Friday, May 31, 2019

Sholingur temple

தொண்டைநாட்டு திருப்பதிகள் 22 பதிவு  59

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை   01

      மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
     புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
     தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
     அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே (1731)
                           பெரிய திருமொழி 8-9-4
     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம் அரக்கோணம்
புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சோளசிம்மபுரம் எனவும், சோளிங்கர் எனவும் கடிகாசலம் எனவும்
வழங்கப்பெறும். 

வரலாறு 

     இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணமும் பாத்ம புராணமும் துணுக்குத்
துணுக்குத் தகவல்கள் தருகின்றன. 

     சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக
பெருமாள் காட்டின நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டுமென்ற ஆவலால்
இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர். அவர்கள் ஏன் இம்மலையைத்
தேர்ந்தெடுத்தனர் என்றால் முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர்
இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக்
குறித்து துதித்து பிரம்மரிசி பட்டம் பெற்றாராம். எனவே கடிகை நேரத்தில்
தாமும் நரசிம்ம மூர்த்தியைக் காணலாம் என்ற பேரவா காரணத்தால்
இம்மலையைத் தெரிவு செய்து தவமியற்றத் தொடங்கினர். 

     இஃதிவ்வாறிருக்க ஸ்ரீஇராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன்
வைகுண்டத்திற்கு எழுந்தருளுந் தருவாயில் தாமும் உடன்வருவதாக
ஆஞ்சநேயர் கூற, கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த
ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின் வைகுந்தம்
வருவாயாக என்று கூற, அவ்விதமே ஆஞ்சநேயனும் இம்மலை வந்து
சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில்
நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகட்கு பெருத்த இடையூறு விளைவிக்க
அவர்களொடு பொருது களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து
நிற்க ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க,
அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளுக்கு தடையற்ற 
நிலையை உண்டாக்குகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான்
நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான். 

     நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த பஜனம்
செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக ஆஞ்சநேயராக
மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை
வந்தடைவாயாக என்றருளி மறைந்தார். 

     இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்)
ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி அனுமனுக்கு
வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும் வரை அனுமனும்
கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு
இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ
உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம். 

மூலவர்

     யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே
திருமுக மண்டலம் 

தாயார்

     அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்) 

உற்சவர்

     பக்தவத்ஸ்ல பெருமாள் (தக்கான்) 

தீர்த்தம்

     அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம் 

விமானம்

     ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்)
ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும். 

காட்சி கண்டவர்கள் 

     ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள்

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை   திவ்யதேசம் தொடரும் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment