Wednesday, May 22, 2019

Vishnu Sahasranama 363 to 375 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் -37

363. ஸர்வலக்ஷண லக்ஷண்ய: -எல்லா பிரமாணங்களினாலும் காட்டப்படுகிறவன்.

பிரமாணங்களாவன நான்கு வகைப்படும். ப்ரத்யக்ஷம் , நேரிடையாக அறிவது, அனுமானம் , தர்க்கரீதியாக அறிவது, உபமானம் , உதாரணத்தின் மூலம் அறிவது. சப்தம் , வேதப்ரமாணம் அல்லது (பெரியோர்கள்) வாக்கினால் அறிவது.

லக்ஷண்ய: என்றால் அறியப்படும் பொருள். பகவான் ஒருவன்தான் அறியவேண்டியவன் ஆதலால் லக்ஷண்ய: என்று சொல்லப்படுகிறான்.
பிரம்ம சாக்ஷாத்காரம் என்பது பிரத்யக்ஷத்தின் எல்லை . 
அநுமானம் என்பது எல்லாவற்றிற்கும் ஒரு ஆதி காரணம் இருக்க வேண்டும் என்று அறிந்து அந்தக் காரணமாக பகவானை அறிவது. 
உதாரணம் மூலம் எப்படி தெரிந்து கொள்து என்றால் அவனுக்கு சமமாக எதையுமே சொல்ல முடியாததால் உவமையே இல்லாதவன்தான் பகவான் என்று அறிவது. 
சப்தம் என்பது வேதம். பகவானைக் காட்டுவதால். உண்மையில் இந்த பிரபஞ்சம் முழுவதும் அவனை அறியும் லக்ஷணமாக உள்ளது. அவன் அந்தர்யாமியாகவும் ஸர்வவ்யாபியாகவும் எங்கும் இருப்பதால்.

364. லக்ஷ்மீவான் – லக்ஷ்மி எப்போதுவ் அவனிடம் இருப்பதால் லக்ஷ்மீவான் எனப்படுகிறான். ' அகலகில்லேன் இறையும் அலர்மேல் மங்கை உறைமார்பன்,'

365.ஸமிதிஞ்சய:- ஸமிதி ஜெயதே இதி ஸமிதிஞ்ஜய: 
ஸமிதி- போரில், ஜெயதே- வெல்பவன்
366. விக்ஷர:- விகத: க்ஷராத் இதி. க்ஷர என்றால் சிதைவு. பகவான் அழிவில்லாதவன் ஆகையால் விக்ஷர: தன்னை நாடியவர்களிடம் அழியாத அன்பு கொண்டவர்.

367. ரோஹித:- ரு என்றால் வளர்ச்சி . த்ரிவிக்ரமனாக வளர்ந்தவர் என்று பொருள். ரோஹித என்ற சொல் சிவப்பு வர்ணத்தையும் குறிக்கும். பகவானின் கண், கைகள் பாதங்கள் எல்லாமே தாமரை சிவப்பு. நாபியிலும் தாமரை.

ரோஹித என்பதற்கு இன்னொரு பொருள் மீன். அதனால் இதை மத்ஸ்யாவதாரத்தைக் குறிக்கும் நாமமாகவும் கொள்ளலாம்

368. மார்க்க: - மார்க்யதே இதி மார்க்க: - அடைய விரும்பப்படுகிறவர். அவரே வழியாகவும் அடையும் இலக்காகவும் உள்ளார்.

369. ஹேது: - அகில ஜகத்துக்கும் காரணமாக உள்ளவர்.

370. தாமோதர: தாம என்றால் கயிறு. உதரம் என்றால் வயிறு. வயிற்றில் கயிறு அணைந்து தாயால் உரலில் கட்டப்பட்டதால் தாமோதரன் என்ற பெயர்.

இன்னொரு பொருள் சங்கரரால் கூறப்படுகிறது. 
தமம் என்னும் தன்னடக்கம் முதலிய சாதனங்களால் சிறந்த புத்தியின் பயனாய் அறியப்படுபவர். தமாத் தாமோதரம் விது: (மஹா பாரதம்)

371. ஸஹ:-எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்பவர். வைதாரையும் வாழவைக்கும் இறைவன்.

372. மஹீதர: -மஹீம் பூமியை தாங்குபவர். பூபாரத்தை போக்கி பூமியை நிலை நிறுத்துகிறவர் . வனானி விஷ்ணுர் கிரயோ திசஸ்ச. விஷ்ணுவே காடுகள், மலைகள், திசைகள். ( விஷ்ணுபுராணம்)

373. மஹாபாக:- பெரும் பாக்கியம் பொருந்திய அவதாரங்களால் சிறந்தவர். ஹவிர்பாகங்களில் அதிகமான பங்கைப் பெறுபவர். ஆயர்பாடிப் பெண்களும் நப்பின்னைப்பிராட்டியும், திவ்ய கன்னிகைகள் பதினாறாயிரவரும், ருக்மிணி சத்யபாமா ஜாம்பவதி முதலியோர் தாமே வலிய வந்து வரிக்கும் பாக்கியம் உடையவர்.

374. வேகவான் – ஈசாவாஸ்ய உபநிஷத் – அநேஜதேகம் மனஸோ ஜவீய: அசையாமலே மனதைக்காட்டிலும் வேகமாய் செல்வது (பிரம்மம்)

காப்பதிலும் தண்டிப்பதிலும் அதீத வேகம் காட்டுபவர். த்வாரகையில் இருந்து குண்டினபுரம் (across to East end of India) ஒரே இரவில் சென்றாராம். கஜேந்திரனை ரட்சிக்க கருடனின் வேகம் போதாதென்று கருடன் பின் தொடர ஓடினாராம்.

தண்டிப்பதிலும் வேகம். கம்சன் அனுப்பிய எல்லா அசுரகளையும் ஓர் வினாடியில் அழித்தார்

375. அமிதாசன: - மிதம் என்றால் அளவுக்குட்பட்ட . அமிதம் என்றால் அளவில்லாத. அசனம் உட்கொள்வது. கோவர்தனபூஜையில் அவ்வளவு உணவையும் மலையின் தேவதை உருக்கொண்டு புசித்தான்.

பெரியாழ்வார் சொல்கிறார் . 
அட்டுக்குவிச்சோற்றுப் பருப்பதமும் தயிர்
வாவியும் நெய்யளரும் அடங்க பொட்டத்துற்று

கிருஷ்ணன் மலை என குவிந்த சோறு ஏரி என நிறைந்த தயிர் , ஆறாகஓடிய நெய் இவ்வளவையும் ஒரே நிமிடத்தில் உண்டானாம்.

பிரளயகாலத்தில் உலகம் முழுவதையும் உண்டதாலும் அமிதாசனன் ஆகிறான்.

  

No comments:

Post a Comment