Wednesday, May 29, 2019

Biography of Periyavaa


மின்னஞ்சலில் வந்த பதிவு

ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் - 12/3 [ஶ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகள் - பெரியவாளின் பால்ய லூட்டி]

இப்போது, தன் பூர்வாஶ்ரம அண்ணாவைப் பற்றி 'எதேஶ்சையாக' ஸ்மரித்து, அவருக்கு முக்தி அளித்ததை அனுபவிப்போம்......

".....என்னோட அண்ணா கணபதி ஶாஸ்த்ரி, பேருக்கு ஏத்தா மாதிரி சதுர்த்திலதான் பொறந்தார். ஆனா, பிள்ளையாரை நெனச்சுண்டு கணபதி-ன்னு பேர் வெக்கல.! தாத்தாக்கு [ஹெஜீப்] அந்த பேர்தான்!

அதோட, தலைச்சன்-ங்கறதால, அந்த பேரையே அவருக்கு வெச்சது! ஆனா, அண்ணாவோட பேர் கணபதின்னாலும், ஆத்துல கூப்படற பேர் அது இல்ல.! தாத்தா பேரோன்னோ ! இந்த மாதிரி ஆத்துப் பெரியவாளோட பேரை வெச்சுட்டா... மத்தவா, அதுலயும் குறிப்பா, மாட்டுப்பொண்...! எங்கம்மா.... அப்டி கூப்படறது மர்யாதைக் கொறவு-ன்னு, வேற பேர் சொல்லிக் கூப்டறதுதானே வழக்கமாயிருக்கு?...

ஸ்வாமிமலை...... குலதெய்வங்கறதால.... 'எடச்சனுக்கு'....அந்த ஸ்வாமி பேர் வெச்சது.

[எடச்சன் வேற யார்? ஸாக்ஷாத் நம்ம கிணி என்ற ஸ்வாமிநாதன்தான்]

....எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வயஸு வித்யாஸம்!

ஒம்பது வயஸு வித்யாஸம் !

அவர் பொறந்து, ரொம்ப வர்ஷம் கொழந்தை இல்லியே-ன்னு 'வேண்டிண்டெல்லாம்கூட' இருந்திருக்கா! ......

[இல்லையா பின்னே!கஶ்யபர்-அதிதி, தஶரதர்-கௌஸல்யை,தேவகி-வஸுதேவர், ஹிமவான்-மைனாவதி, மலையத்வஜ பாண்டியன்-காஞ்சனமாலை, ஶிவகுரு-ஆர்யாம்பா என்று எல்லோரும் செய்த தபஸ் எல்லாம் ஒன்றாகி, ஶ்ரீமதி மஹாலக்ஷ்மி-ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகளுக்கு புத்ரனாகப் பிறக்க வேண்டுமே!]

ஏன்னா.... ஒரே பிள்ளை-ன்னா.... அவனுக்கு எப்போ, என்ன ஆகுமோங்கறதால, இன்னூண்ணு இருக்கணும்-னுவா ! வசனமே சொல்றதே...!..'ஒரு மரம் தோப்பாகாது, ஒரு பிள்ளை பிள்ளையாகாதுன்னு' சொல்லுவாளோல்லியோ?

அண்ணா.... வயஸுல ரொம்ப மூத்தவர்-னாலும், ஸமதையா நடத்துவார். கடலூர் மஞ்சகுப்பத்ல, ஸெயின்ட் ஜோஸப் காலேஜ்ல படிச்சிண்டிருந்தார்.

ஒரு ப்ராஹ்மண அம்மாகிட்ட ஸாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்துது.

லீவுக்கு ஆத்துக்கு வரச்சே, அந்த அம்மாவ பத்தி, அண்ணா.... கதை கதையா சொல்லுவார்......

அவ.... மஹா கோவக்காரியாம்! மங்களம்-னு பேராம்! 'பொங்கும் மங்களம் எங்கும் தங்குக' ன்னு அப்பவே கேள்விப்பட்ருந்தேன். இந்த மங்களம்மா, அண்ணாவுக்கு பொங்கி போட்டுண்டிருந்தவ, கோவத்துல கூட... ரொம்பவும் பொங்கிண்டிருந்தா-ங்கறதை வெச்சு, வேடிக்கை பேசுவோம்...

