி அனுஷ்டானம் கூறப் படுகிறது ஏனெனில் பல சாஸ்த்திரங்கள் அவ்வாறு கூறுவதால்.

7. இந்த 'சரணம் வ்ரஜ' 

என்ற சொல்லில் முக்கியமாக கவனிக்க வேண்டியது:

# ஜீவர்கள், ஸர்வேஸ்வரனான கண்ணன் விஷயத்தில், பரதந்த்ரர்கள் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. ஸர்வேஸ்வரனான கண்ணனால் கொடுக்கப் பட்ட ஸ்வதந்தரம் ஜீவர்களுக்கு இருப்பதினால், சாஸ்தரங்கள் ஜீவர்களை பரதந்தரன் (அதாவது பூரண ஸ்வதந்தரம் அற்றவன்) என்று கூறுகிறது.

# ஞானமுள்ள ஜீவர்களின் பரதந்தரம்,  ஸர்வேஸ்வரனான கண்ணனின் ஆணைப்படி நடந்து போவதேயாகும். எதுவும் செய்யாமல் இருப்பது என கொள்ளலாகாது ஏன் என்றால் சாஸ்த்ரங்கள் ஜீவர்களுக்கு செயல் புரியும் தன்மை உண்டென்றும், அதன் காரணமாக (மோக்ஷத்தை விரும்புகிறவர்கள்) சரணாகதி போன்ற செயல்களைச் செய்ய சொல்லுகின்றன.

# ஆக, பக்தி யோகம் செய்ய ஞான சக்தி அற்றவன் (மோக்ஷத்தை விரும்புகிறவன்), சரணாகதியை சாஸ்த்ர விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை கண்ணன் வலியுருத்துகிறான்.

8. 'சரணாகதி' 

என்ற ஒரு செயல், தானே பலன் அளிக்க வல்லது அல்ல. 

'சரணாகதி' அனுஷ்டானத்தில், 

ஸர்வேஸ்வரனான கண்ணன், மனம் இரங்கி மோக்ஷத்திற்கு தடையான பாப புண்ய கர்மாக்களை விலக்குகிறான் என்பதே தாத்பர்யம். 

ஆக, இந்த சரணாகதி அனுஷ்டானத்தையும், முன்பு கண்ணன் விளக்கியது போல், ஸாத்வீக த்யாகத்துடன் செய்து போக வேண்டும்.

9. ஒரு வணிக நிறுவனத்தில் ஒரு ஊழியர் தனக்கு ஏற்பட்ட பெரியதொரு மருத்துவ செலவிற்காக அந்த நிறுவன சொந்தக்காரரை அணுகி ஒரு மனிதாபிமான கோரிக்கையை வைக்கிறார். அந்த நிறுவன கொள்கைப்படி இந்த தொகை இந்த ஊழியருக்கு பெற தகுதி இல்லாவிடினும், இவனுடைய போக்கற்ற நிலையைக் கண்டு மனம் இறங்கி அந்த நிறுவன சொந்தக்காரர் அந்த தொகை இந்த ஊழியருக்கு தருவதாக ஒத்துக் கொள்கிறார். அதற்காக ஒரு விண்ணப்ப கடிதம் எழுதி கொடுக்குமாறு இந்த ஊழியரைப் பணிக்கிறார். ஆக, இந்த ஊழியருக்கு பண உதவி கிடைக்க முக்கிய காரணம் அந்த நிறுவன சொந்தக்காரரின் கருணையே என்றும் இந்த ஊழியர் கொடுக்கும் விண்ணப்ப கடிதம் ஒரு சாமான்ய காரணம் என்பதை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

அதே போல் ஸம்ஸாரி ஜீவர்களின் போக்கற்ற நிலையைக் கண்டு ஸர்வேஸ்வரனான கண்ணன் மனம் இறங்கி, மோக்ஷத்தை அளிப்பதற்காக, சரணாகதி அனுஷ்டானம் என்ற ஒரு விண்ணப்பத்தை மோக்ஷத்தை விரும்பும் ஜீவர்களிடம் கோருகிறான். 

அதனால் மோக்ஷத்தை பெற முக்கிய காரணம் ஸர்வேஸ்வரனான கண்ணனின் கருணையே; நாம் செய்யும் சரணாகதி அனுஷ்டானம் ஒரு சாமான்ய காரணம் என்பதை உணர வேண்டும்.

10. சாஸ்த்திரங்களில் விதிக்கப் பட்ட சரணாகதி அனுஷ்டானத்தின் தேவையையும், அங்கங்களோடு அனுஷ்டிக்க வேண்டிய முறையையும், ஸாத்வீக த்யாகத்தின் தேவையையும், அனுஷ்டானமின்றி மோக்ஷ பலன் பெற முடியாது என்கிற சாஸ்த்திர வசனங்களையும் முன் பதிவுகளில் கண்டோம். அதற்கு விரோதமாக பகவத் கீதைக்கு அர்த்தம் சொல்லுவது, சரியாகாது அல்லவா?

11. ஆக, பல வித சாஸ்த்திரங்களோடு முரண்படும் வகையில், ஸர்வேஸ்வரனான கண்ணன், சரணாகதி அனுஷ்டானம் தேவையில்லை என, தான் அருளிய பகவத் கீதையில் கூறுகிறான் என்றால், சாஸ்த்திரங்களுக்கு உண்டான ப்ராமாண்யம் (ஆதார தன்மை) போய் விடாதா? 

கண்ணனே சாஸத்திரம் தான் நம்பத் தகுந்த ஆதாரம் என கீதையில் (16-24ல் தஸ்மாத் சாஸ்த்திரம் ப்ரமாணம் தே…) அருளியுள்ளானே! இதை கவனத்தில் கொள்ள வேண்டாமா?

12. இந்த சரணாகதி அனுஷ்டானத்தை, யாராக இருந்தாலும், ஸ்ரீதேசிக ஸம்ப்ரதாய வழி வந்த ஒரு ஆசார்யனை முன்னிட்டு, அர்ச்சாவதார திவ்ய தம்பதிகள் முன்பு, செய்து போக வேண்டும், எனபது ப்ரமாணங்கள் கூறும் அறிவுரை.

13. சாஸ்த்ரங்கள் கூறும் விஷயங்களிலும் மற்றும் அவைகளை அனுஸரித்து பகவத் ராமானுஜர் அருளிச் செய்த க்ரந்தங்களிலும் தெளிவான ஞானம் இல்லாமையே, உபநிஷத்துக்கு விரோதமாக, ஸ்ரீராமானுஜர் வழி வந்த நம்  பூர்வாசார்யர்களின் வரிகளையும், விபரீதமாக புரிந்து கொள்வதற்கு  காரணமாகிறது.

14. இம்மாதிரியான சந்தேகங்களை விலக்க, ஸ்வாமி ஸ்ரீதேசிகன், தான் அருளிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயசாரத்தில், மோக்ஷத்திற்கான சரணாகதி அனுஷ்டான தகுதிகளைப் பற்றியும் மற்றும் அனுஷ்டிக்க வேண்டிய முறையையும் தெளிவாக, ப்ரமாணங்களுடன், சாஸ்த்தர விதிகளை பின்பற்றி, விளக்கி அருளியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

8.5.2019
அடியேன்

No comments:

Post a Comment