Wednesday, May 29, 2019

Mahalakshmi is the bridge between Jivatama & Paramatma

By Chandra Seshadri
ராமாயணத்திலே லட்சுமி பிராட்டியாரின் வைபவம் அழகாக வர்ணிக்கப்படுகிறது. அதை அனுபவிக்கும் முன், பிராட்டியின் இன்னும் சில குணங்களைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமாளின் ஒரு கண் கும்பகர்ணனையும், ராவணனையும் பார்க்கிறது. இன்னொரு கண் விதுரன், சஞ்சயன் போன்ற மகாத்மாக்களையும் காண்கிறது. ஒரு பக்கம் சண்டைக்காரர்கள், இன்னொரு பக்கம் ரசிகத்தன்மை. இவ்வாறு, அவர் ரசிக்கக் கற்றுக் கொண்டது பிராட்டியிடத்தில் தான். ஸ்ரீமகாலட்சுமி தாயார் பள்ளியில் படித்த ஒரே மாணவன் பெருமாள் மட்டும் தான்.
அவள் பெருமாளிடம் நம்பிக்கையுடன் பேசுவாள்.
நம்மிடம் நம்பிக்கையில்லாமல் பேசுவாள். பெருமாளுக்கும், பிராட்டிக்கும் ஒருவர் மீது ஒருவர் வைத்த நம்பிக்கையின் அளவு சமமானது. ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டில் நந்தகோபன், யசோதை, கண்ணன் ஆகியோர் வரிசையாகப் படுத்திருப்பார்கள். இதில் நடுவில் இருப்பவள் யசோதை. அவளது ஒரு கை நந்தகோபன் மீது இருக்கும். இன்னொரு கை, கண்ணன் படுத்திருக்கும்
தொட்டில் மீது இருக்கும். கட்டிலுக்கும், தொட்டிலுக்கும் பாலமாக இருப்பவள் அவள். அதுபோல் ஜீவாத்மா என்ற தொட்டில் கயிறு லட்சுமி பிராட்டியின் ஒரு கையில், பரமாத்மா என்கிற திருமால் மீது ஒரு கை. இந்த இருவரையும் இணைக்க அவள் முயற்சி செய்கிறாள்.
ஓம்காரத்தின் நடுவிலும் அவள் தான் இருக்கிறாள். "ஓம்' என்பதை அகரம், உகரம், மகரம் (அ,உ, ம) என்று பிரிப்பர். இதில் அகரம் என்பது பரமாத்மா. உகரம் லட்சுமி தாயார். மகரம் ஜீவாத்மா.
பரமாத்மாவையும், ஜீவாத்மாவையும் சேர்த்து வைக்க அவள் பாடுபடுகிறாள். ஜீவாத்மா செய்த பாவத்தால் பரமாத்மா கோபமாக இருக்கிறார். இந்த கோபத்தையும், பாவத்தையும் அவள் நடுவில் இருந்து மாற்றுகிறாள். உபதேசம் மூலம் இருவரையுமே திருத்தப் பார்ப்பாள். திருத்த முடியாவிட்டால், தன் பார்வை கடாட்சத்தால் இருதரப்பையும் திருத்தி விடுவாள்.
புருவத்தை நெளிப்பாள், கண்ஜாடை காட்டுவாள்...! இதை நமது லவுகீக வாழ்வுடன் ஒப்பிடக்கூடாது. லட்சுமி தாயார் இப்படியெல்லாம் செய்து தானா பரமாத்மாவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று நம் சாமானிய வாழ்க்கையைக் கொண்டு கணக்கு போட்டு விடக்கூடாது.
கங்கைக்கரையில் பரிசல் இருக்கும். அக்கரைக்கு கொண்டு விடச்சொல்லி கரையில் வைத்து கூலி பேசினால், பரிசல்காரன்
""இஷ்டப்பட்டதைக் கொடுங்க!'' என்று சொல்லி ஏற்றி விடுவான். நடு ஆற்றிற்கு போன பிறகு தான். ""உங்களுக்கு நீச்சல் தெரியுமா?'' எனக் கேட்பான். அப்போது, அவனது கேள்வியைப் புரிந்து கொண்டு கூலி நிர்ணயமாகும். நீச்சல் தெரியும் என்றால் ஒரு கட்டணம். தெரியாது என்றால் இன்னொரு கட்டணம். அப்போது, அவன் கேட்டதைக் கொடுத்து தான் ஆக வேண்டும்.
அதுபோலத் தான் தாயாரும்! பெருமாள் அவளது பார்வையில் மயங்கிக் கிடக்கும் போது, அவள் ஜீவாத்மாவை கரைத்தேற்றுவது குறித்து பேசுவாள். நம் உலக வழக்கில், கணவனிடம் மனைவி இப்படி கேட்பது என்பது, ஏதாவது சுயநலம் கருதி! ஆனால், ஜீவாத்மாக்களின் நன்மை கருதி, தாயார் பெருமாளிடம் கேட்கிறாள். இதை தேக ரீதியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆத்மா, பரமாத்மா சம்பந்தம் என்று எண்ண வேண்டும். பரமாத்மாவிடம் அழகையும், ஜீவாத்மாவிடம் அருளையும் காட்டி அவள் திருத்துவாள்.

No comments:

Post a Comment