'போறும், போறும், நீ அவகிட்ட தங்கியிருக்கறதே! இந்த பொங்கும் மங்களம் எங்கியும் வேற தங்க வேண்டாம்" ன்னு தமாஷ் பண்ணுவோம்!

அப்போ எனக்கு பத்து வயஸுதான். ஸமதையா நடத்தினது அப்பத்தான்.

பின்னாள்ள.... மடத்து கார்யம்னா.... ரொம்ப பவ்யமா, ஶ்ரத்தையாவே பண்ணினார்.....

'முத்ராதிகாரி ஸ்கீம்' ஆரம்பிச்சப்போ.... அஞ்சாறு வர்ஷம், தஞ்சாவூர் ஜில்லா, த்ருஶ்னாப்பள்ளி [திருச்சிராப்பள்ளி] ஜில்லா பூரா... அதுக்காக நெறைய்ய ஓடியாடி ஒழச்சார்!

ஆதி நாள்ல, ஒரே ஆத்து மனுஷாளா இருக்கச்சேகூட, ஒரு ஸமயம் அப்டி [பெரியவாளிடம் பவ்யமாக] இருந்திருக்கார்....

த்ளாயிரத்து அஞ்சுல-ன்னு [1905 ] நெனைக்கறேன். நாங்க திண்டிவனத்ல இருந்தோம். ஒருநா... அண்ணா வெளியூர்லேர்ந்து ஆத்துக்கு வந்திருந்தார்....

ஸ்கூல் முடிஞ்சு, நா... ஆத்துக்கு திரும்பறச்சே, மணி ஏழுகூட ஆய்டறதுண்டு! ஏன்னா, வெளையாட்டு ஆசைதான்! அப்பல்லாம், கிரிகெட் வந்து... ஸ்கூல் பஸங்களோட வெளையாட்டா ஆகல!...

கிட்டிப்புள்தான் உண்டு ! அதை டெவெலப் பண்ணித்தான் வெள்ளக்காரா..... இப்போ..... கிரிகெட்டா ஆக்கியிருக்கா.....!

எனக்கு கிட்டிப்புள்ளுல interest-டே கெடையாது! Foot Ball-ல கொஞ்சம் இஷ்டம்.
ரொம்ப இஷ்டம்.... பாட்[bad]மின்டன்தான்! அது actual-லா, good-மின்டன்தான்.

[சிரிக்கிறார்]

ஆக்ருதி [உயரம்] போறாததால, ஒதைச்சு கிதைச்சு ஓடியாடி வெளையாடற football-க்கு த்ராணி போறல! அதுனாலதான்.... காலால ஆடற பந்துக்கு பதிலா.... பூ மாதிரி.... கைப்பந்து வெளையாட்ல போனது.....

பாட்மின்டன்கூட, நம்மூர்லேந்துதான் சீமைக்குப் போய், அந்தப் பேர் வாங்கித்து...ன்னுவா ! தெரியுமோல்லியோ?

நானும் அத.. வெளையாடுவேன். ஸ்கூல் முடிஞ்சாவிட்டு... பாட்மின்டன் ஆடிட்டுதான் ஆத்துக்கு வரது. நேரம் போறதே தெரியாம இழுத்துண்டு போய்டும்!.....

என்ன உத்ஸாகமான வெளையாட்டுன்னாலும்..... ஸந்தியை [ஸந்த்யாவந்தனம்] மறக்கறதில்ல! ப்ளே-க்ரவுண்ட் கிட்டக்க.... காவா [கால்வாய்] உண்டு. அஸ்தமிக்கறதுக்குள்ள அர்க்யம் குடுத்துடணு-ன்னு, பாதி வெளையாட்ல நிறுத்திட்டு, காவாய்க்கு போறது......

....Team-மா வெளையாடறதுனால, team-மாவே போய், கை கால் அலம்பிண்டு, நெத்திக்கு இட்டுண்டு ஸந்தி பண்றது. செல நாள்ள.... அப்றங்கூட நெழல் வெளிச்சம் இருந்தா..... மறுபடி கொஞ்சம் ஆடறது. கண்ணை கூ...ராக்கிண்டு பந்து தெரியறமட்டும் ஆடறது......

