Friday, May 24, 2019

Srimad Bhagavatam skanda 9 adhyaya 13/14 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 9 - அத்தியாயம் 13/14

அத்தியாயம் 13/14
இக்ஷ்வாகுவின் இன்னொரு புதல்வன் நிமி. அவன் யாகம் செய்ய எண்ணி வசிஷ்டரைக் கேட்க அவர் இந்திரனின் யாகத்திற்கு புரோஹிதராகப் போவதால் அவனைப் பொறுத்திருக்குமாறு கூறினார்.. அதற்கு அவன் ஆயுளின் நிலையின்மையை எண்ணி வேறு புரோஹிதர்களைக் கொண்டு யாகத்தை செய்தான் .

வசிஷ்டர் கோபம் கொண்டு அவன் தேகம் விழட்டும் என்று சாபமிட்டார். யாகம் செய்வித்த ரிஷிகள் அவன் உடலைப் பாதுகாத்து யாகத்தை முடித்தனர். அதன் முடிவில் வந்த தேவர்களிடம் நிமி உயிர் பெற வேண்டினர். அத்யாத்ம ஸ்வரூபத்தில் நிலை பெற்ற நிமி அழியும் உடலில் இருந்து விடுதலை வேண்ட, தேவர்கள் உடல் இன்றியே எல்லா உயிர்களிலும் கண்ணின் இமைகளில் வசிக்குமாறு வரம் தந்தனர். அவன் கண் இமைகள் மூடித்திறக்கும் செயலுக்கு ஆதாரமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

அரசன் இல்லாததால் ரிஷிகள் அவன் உடலைக் கடைய அதிலிருந்து தோன்றியவன் வைதேஹ( தேகத்தில் இருந்து தோன்றியதால்) ஜனகன். மிதிலையை நிர்மாணித்தவன் இவனே. இவன் வம்சத்தில் தோன்றியவரே ஸீரத்வஜ ஜனகன்.

ஸீரம் என்றால் கலப்பை. யாகங்களுக்கு வேண்டிய தானியத்தை இவரே உழுது பயிரிட்டதால் இந்தப் பெயர். கலப்பையால் உழுகையில் சீதை தோன்றியதால் ஸீரத்வஜன் என்று கூறப்படுகிறார். இவர் ஆத்மஞானியாக இருந்தார். இவர் சபைக்கு யாக்ஞவல்க்யர், அஷ்டாவக்ரர் முதலியோர் வருகை தந்து பெருமை சேர்த்தனர்.

இதைக்கூறிய பின் சுகர் சந்திர வம்சத்தை வர்ணிக்கிறார். பிரம்மாவின் மானஸபுத்திரரான அத்ரியின் ஆனந்த கண்ணீரில் இருந்து தோன்றியவன் சந்திரன்.அவன் வேதியர்களுக்கும், செடிகொடிகள், நக்ஷத்திரக்கூட்டங்கள் ஔஷதிகள் இவைகளுக்கும் பிரம்மாவால் அதிபதியாக்கப்பட்டான்

. அவன் குருவான ப்ருஹஸ்பதியின் மனைவியை அபகரித்தான். அவளுக்கு பொன் போல பிரகாசிக்கும் புதன் பிறந்தான். புதன் இளையை மணந்தது முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. அவன் புத்திரன் புரூரவஸ். அவன் வம்சத்தில் தோன்றிய யயாதியின் பிள்ளையான யதுவின் வம்சமே கிருஷ்ணரின் வம்சமான யதுவம்சம்.

யயாதியின் சரித்திரம் பின் ஒரு அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment