Friday, May 31, 2019

Kooshmanda Homam

#வேதம்_கூறும்_ஒரே_ஹோமம்

ஹோமங்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம், ஒன்று காம்யார்த்தமான ஹோமங்கள், அதாவது ஒரு குறிப்பிட்ட பலனை வேண்டிச் செய்வது, இரண்டாவது ப்ராயஸ்சித்த ஹோமங்கள், இங்கு நாம் சற்று விரிவாக பார்க்க போகும் கூஷ்மாண்ட ஹோமம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது என்று சொல்லாம்,
யாகம், ஹோமம் வித்தியாசம். யாகம் ஹோமம் இவை இரண்டும் ஒன்றல்ல, அக்னிஹோத்ர அக்னியில் செய்யப்படுவது யாகங்கள், (அஸ்வமேதம், ஸோம யாகம் வாஜபேயம் முதலியவை) யாகங்களை ஸ்ரௌத கர்மாக்கள் எனக் கூறுவர்,

ஏகாக்னியில், அதாவது ஔபாஸன அக்னியில் (அல்லது லௌகீ காக்னியில்) செய்யப்படும் அக்னி காரியங்கள் ஹோமங்கள் என குறிப்பிடலாம்,
ஹோமங்கள் ஸ்மார்த்த கார்மாக்கள் என அழைக்கப்படுகின்றன, பல ரிஷிகளும், மகான்களும் தங்களது தெய்வீக த்ருஷ்டியினால் தகுந்த ப்ரயோகங்களுடன் பல ஹோமங்களை நமக்கு தொகுத்து அருளியுள்ளார்,
எந்த ஹோமமும் வேதத்தில் நேரிடையாகச் சொல்லப் படவில்லை, கூஷ்மாண்டஹோமத்தை மட்டும்தான் வேதத்தில் நேரிடையாகச் சொல்லப்பட்டுள்ளது. கூஷ்மாண்ட ஹோம விவரங்கள் யஜுர் வேதத்தில் பொக்கிஷமாக அமைந்துள்ளது., தைத்தீரிய ஆரண்யக பாகத்தில், 2வது ப்ரஸ்னத்தில் கூஷ்மாண்ட விதிமுறைகள் உள்ளன,

#ஏன்? #எதற்கு?

பஞ்ச மஹா பாவத்திற்கு ஸமமான பலவிதமான பாபங்களை கூஷ்மாண்ட 
ஹோமத்தினால் தொலையும். சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் இது விஷயத்தில் கூறுவதை கேளுங்கள். "இந்த ஹோமத்தை உபநயனம், விவாஹம், முதலிய நல்ல கர்மாக்கள் செய்வதற்கு முன்தினம் செய்ய வேண்டும். இன்னும் எப்பொழுதாவது ஒருவன் தான் ஏதாவது பாபத்தை செய்துவிட்டேனோ, அதனால் தனக்கு  சுத்தமற்ற தன்மை வந்திருக்குமோ என சந்தேகப்பட்டால் அப்பொழுது இந்த ஹோமத்தை செய்யலாம் என்று வேதம் கூறுகிறது'.
பல பாபங்களை தொலைய வேண்டி பல மந்த்ரங்கள் இந்த ஹோமத்தில் காணக் கிடைக்கின்றன. என்னவெல்லாம் பாபங்கள் போகும் என நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா.? அவை இதோ

• தெய்வத்திற்கு கோபம் வரக்கூடிய தவறுகள்
• பிழைப்புக்காக (குடும்பம் நடத்துவதற்காக) வாக்கினால் சொல்லிய பொய்கள்.
• பிறரைப் பற்றி குற்றங்கூறி (கோள் மூட்டுவது) அதனால் ஏற்படும் பாபங்கள்.
• தாயின் கர்பத்தில் நாம் வாசம் செய்த சமயத்தில் நம்மை அறியாமலேயே நாம் தாய்க்கு ஏற்படத்திய இன்னல்களுக்கும், இந்த ஹோமத்தில் ப்ராயஸ்சித்தம் கிடைக்கின்றது. அது மட்டுமல்ல தாய் தகப்பனாருக்கு தெரிந்தோ, தெரியாமலேயோ நாம் ஏற்படத்திய மனவருத்தங்கள்.
• பல ரோகங்களை அளிக்கும் பாபங்கள்.
• கெட்ட நடத்தை முதலிய செயல்களால் ஏற்பட்ட பாபங்கள் 
• அலக்ஷ்மி (ஏழ்மை) ஏற்படுவதற்காக உள்ள பாபங்கள்
• பெரியவர்களை நீ என்று சொல்லியது, வைதிகாளை அல்லது ஆச்சார்யர்களை (குல குருமார்களை) அவமானப் படுத்தியது போன்ற பாபங்கள்.
• இப்படி ஏகபட்ட பாபங்கள் விலக வேண்டுமென இந்த ஹோமத்தில்
வேத மந்திரங்கள் மூலம் வேண்டப்படுகின்றது.

ஒருவர் கடன் வாங்கி கொண்டு கொடுக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்பட்டால், இந்த ஜன்மத்திலேயே நிறைய பொருள்களை அடைந்து அந்த கடனை கொடுக்கும் படியான நிலைமை அவனுக்கு ஏற்படுவதற்கு இந்த ஹோமம் வகை செய்யும். நல்ல சரீரம், நல்ல மனம் இந்த ஹோமத்தினால் அடையலாம். நமது யோக்யதையும் கூடும்.
கடல் கடந்து சென்று வந்தவர்களும், அந்த தோஷம் நீங்க, சுத்தியாக இப்போது கூஷ்மாண்ட ஹோமத்தை அனுஷ்டித்து வருகிறார்கள். இதுவும் ஏற்புடையதே.

#எப்படி_செய்வது?
பலன்களை அதிகம் தரவல்ல ஹோமமாக இருந்தாலும் இதைச் செய்வது மிகவும் சுலபம். அதிக எண்ணிக்கையில் ருத்விக்குகளோ, அதிக பணமோ இல்லாமலும் செய்யலாம். குறைந்தபட்சமாக ஆசார்யனைத் தவிர ஓரிருவர் இருந்தால் போதும். ஹோம த்ரவ்யங்களின் பட்டியலும் மிக நீளமாக இல்லாமலிருக்கலாம். (வசதியுள்ளவர்கள் விஸ்தாரமாகச் செய்ய வேண்டும், தானங்கள் உண்டு. அவை அவரவர்களின் சக்தியைப் பொறுத்தது)
கவனிக்க வேண்டிய விஷயம் மேலும் ஒன்று. கூஷ்மாண்ட ஹோமத்தில் பிரதான ஆஹூதிகளை தவிர ஹோம அங்கமாக பல கிரியைகள் அம்சங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக 
(1) தீக்ஷாநியமம், 
(2) முடிந்த அளவு அதிகமான எண்ணிக்கையில் காயத்ரி ஜபம்
(3) ப்ராத ஸ்நானம் 
(4) நாந்தீ சிரார்த்தம் 
ஆகியவைகளில் சிரத்தை அதிகம் காண்பித்தல் அவசியம், 

மற்றுமொரு விசேஷம்

பொதுவாக எல்லா ஹோமங்களிலும் ஸங்கல்பம் ஆனதும் வாத்யார் கர்த்தாவிடமிருந்து " ஆசார்ய வர்ணம்"(power of attorney) பெற்றுக் கொண்டு வந்திருக்கும் மற்ற சாஸ்திரிகளின் உதவியோடு கர்த்தாவின் சார்பில் அவரே ஹோமங்களை நடத்தித் தருவார். நாம் இதை அறிந்திருப்போம். ஆனால் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தில் வாத்யார் சொல்ல சொல்ல கர்த்தாவே நேரிடையாக ஔபாஸன அக்னியில் தானே  செய்ய வேண்டும்.
மொத்தத்தில் இது ஒரு சிரேஷ்டமான வைதீக கர்மா. மேன்மேலும் துக்கங்களை அளிக்கும் பாபங்கள் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தினால் விலகுகின்றன. சகல மங்களங்களும் உண்டாகும் மன சாந்தி உறுதி.
மேலும் விவரங்களை ஆத்து வாத்தியாரிடம்கேட்டு தெரிந்து கொண்டு 
செய்யவும்.

No comments:

Post a Comment