ஆத்துக்கு வரச்சே நன்னாவே இருட்டிப் போய்ருக்கும்!

எனக்கு அப்பத்தான் உபநயனம் ஆன புதுஸ்ஸா..? அதுனால, வேற.... தனிய்..யா அத்யயனம், அனுஷ்டானம்-னு எதுவும் இல்லாட்டாக் கூட, இந்த ஸந்தி ஒண்ணை மட்டும் கொஞ்சம் பிடிச்சுண்டது. ஸம்ஸ்க்ருத ட்யூஷனுக்குப் போய், ப்ரஹ்மச்சாரிகள் கத்துக்கற பாடங்களை கத்துண்டேன்....

காலங்கார்த்தாலே பழேத்த [பழைய ஸாதம்] ஸாப்ட்டுட்டு.... ஒரு அவஸரக் குளியல் போட்டுட்டு, ஸம்ஸ்க்ருத க்ளாஸ் போய்ட்டு, அப்றம் ஆத்துக்கு வந்து tiffin-னா.... ஸாப்பாடா-ன்னு ஞாபகம் இல்ல.... ஸாப்டுட்டு ஸ்கூலுக்கு போவேன்.....

........ஆத்துல அடஞ்சுண்டு ஸந்தி பண்ணாம, ஆகாஶம் பாக்க, தெறந்த வெளில பண்றதுல... ஒரு ஸௌக்யம் இருக்குன்னுட்டு, ஒண்ணு ரெண்டு க்ருஹஸ்தா, காவாக்கரைக்கு வந்து பண்ணுவா! அதுனால..... அவாட்ட விபூதி வாங்கி இட்டுக்கறது.

அனேகமா.... பூண [ல்] போட்டாச்சுன்னா, 'ஸோமன்' [வேஷ்டி] கட்டிண்டுதான் ஸ்கூலுக்கு போறது. வேஷ்டியை மடிச்சுக் கட்டிண்டோ, கீழ்ப்பாச்சு கட்டிண்டோதான் வெளையாடறது, மரத்ல ஏறர்து ! எல்லாங்கூட !...

[அழகாகச் சிரிக்கிறார்]

.....கவர்னர், கலெக்டர் மாதிரி யாராவது 'தொரே' [துரை] ஊருக்கு வந்தா.. ஸ்கூல் பூரா... அவாளைப் பாக்கப் போறச்சே, sports day நடத்தறச்சே, D.E.O மாதிரி Education Department அதிகாரிகள் ஸ்கூல்ல inspection வரச்சே, இன்னும் செல நாள்ல மட்டும் நெஜார் போட்டுண்டு போறது...

....நெஜாரோ, ஸோமனோ, எதுவானாலும் அதையும், சட்டையையும், ஸ்கூல் 'விழுப்பு' கூடாது-ன்னு அவுத்து வெச்சுட்டு, வெறும் கோமணத்தோடதான் ஸந்தி பண்ணறது. மலையாளத்ல அப்டித்தான் ஆசாரமே! ப்ரஹ்மச்சாரி பஸங்க, வெறும் கௌபீனதாரியாத்தான் அத்யயனம் பண்ணணுன்னு ! இப்பவும் அப்டித்தான் நடக்கறது. ஆசார்யாள்கூட அப்டித்தான் பண்ணியிருப்பாளா இருக்கும்..!....

[2500 வர்ஷங்களுக்கு முன், காலடியில்... பாலஶங்கரன் ஸந்தி பண்ணிய அழகை, அன்று விழுப்புரத்தில், நம் கிணி.... ஸந்தி பண்ணியபோது.... காவாய்கரையோரம் ஸந்தி பண்ணிக் கொண்டிருந்த ப்ராஹ்மணோத்தமர்களும், நண்பர் பட்டாளமும், குடியானவ ஜனங்களும் கட்டாயம் அனுபவித்திருப்பார்கள்]

..... அப்டித்தான்... அன்னிக்கி அண்ணா வந்திருக்கச்சேயும், நா.... வெளையாடிட்டு, வெளில ஸந்தி முடிச்சுட்டு, நன்னா இருட்டினாவிட்டு ஆத்துக்கு வந்து சேந்தேனா.....? அவருக்கு மஹாக் கோவம் வந்துடுத்து !...

