Wednesday, May 22, 2019

Blessing a cook - periyavaa

உள்ளன்போடும் பரிசுத்தமான பக்தியோடும் செய்யும் ஒவ்வொரு செயலையும் பகவான் அறிவார் என்பதை ப்ரத்யட்ச தெய்வமான மகாபெரியவா உணரச் செய்த சம்பவம்

ஆசார்யாளை தரிசனம்  செய்ய ஸ்ரீமடத்துக்குச் செல்ல தீர்மானித்தனர்.

மகானுக்காக நீண்டதொரு எலுமிச்சம் பழம் மாலையைக் கோத்து எடுத்துக்கொண்டு போகலாம் என்று நினைத்த அவர்கள், அதற்காக 108 எலுமிச்சம் பழங்களை நல்லதாகப் பார்த்து பொறுக்கி எடுத்து வாங்கி வந்தார்கள்.

அந்தப் பழங்களை நீளமாக நல்ல நூலில் மாலையாகக் கோக்கும் வேலையை தங்கள் வீட்டு சமையல்கார மாமியிடம் ஒப்படைத்தார்கள்.

தான் கோக்கும் எலுமிச்சை மாலை மகாபெரியவளின் கழுத்தை அலங்கரிக்கப் போகிறது என்பதை அறிந்த அந்த மாமி, மிகவும் பக்தி சிரத்தையோடு ஒவ்வொரு பழமாக எடுத்து "ஓம் நமசிவாய.....ஓம் நமசிவாய.." என்று சொன்னபடி நூலில் கோத்து முடித்தார்.

மாலை மிகவும் நேர்த்தியாகத் தயாரானவுடன், அதையும் கனிவர்க்கம் புஷ்பம் என்று மேலும் சிலவற்றையும் எடுத்துக்கொண்டு, அந்தத் தம்பதியர், ஆசார்யாளைப் பார்க்கப் போனார்கள்.

அவர்களுடைய அதிரிஷ்டமோ என்னவோ அன்று கொஞ்சம் கூட்டம் குறைவாகவே இருந்ததில் எளிதில் தரிசனம் கிடைக்க, எல்லா திரவியங்களுடன் எலுமிச்சை மாலையையும் பக்தியுடன் அவர் முன்னே வைத்தார்கள்.

எலுமிச்சை மாலையை எடுத்து, இரு சுற்றாக தன கழுத்தில் அணிந்து கொண்டார்,ஆசார்யா.  அதை பார்த்து எல்லோரும் பரவசப்பட்டு நிற்க, மாலையை அணிந்துகொண்ட மகான், தன திருமுன் விழுந்து வணங்கிய தம்பதிக்கு ஆசி வழங்கினார். அவர்கள் பிரசாதத்திற்கு கைநீட்ட, குங்குமம், பழம் தந்தார், பரமாசார்யா.

வந்தவர்கள் நகர முயற்சிக்க, "சித்தே இருங்கோ, இதை ஓம் நமசிவாயா" மாமிக்குக்  குடுத்து, என் ஆசிர்வாதத்தைச் சொல்லுங்கோ!" என்று சொல்லி, கொஞ்சம் குங்குமத்தைக் கொடுத்தார் மகாபெரியவா.

தம்பதிக்கு அதைக் கேட்டதும் பெரும் வியப்பு! மாலையைக் கட்டிய மாமியின் பக்தியை, தாமாகவே அறிந்து, தயையுடன் ஆசி அளித்த ஆசார்யாளின் மகத்துவத்தை நினைத்து, ஆச்சரியப்பட்டார்கள் அவர்கள்.

உள்ளன்போடும் பரிசுத்தமான பக்தியோடும் செய்யும் ஒவ்வொரு செயலையும் பகவான் அறிவார் என்பதை ப்ரத்யட்ச தெய்வமான மகாபெரியவா உணரச் செய்த இன்னொரு சம்பவமும் உண்டு.

இதுவும் ஒரு வீட்டு சமையற்கார பெண்மணி சம்பத்தப்பட்ட சம்பவம்தான்.

மகாபெரியவாளின் பக்தர்கள், அவரது பிட்சாவந்தனத்திற்காக, அவரவரால் இயன்ற பொருளைக் கொண்டு வந்து ஸ்ரீமடத்தில் தருவது உண்டு.

அந்த மாதிரியான கைங்கரியத்திற்கு தங்களால் முடிஞ்சா சில பொருட்களைத் தரத் தீர்மானித்தார்கள் ஒரு தம்பதி. 

 அந்த பொருட்களை எல்லாம் மிகவும் ஆசாரமாக எடுத்து வைத்துக் கொண்டு புறப்படத் தயாரானார்கள். 

 அவற்றையெல்லாம் எடுத்துவைக்க அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார், அவர்கள் வீட்டு சமையற்காரப் பெண்மணி.

அவரும் மகாபெரியவாளைப் பற்றி அறிந்தவர்தான்.  பக்தி உள்ளவர்தான்.  மகானுடைய பிட்சாவந்தனத்திற்கு இவர்களைப்போல் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்று அவரது மனதுக்குள் பெருங்கவலை இருந்தது. என்றாலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்று பேசாமல் இருந்தாள்.

அப்போது, மகாபெரியவாளுக்கு சமர்ப்பிக்க என்று சில்லறை நாணயங்களாக ஒரு தொகையை தாம்பாளம் ஒன்றில் எடுத்துத் தயாராக வைத்தார்கள் அந்த தம்பதி.

 அப்போது அவர்கள் கவனிக்காத நிலையில், தன் இடுப்புச் சுருக்கில் இருந்து நாலணா ஒன்றை எடுத்து அந்த நாணயங்களோடு வைத்த சமையல்காரப் பெண்மணி, "பகவானே, எதோ என்னால முடிஞ்சதை செஞ்சிருக்கேன். இதையும் தயவு பண்ணி ஏத்துக்கணும்!".  என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டார்.

ஸ்ரீமடத்துக்குச் சென்ற அந்தத் தம்பதியர், கொண்டு சென்ற எல்லாவற்றையும் மகான் முன் வைத்தார்கள். எல்லாவற்றையும் பார்த்த ஆசார்யா, தாம்பாளத்தில் இருந்த காசை லேசாக அசைத்து, மேலாக வந்த ஒரு நாலணாவை எடுத்து தனியாக ஓரிடத்தில் வைத்தார்.

மகாபெரியவளின் செய்கையை எல்லோரும் வியப்புடன் பார்க்க, அந்தத் தம்பதிகளைப் பார்த்து, மகான் சொன்னார், "என்ன பார்க்கறேள்? உங்க வீட்டு சமையற்காரமாமி  கொடுத்த தங்கக் காசு என்னண்டை பத்திரமாக வந்து சேர்ந்ததுன்னு சொல்லுங்கோ" என்றார்.

அதைக் கேட்ட தம்பதியர் வியப்பில் ஆழ்ந்தனர். சமயல்கார மாமியிடம் ஏது தங்கக்காசு? அது எப்படி நாம குடுத்த காசுல சேர்ந்தது? இப்படியெல்லாம் சந்தேகம் வந்தாலும், மகானை வணங்கி ஆசிபெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.

வீட்டிற்கு வந்த தம்பதி, மகான் சொன்னதை சமையற்காரப் பெண்மணியிடம் அப்படியே சொன்னார்கள். 

மறு நிமிஷம், தான் செய்ததைச் சொன்ன அந்தப் பெண்மணி, "நான் கொடுத்த நாலணாவை தங்கக் காசுனு சொல்லி ஏத்துண்டரா அந்த  தயாபரன்!" என்று சொல்லி, காஞ்சிமகான் இருந்த திசை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

உண்மையான பக்தியின் வலிமையை உணர்ந்த அந்தத் தம்பதி, தங்களை ஆசிர்வதிக்கும் படி சமயற்கார மாமியின் பாதங்களில் விழுந்து வேண்டிக்கொண்டனர்!

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர.. 
ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..

No comments:

Post a Comment