Friday, May 31, 2019

Advice for the retired- Periyavaa

ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்"

( ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும் அனுபவிக்கவும் முடியாது..... அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது.காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் வாழ்க்கை முறை."  ( மனிதநேயத்தோடு எல்லாவற்றையும் பெரியவா பார்க்கிறார் என்பதற்கு இது ஒரு மகத்தான உதாரணம்) 

(படித்தால் புல்லரிக்கும்)

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு பக்தர்....தினசரி மடத்திற்கு வரக்கூடியவர். அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில் கவலை ரேகைகள். இதைக் கவனித்த பெரியவா....

"ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக் கேட்கிறார்.

"ரிடையர் ஆன பிறகு நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர்.

"ஏண்டா?" பெரியவா கேட்கிறார்.

"யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை... கவனிப்பும் சரி இல்லை. காப்பி  கூட சமயத்தில் கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே  போனார்.

அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான்.

"உத்தியோகத்தில் இருக்கும் போதே இறந்திருக்கலாம் போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று முடித்தார் அம்முதியவர்.

பெரியவா அமைதியாகச் சொன்னார்....

"இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லையா? காலையில் எல்லாருக்கும் முன் எழுந்து, குளித்துவிட்டு ஜெபம் செய்...அதைப் பார்க்கும் குடும்பத்தினர் உனக்கு பயபக்தியோடு காப்பி கொண்டு வந்து கொடுப்பார்கள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்.... பேரன்களுக்கு படிப்பு சொல்லிக் கொடு... அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போ.... அதோடு அவர்கள் இதைச் செய்ய வேண்டும்...... அதைச் செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்காதே.... எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.... இல்லையென்றால் எல்லாமே தானாகவே நடக்கும்"

வேதனையோடு வந்தவர்க்கு தன்னிடம் உள்ள குறையும் தெரிந்தது... அடுத்தபடியாக தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

" நீ மனதைத் தெளிவாக வைத்துக் கொள்... பகவானை நினைத்துக் கொண்டே இரு... இது வேண்டும்... அது வேண்டும் என்று ஆசைப்படாதே .. நீ வளர்த்த குழந்தைகள் உன்னை நிச்சயமாகக் கவனிப்பார்கள்" என்றார்.

வயோதிகத்தில் எல்லாருக்கும் வரும் மனவியாதி இது..

ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும் அனுபவிக்கவும் முடியாது..... அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது... காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் வாழ்க்கை முறை."

பெரியவா உபதேசம் செய்து முடித்தவுடன் அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக. பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை மகனுடன் அனுப்பி வைத்தார்.

மனிதநேயத்தோடு எல்லாவற்றையும் பார்க்கிறார் என்பதற்கு இது ஒரு மகத்தான உதாரணமல்லவா.

No comments:

Post a Comment