"பெரிய்...ய தொரே... ! ஆடிப்பாடிண்டு... இருட்டி, ஏழு ஜாமத்துக்கு வரே? தண்டத்துக்கா ஒனக்கு உபநயனம் பண்ணித்து? ஸந்தியை விட்டுட்டு அப்டி என்ன வெளையாட்டு? ஹா.....ஹூ....ன்னு அதம்பிண்டு ஏகமா பேசிட்டார்!....

[பேசியதோடு இல்லாமல், ஒரு அடியும் குடுத்துவிட்டார் என்று இந்த பாலகாண்டம் அறிந்த பெரியோர் கூறினர்.]

பண்ணாத தப்பை சொல்றானே-ன்னு... எனக்கு ரோஷம் தாங்கல! ஆத்ல ரொம்ப செல்லம் வேறயா? அம்மா-அப்பா... அதுந்து [அதிர்ந்து] ஒரு வார்த்தை சொன்னதில்ல....! அதுனால, பொத்துண்டு வந்துடுத்து! கண்ணை பொத்துண்டு ஜலம் கொட்ட ஆரம்பிச்சுடுத்து! ஆனா, என்னவோ, வாய்லேர்ந்து வார்த்தையை கொட்டிடல!....

'காலத்ல ஸந்தி பண்ணாம விடலாமா-ங்கற நல்ல எண்ணத்லதான கோவிச்சுக்கறா'ங்கறது தெரிஞ்சாலும் கூட, 'நம்ம மேல, இல்லாத குத்தம் எடுக்கறானே'-ன்னு கோவம் வரத்தான் வந்துது! அத அடக்கிண்டு நாலு வார்த்தை கேட்டேன்.....

" டயத்துக்கு ஸந்தி பண்ணணு-ன்னு எனக்கும் தெரியும். காவா-ல பண்ணிட்டுத்தான் வரேன்! நா... வரதுக்கு முந்தி, காலம் தப்பிப்போச்சேன்னு... ஒனக்கு கோவம் வரது ஞாயந்தான்! ஆனா, வந்தாவிட்டு, ஆளக் கூட ஸெரியா பாக்காம, நிதானம் தப்பி பேசினா எப்டி? நெத்தியை பாத்தா தெரியலியா?."..ன்னேன்......

[ஆஹா! இந்த இடத்தில் என் கண் முன்னால், நம் குட்டிக்கிணி, நாலு முழம் ஸோமனைக் கட்டிக் கொண்டு, இடது கையில் பாட்மின்டன் ராக்கெட்டை இடுக்கிக் கொண்டு, அண்ணாவிடம், மஹா ரோஷத்தோடு, ஒரு எட்டு, முன்னால் வந்து, வலது கையால் தன் முன் நெத்தியை, தன் கையால் நன்றாக விலக்கிக் காட்டிய அழகான காட்சிதான் தெரிகிறது]

இவ்ளோதான்... நா... சொன்னேன்!

அண்ணா.... வயஸுல நன்னாவே மூத்தவர்! திட்ட, அடிக்க, எதுவும் பண்ண 'ரைட்' இருக்கறவர்......! என்னவோ பண்ணப்டாத மஹா தப்பு பண்ணிட்டா மாதிரி சட்னு ரொம்ப feel பண்ணிட்டார்..!

[இதுவரை, ஒரே சிரிப்புடன், தான் அடித்த லூட்டிகளை சொல்லிக் கொண்டே வந்தவர், அண்ணாவைப் பற்றி இதைச் சொல்லி முடித்ததும் குரல் நன்றாக மாறி தழதழன்னு போய்டுத்து.]

....இந்த நாளாட்டம்.. பெரியவா சின்னவா வித்யாஸம் இல்லாம, எடுத்ததுக்கெல்லாம் "எக்ஸ்க்யுஸ் மி" ன்னு சொல்லற வழக்கம்லாம்.. அப்ப கெடையாது. Feeling இருக்கணும்-னே இல்லாம, சும்மா ஒரு courtesy-க்காக இப்டி சொல்றதா.... இப்போ இருக்கு.....

