Friday, May 24, 2019

Vishnu Sahasranama 381to 391 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்-38

381., கரணம், 382., காரணம், 383. கர்த்தா
ஒரு பொருள் உண்டாக வேண்டுமானால், அதற்கு மூன்று அவசியம்., உபாதான காரணம் , (MATERIAL cause) உதாரணம் , பானை செய்ய மண் அவசியம்.
நிமித்தகாரணம், ( instrumental cause) கருவி, குயவனின் சக்கரம் போல. 
கர்த்தா- செய்பவன்- குயவன் உதாரணம்.

இங்கு இந்த உலகத்தை சிருஷ்டித்தது பகவான் ஆதலால் அவன் கர்த்தாவாகிறான். எதைக்கொண்டு சிருஷ்டித்தான் என்றால் , உபநிஷத் சொல்லுகிறது, 'ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்.' ஆதியில் பிரம்மம் மட்டுமே இருந்தது. அதைத்தவிர வேறொன்று இல்லை என்று.
அப்படியானால் அந்த பிரம்மமானது தன்னைக் கொண்டே சிருஷ்டித்து இருக்க வேண்டும் அல்லவா? இதை உபநிஷத்தும் உறுதி செய்கிறது." தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய,' அது சங்கல்பித்தது நான் பலவாக ஆவேன் என்று. அதனால் பகவானேதான் உபாதான காரணம் ஆகிறான்.

எதன் உதவியால் சிருஷ்டித்தான் என்றால் வேறு ஒன்றுமே இல்லையே குயவனின் சக்கரம் போல. அதனால் அவனே நிமித்த காரணமும் ஆகிறான்.
தானே தன்னிடத்தில் இருந்தே சிருஷ்டித்தான் என்று ஆகிறது. ' தானே உலகெலாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வானே .' திருவாய்மொழி.

384. விகர்த்தா-விசேஷமான கர்த்தா. விசித்திரமான உலகைப் படைத்ததினால்.
விக்ருத என்றால் மாறுவது. விகர்த்தா என்றால் தானே உலகாக மாறிவிட்டவன் என்று பொருள். ஆனால் உண்மையில் அவன் மாறுவதில்லை. நம் கண்களுக்கு அவன் உலகாகக் காணப்படுகிறான். பிரபஞ்சம் அவனது சரீரம் அவனே சரீரி. நாம் சரீரத்தைக் காண்கிறோம் சரீரியான அவனைக் காண்பதில்லை. பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் என்று திருமூலர் கூறியபடி.

385. கஹன: -கஹன என்றால் அடைவதற்கும் அறிவதற்கும் அறியது என்று பொருள்.கீதையில் 'நாஹம் பிரகாச: ஸர்வஸ்ய யோக மாயா ஸமாவ்ருத: ' என்கிறார். கிருஷ்ணாவதாரத்தில் இருந்தது போல மாயை அவர் நிஜ ஸ்வரூபத்தை மறைக்கிறது. கிருஷ்ணனுடைய திருவிளையாடல்களைக் கண்ட பின்னும் யசோதை முதலியவர்கள் அவர் யார் என்று அறிந்துகொள்ளவில்லையே.

386.குஹ: -மறைந்திருப்பவன். உபநிஷத் கூறுகிறது,' பச்யத்ஸுஇஹைவ நிஹிதம் குஹாயாம்." இருதயக் குகைக்குள் மறைந்திருப்பவன், யோகிகளுக்குத் தெரிபவன்.

387. வ்யவஸாய: - ஸ்திரமானவன். ஞானஸ்வரூபி. 'வ்யவசாயாத்மிகா புத்தி: ஏகேவ குருநந்தன,' (ப.கீ 2.41), உறுதியான புத்தி ஒருமுகப்பட்டது.

388. வ்யவஸ்தான: -அஸ்மின் வ்யவஸ்திதி: ஸர்வஸ்ய இதி, கலமும் அவனிடத்தில் சரியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. எல்லா வரையறைகளுக்கும் ஆதார்மானவர். திக்பாலரின் அதிகாரங்கள்,படைப்பு வகைகள் ,வர்ணாஸ்ரம தர்மங்கள் எல்லாவற்றையும் வரையறைப்பவர்.

389 . ஸம்ஸ்தான: -ஸர்வம் ஸமாப்யதே அஸ்மின் இதி, எல்லாம் அவரிடம் ஒடுங்குகின்றது. உபநிஷத் வாக்கியம், 'பராகாஷ்டா, பராகதி:,' அனைத்திற்கும் எல்லையாகவும் அடையும் ஸ்தானமாகவும் இருப்பவர். 'யத்கத்வா ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம,'(ப. கீ. 8.21)
சிறந்த ஸ்தானம் உடையவர். ஸமீசீனம் ஸ்தானம் அஸ்ய இதி.

390 . ஸ்தானத: -எல்லாருக்கும் தகுந்த பதவியை அளிப்பவர். கர்ம பல தாதா. அவரவர் கர்ம பலனை அளிப்பவர். கிரகங்களையும் நக்ஷத்திரங்களையும் அந்தந்த இடத்தில் நிலைநிறுத்துபவர்.

391. த்ருவ: - நிலையானவர். நிலையானவர் பகவான் மட்டுமே. த்ரு என்றால் நிலையான என்று பொருள். சகடத்தின் அச்சுபோல அவரைச்சுற்றி உலகம் சுழல்கிறது. ஆனாலும் அச்சு சக்கரத்தினின்று வேறாக இருப்பதைப்போல் அவர் வேறானவர் அல்லர்.

ஈஸ்வர: ஸர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுன திஷ்டதி
ப்ராமயன் ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா ( ப. கீ. 18.61)
இறைவன் எல்லா உயிர்களின் ஹ்ருதயத்திலும் இருந்து கொண்டு மாயையினால் சக்கரத்தில் சுழல்வதுபோலச் செய்கிறார்.

.அடுத்த பதினாறு நாமங்கள் ராமாவதாரத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.

  

No comments:

Post a Comment