.....அண்ணாவுக்கு அத்தனை feeling ! எத்தன-ன்னு நேர்ல பாத்த, எனக்குத்தான் தெரியும்! அம்பத்தஞ்சு வர்ஷம் கழிச்சும், இப்பவும், மனஸுல நிக்கற அளவுக்கு feeling இருந்தும், அவர் எதுவுமே சொல்லாம, அதுக்கும் எத்தனையோ மேல.. என்ன சொன்னார்னா.....

"ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிடறேம்ப்பா"ன்னார்!

அப்டியே பண்ணினார்! மனஸெல்லாம் கொழைஞ்சு சொன்னார்..! சொல்லிட்டு அப்டியே பண்ணினார் .....!

நா..... சொல்ல வேண்டியதை பட்னு சொல்லிட்டாலும், அதுனால, அவர் அப்டியே...... மாறிப் போய்டுவார்-னு நெனக்கல! ஆனா, என்ன ஆச்சுன்னா.... அவர் ஒரேயடியாப் பஶ்சாதாபப்பட்டுண்டு, மனஸை விட்டே சொல்லவும் சொல்லிட்டார்!

"ஸ்வாமிநாதா! நம்ம பெரியவாள்ளாம் அனுஷ்டாதாக்களா [நன்கு அனுஷ்டிப்பவர்களாக] இருந்த ஒஸத்தில.. எல்லாம் போயி...... இந்த ஸந்தி ஒண்ணுதான் மிஞ்சியிருக்கு! இதையும் நஷ்டப்படுத்திண்டா... இந்தாத்துல பொறந்ததுக்கு ரொம்ப கொறைவுங்கற எண்ணத்லதான் கோவம் வந்துடுத்து! ஆனாலும்... தீரப் பாக்காம... நிதானம் தப்பி ஒன்னை வெஸ்ஸது [திட்டியது] தப்புத்தான்! ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிடறேம்பா!...ன்னு சொல்லி, அதும்படியே பூஜக்கட்டுக்கு போய்ப் பண்ணினார்...!

'நம்ம பெரியவாள்ளாம்' ன்னு அவர் சொன்னது... ஆத்துல முன் தலமொறைல இருந்தவாளத்தான்! அப்பா, அம்மாவோட பூர்வீகாள்ளாம் நன்னாவே வேதாப்யாஸ, அனுஷ்டானங்களோட இருந்துண்டு, மடத்துக்குன்னே.. கைங்கர்யம் பண்ணிண்டு இருந்திருக்கா! அப்பாவோட நாள்ளதான், இங்க்லீஷ் படிப்பு, உத்யோஹம்-னு போனது. எங்காத்ல வைதீக ஸொத்தா வந்திருந்தது..... ஸந்தி ஒண்ணுதான்! அதை நெனச்சுதான் அண்ணா சொன்னது...."

இதை சொல்லும்போது பெரியவாளும் குழைந்தே போனார். கண்களும் குழைந்தன..! அதில் கண்ணீர் லேஸாக தளும்ப இருந்தது!

'டக்'கென்று ஸுதாரித்துக் கொண்டார்.

கண்ணீர் கீழே விழுந்து விடாமல், முகத்தை நிமிர்த்தி கொண்டு "தேன், தேன் !" என்று கேட்டார். நொடியில் தேன் வந்தது. கண்களில் தேன் துளிகளை இட்டுக் கொண்டார். கடத்திலிருந்து நீர் சரித்து கண்களை அலம்பிக்கொண்டார்.

மஹாத்மாக்களின் கண்ணீர், பூமியில் விழுந்தால், ஸர்வ நாஶம்! என்பதை ஶாஸ்த்ரம் படித்தவர்கள் சொன்னார்கள்.

மஹாத்மாக்கள் மட்டுந்தான், தங்கள் துக்கத்திலும் கூட, லோகக்ஷேமத்தை மட்டுமே பார்ப்பார்கள் என்பதுதான் ஸத்யம்!

No comments:

Post a Comment